பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் அண்ணாமலை பெயர் அழிக்கப்பட்டதா? உண்மை என்ன?
சென்னை: பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் ஒரு மனதாக இன்று மாலை தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில், இதுவரை தலைவராக இருந்த அண்ணாமலையின் பெயர் பலகை அழிக்கப்பட்டதாக வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகிறது. ஆனால் அப்படி பரவும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வதந்தி என்பது தெரியவந்துள்ளது.இதுபற்றி பார்ப்போம்.
தமிழக பாஜகவில் மாநில தலைவர் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இவ்விரு பதவிகளுக்கு போட்டியிடுபவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என தமிழக பாஜக தேர்தல் அதிகாரி எம்.சக்கரவர்த்தி அறிவித்திருந்தார். இதற்கான, விருப்பமனுக்களை இன்று மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை போட்டியிட விருப்பமுள்ளவர்கள் தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நெல்லை தொகுதி எம்எல்ஏவான நயினார் நாகேந்திரன், பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கு விருப்பமனு தாக்கல் செய்தார். அவருக்காக மாநில தலைவர் தேர்தலில் போட்டியிட பாஜகவில் சேர்ந்து 10ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும் என்ற நிபந்தனை தளர்த்தப்பட்டது. நயினார் நாகேந்திரன் பெயரை ஹெச் ராஜா, அண்ணாமலை ஆகியோர் முன்மொழிந்தனர்.
அவரைத் தவிர, மாநிலத் தலைவர் பதவிக்கு வேறு யாரும் விருப்பமனு அளிக்காததால், போட்டியின்றி அப்பதவிக்கு அவர் தேர்வு செய்யப்படுவதாக கட்சியின் தேர்தல் அதிகாரி எம்.சக்கரவர்த்தி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதையடுத்து, தமிழக பாஜகவின் 13-வது மாநிலத் தலைவராக நயினார் நாகேந்தரன் நாளை பதவியேற்பார் என்றும். இது குறித்து நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே நயினார் நாகேந்திரன் தலைவராக பொறுப்பேற்ற உடனேயே, திநகரில் உள்ள பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்தில், பாஜக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.. இந்நிலையில் அண்ணாமலை கமலாலயத்தில், இதுவரை தலைவராக இருந்த அண்ணாமலையின் பெயர் பலகை அழிக்கப்பட்டதாக வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகிறது.

இதை உண்மை என்று பெரிய ஊடகங்களே தவறாக செய்திகளை வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தின் பெயரில் கார்டு ஒன்றில் கமலாலயத்தில் அண்ணாமலையின் பெயர் பொறுத்திய பலகை அழிக்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. இதன் உண்மை தன்மை குறித்து பாஜக நிர்வாகிகளிடம் விசாரித்த போது, பொய் என்பது தெரியவந்தது. பாஜக மாநில செயலாளர் எஸ்ஜி சூர்யா, இது பொய் என்று கூறியதுடன், உண்மை என்ன என்று வீடியோவும் வெளியிட்டுள்ளார். அதில் ரிப்ளக்சனை சிலர் தவறாக புரிந்து கொண்டு அண்ணாமலை பெயர் அழிக்கப்பட்டதாக பொய்யான தகவலை பரப்புவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Fact Check
வெளியான செய்தி
தலைவர் பொறுப்பில் இருந்து மாறுவதால், பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தின் பெயரில் கார்டு ஒன்றில் பாஜக மாநில தலைமையகமாக கமலாலயத்தில் அண்ணாமலையின் பெயர் பொறுத்திய பலகை அழிக்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது.
முடிவு
பாஜக மாநில செயலாளர் எஸ்ஜி சூர்யா, இது பொய் என்று கூறியதுடன், வீடியோவில் வரும் ரிப்ளக்சனை சிலர் தவறாக புரிந்து கொண்டு அண்ணாமலை பெயர் அழிக்கப்பட்டதாக வதந்தி பரப்புவதாக விளக்கம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications