என்னது ரபேல் வாட்ச்.. ரபேல் விமான பாகத்தில் செய்ததா? அண்ணாமலை சொன்னது பொய்யா? உண்மை என்ன?
சென்னை: தான் கட்டி இருக்கும் ரபேல் வாட்ச் ரபேல் விமானத்தின் பாகங்களால் செய்யப்பட்ட வாட்ச் என்று அண்ணாமலை சொன்னது விமர்சனங்களை சந்தித்து உள்ளது.
பாஜக தலைவர் அண்ணாமலையின் வாட்ச் விவகாரம் பெரிய சர்ச்சை ஆகி உள்ளது. பாஜக தலைவர் அண்ணாமலை கையில் ஒரு வாட்ச் வைத்து இருக்கிறார்.
அந்த வாட்சின் விலை 3 - 4 லட்சம் ரூபாய் என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. இதுதான் அவரின் வாட்ச் சர்ச்சைக்கு காரணம் ஆகி உள்ளது.

அண்ணாமலை விளக்கம்
இது தொடர்பாக விளக்கம் அளித்த அண்ணாமலை, இந்திய ராணுவத்தின் ரபேல் விமானம் எனக்கு மிகவும் பிடித்தமானது. அதை ஓட்டும் பாக்கியம்தான் எனக்கு கிடைக்கவில்லை. ஆனால் அதை வைத்து உருவாக்கப்பட்ட வாட்சை அணியும் பாக்கியம் கிடைத்து உள்ளது. எனக்கு இது போதும். நான் தேசியவாதி அதனால் இந்த வாட்சை அணிகிறேன். இதை வைத்து பிரிவினைவாதிகள்தான் சர்ச்சை செய்வார்கள். உலகில் இது போல 500 வாட்ச்கள்தான் உள்ளது. இதில் என்னுடைய வாட்ச் 149ஆவது வாட்ச்சாகும். அது ஒரு கலெக்டட் எடிஷன், ஸ்பெஷல் எடிஷன்.

என்ன சொன்னார்?
இந்தியாவிடம் சீனா வாலாட்ட நினைக்கிறது. இதற்கு காரணம் ரபேல் விமானங்கள், ரபேல் விமானங்கள் வந்த பின் நம்முடைய போர் வியூகங்கள் மாறி உள்ளன. நான் கட்டி இருக்கும் வாட்ச் ரபேல் விமான பாகங்களை வைத்து செய்தது. ரபேல் விமான பாகங்களை வைத்து 500 வாட்சுகளை செய்தார்கள். இது சிறப்புப் பதிப்பு. உலகில் 500 பேரிடம் மட்டுமே இந்த வாட்ச் இருக்கிறது. அதில் ஒன்று என்னிடம் இருக்கிறது. அந்த விமானத்தில் உள்ள பாகங்கள் இதில் இருக்கும். இதை நானா உயிருள்ள வரை கட்டி இருப்பேன், என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.

விமர்சனம்
இத்தனை லட்சம் ரூபாய்க்கு அண்ணாமலை வாட்ச் வாங்கியது எப்படி. வாட்ச் வாங்கவே இவ்வளவு காசு இருக்கிறது என்றால், அவரிடம் எவ்வளவு காசு இருக்கும். இவர்தான் ஏழை விவசாய குடும்பத்தை சேர்ந்தவரா? என்ன கதை சொல்கிறாரா? என்று நெட்டிசன்கள், திமுகவினர் பலர் பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தனர். அதே சமயம் தான் கட்டி இருக்கும் ரபேல் வாட்ச் ரபேல் விமானத்தின் பாகங்களால் செய்யப்பட்ட வாட்ச் என்று அண்ணாமலை சொன்னது விமர்சனங்களை சந்தித்து உள்ளது. அவர் சொல்வது போல இந்த வாட்ச் ரபேல் பாகங்களால் செய்யப்பட்டது கிடையாது.

உண்மை என்ன?
ரபேல் என்பது பிரான்ஸ் நாட்டின் போர் விமானம் ஆகும். டஸால்ட் நிறுவனத்தின் இந்த போர் விமானத்தைதான் இந்தியாவும் பயன்படுத்தி வருகிறது. டஸால்ட் நிறுவனத்தின் போர் விமானங்களை பறைசாற்றும் விதமாக பெல் அண்ட் ராஸ் நிறுவனம் நிறைய வாட்ச் சீரிஸ்களை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் பல்கான் போர் விமானத்தை பாராட்டும் விதமாக அதன் 50ம் ஆண்டு விழாவில் பல்கான் போர் விமான மாடல் வாட்சை பெல் அண்ட் ராஸ் நிறுவனம் வெளியிட்டது. அதன்பின் ரபேல் விமானத்தின் பெருமையை பறைசாற்றும் விதமாக 2015ல் ரபேல் மாடல் வாட்சுகளை வெளியிட்டது. இந்த மாடல் வாட்சுகள் இந்திய ரூபாயில் அப்போது 4.40 லட்சத்திற்கு விற்பனை ஆனது. இதில் மொத்தம் 500 மாடல்கள் மட்டுமே உலகம் முழுக்க தயாரிக்கப்பட்டது. அப்போதே புக் செய்த 500 பேருக்கு மட்டுமே உலகில் இந்த வாட்ச் கிடைத்தது.

ரபேல் வாட்ச்
அதாவது இது ரபேல் விமானத்தை பாராட்டும் வகையில் அதை போலவே வடிவமைப்பில் செய்யப்பட்ட வாட்ச்தான். மற்றபடி ரபேல் பாகத்தில் எல்லாம் செய்யப்படவில்லை. இதன் கேசிங் செராமிக் மூலம் செய்யப்பட்டது. ரபேல் விமானங்களின் பல்வேறு பாகங்கள் செராமிக் மூலம் உருவாக்கப்பட்டது ஆகும். இது மிகவும் வலிமையாக இருக்கும். அனைத்து விதமான வானிலையையும் தாங்கும். நிறம் குறையாது. ரபேல் விமானத்தின் அதே லைட் கிரே நிறத்தில் இதில் உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் பேண்ட் மட்டும் ரப்பரில் உருவாக்கப்பட்டது. ஆனால் இதை ரபேல் விமான பாகத்தில் எல்லாம் செய்யவில்லை.

Fact Check
வெளியான செய்தி
தான் கட்டி இருக்கும் ரபேல் வாட்ச் ரபேல் விமானத்தின் பாகங்களால் செய்யப்பட்ட வாட்ச் என்று பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்
முடிவு
ரபேல் ஸ்பெஷல் எடிஷன் வாட்சை ரபேல் விமான பாகத்தில் எல்லாம் செய்யவில்லை. அது வெறுமனே ரபேல் விமானத்தை புகழ வேண்டும், பாராட்ட வேண்டும் என்று உருவாக்கப்பட்ட வாட்ச்












Click it and Unblock the Notifications