தமிழ்நாட்டில் சூரியனே உதிக்காத கிராமம் நீலகிரி மாவட்டம் கிண்ணக்கொரையா? உண்மை என்ன?
ஊட்டி: நீலகிரி மாவட்டம் என்பது முற்றிலும் மலைப்பகுதியில் அமைந்துள்ள மாவட்டம் ஆகும். இங்குள்ள கிண்ணக்கொரை என்ற கிராமம் தமிழ்நாட்டில் சூரியனே உதிக்காத கிராமம் என்று சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது. அங்கு பெரும்பாலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சூரியன் உதித்தாலும்,அந்த சூரிய ஒளி அடர்ந்த மரங்களால் தடுக்கப்படும் என்று வதந்தி பரப்புகிறார்கள். இதன் உண்மை தன்மை என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம், குந்தா வட்டத்தில் அமைந்த கிண்ணக்கொரை கிராமம், ஊட்டிக்கு தென்கிழக்கே 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இப்பகுதியில் தேயிலை தோட்டங்கள் அதிகம் நிறைந்த பகுதியாகும். மஞ்சூரிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. நீலகிரி மாவட்டத்தை சுற்றி பார்க்க வரும் பலருக்கும் இந்த கிராமம் மிகவும் பிடிக்கும். நீலகிரி மாவட்டத்தின் கடைசி கிராமம் என்று சொல்லப்படும் இந்த கிண்ணக்கொரை தமிழ்நாட்டின் கடைசி எல்லையாகவும் பார்க்கப்படுகிறது.

குந்தா அருகே கிராமம்
குந்தா அருகே உள்ள மிக அழகிய மலை கிராமமான 'கிண்ணக்கொரை' செல்லும் சாலை மிகவும் அற்புதமாக இருக்கும். வழி நெடுகிலும் தேயிலைத் தோட்டங்கள், காடுகள், பனிமூட்டம் நிறைந்த மலைகள் என மிகவும் ரம்மியமாக இருக்கும். பொதுவாக இந்த கிராமத்திற்கு செல்ல இரண்டு வழிகள் உள்ளன. முத்தொரை பாலடா, லவ்டேல் அதிகரட்டி என இரு பாதைகள் வழியாகவும் இந்த கிராமத்திற்கு போக முடியும் என்கிறார்கள் சுற்றுலா பயணிகள். காரில் செல்வதைவிட, இருசக்கர வாகனத்தில் இந்த பாதையில் செல்பவர்கள் அதிகம் என்றும் சுற்றுலா பயணிகள் கூறுகிறார்கள்.
கிண்ணங்கொரை எப்படி போகலாம்
நீலகிரி மலையின் அழகிய வளைவுகள், சுத்தமான காற்று, மனதிற்கு பிடித்த ரம்மியான பசுமையான காட்சிகள், மிக அடர்ந்த வனப்பகுதி, காற்றில் கலந்து வீசும் மண் வாசம், அவ்வப்போது வந்து உடைகளை சிலிர்க்க வைக்கும் மேக கூட்டங்கள் மற்றும் பனிமூட்டங்கள், மலை உச்சியில் இருந்து இன்னொரு மலை உச்சியை ரசிக்க வைக்கும் காட்சி முனைகள் எல்லாமே உங்களுக்கு பேரானந்தத்தை தரும். ஆனால் அதிகப்படியான வளைவுகள் மற்றும் கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட இடம் என்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக செல்ல வேண்டும். அதேபோல் வனவிலங்கு ஆபத்துகளும் இருப்பதால் உள்ளூர் நிலவரம் அறிந்து தான் செல்ல வேண்டும்.இங்கு செல்ல அரசு பேருந்தும் உள்ளது. தினசரி நான்கு முறை இயக்கப்படும். அரசு பேருந்திலும் செல்லலாம்.
வதந்தி
இந்நிலையில் கிண்ணக்கொரை கிராமத்தை சிலர் தமிழ்நாட்டில் சூரியனே உதிக்காத கிராமம் என்று வதந்தி பரப்புகிறார்கள். சூரியன் உதிக்காத கிராமம் என்று எதுவுமே இல்லை.. சூரிய உதயமே தெரியாத பகுதி என்று தமிழகத்தில் எங்குமே கிடையாது. கிண்ணக்கொரை கிராமத்தை பொறுத்தவரை அதிகப்படியான மேகக்கூட்டங்கள் அவ்வப்போது வந்து செல்லும். மேலும் அடர்ந்த வனப்பகுதியாகும். இதனால் சூரிய ஒளி சில நேரங்களில் பெரிய அளவில் இருக்காது. ஆனால் எப்போதுமே சூரிய ஒளி இருக்காது என்பது போல் பரவுவது வதந்தி ஆகும்.
வேண்டாம் விட்டுவிடுங்கள்
கிண்ணங்கொரை கிராமம் போல் பல அற்புதமான மலை கிராமங்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ளன. ஆனால் வனவிலங்குகள் நடமாட்டம் அங்கு அதிகமாக இருக்கும். இயற்கையை ரசிக்கிறேன் என்று கூறி, மக்களுக்கு தெரியாத அடர்ந்த வனப்பகுதிகளில் சென்று புகைப்படம் வீடியோடு எடுத்து போட்டு வனவிலங்குகளையும் உள்ளூர் மக்களையும் அசவுகரியத்திற்கு ஆளாக்காமல் இருப்பதே சுற்றுலா பயணிகளுக்கு நல்லது.

Fact Check
வெளியான செய்தி
பரவும் செய்தி : நீலகிரி கிண்ணக்கொரை கிராமம் தமிழ்நாட்டில் சூரியனே உதிக்காத கிராமம் என்றும், அங்கு சூரியன் உதித்தாலும்,அந்த சூரிய ஒளி அடர்ந்த மரங்களால் தடுக்கப்படும் என்று தகவல் பரவுகிறது
முடிவு
முடிவு : கிண்ணக்கொரை கிராமத்தை பொறுத்தவரை அதிகப்படியான மேகக்கூட்டங்கள் அவ்வப்போது வந்து செல்லும். அடர்ந்த வனப்பகுதியாகும். இதனால் சூரிய ஒளி சில நேரம் குறைவாக இருக்கும்.












Click it and Unblock the Notifications