அண்ணாமலைக்கு எதிராக கடிதம் எழுதினாரா எச்.ராஜா? "லீக்கான லெட்டர்.." உண்மை என்ன? விளக்கம்
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜாக, பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டாவிற்கு கடிதம் எழுதியதாக அவரது லெட்டர் பேடில் அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. அந்த அறிக்கையை திமுக நிர்வாகிகள் பலர் பரப்பி வருகிறார்கள். இந்த அறிக்கை போலி என்று ஹெச் ராஜா விளக்கம் அளித்துள்ளார். அதை பற்றி விரிவாக பார்ப்போம்.
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளராக ஹெச் ராஜா பணியாற்றி வருகிறார். இவரது லெட்டர் பேடில் அறிக்கை ஒன்று உலா வருகிறது. அந்த அறிக்கையில், "பாஜகவின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியை எனக்கு வழங்கியதற்கு எனது மனமார்ந்த நன்றியை தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒரு பெரிய மரியாதை, மேலும் தமிழ்நாட்டில் எங்கள் கட்சியின் மதிப்புகள் மற்றும் தொலைநோக்குப் பார்வையை நிலைநிறுத்த நான் உறுதி பூண்டிருக்கிறேன்.

எனது பதவிக் காலத்தில், நான் தமிழகம் முழுவதும் விரிவாகப் பயணம் செய்து, தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்தேன். அனைவரது முயற்சிகளை ஒன்றிணைக்கவும், கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்தவும், நான் விடாமுயற்சியுடன் பணியாற்றி வருகிறேன். இதன் காரணமாக லட்சக்கணக்கான புதிய உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்து வருகிறது. இந்த வளர்ச்சி, நமது சித்தாந்தத்தின் வளர்ந்து வருவதை பிரதிபலிக்கிறது.
இருப்பினும், பொதுமக்களுடனும், கட்சி நிர்வாகிளுடன் , எனக்கு தெரிந்தவர்களும் தந்த நம்பகமான ஆதாரங்களை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். தற்போதைய தமிழ்நாடு மாநிலத் தலைமை, கேஜி குழுமம், நாயுடு சமூகத் தலைவர்கள் மற்றும் பண்ணாரி குழுமத்தின் ஸ்ரீ எஸ்.வி. பாலசுப்பிரமணியம் போன்ற தனிநபர்கள் மற்றும் குமரகுரு கல்லூரிகள் போன்ற நிறுவனங்களிடமிருந்து பணம் பறிப்பதில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன . ஸ்ரீ ரவி சாம் மற்றும் ஸ்ரீ கே.ஜி. அனுஷ் போன்ற இடைத்தரகர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகக் சொல்லப்படுகிறது. மேலும் திண்டுக்கல்லில் உள்ள ஸ்ரீ அண்ணாமலையார் சேம்பரில் தனிப்பட்ட சர்வதேச பயணங்கள் மற்றும் முதலீடுகளுக்காக நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறத. இதில் அவர்களின் தலைமையின் குடும்ப உறுப்பினர்கள் நேரடியாக ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால், கட்சியின் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை சிதைக்கக்கூடும். எனவே இந்த விஷயத்தை முழுமையாக விசாரித்து, கட்சியின் நேர்மை மற்றும் மதிப்புகளைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன். மீண்டும் ஒருமுறை, தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சி மற்றும் வெற்றிக்காக அயராது உழைக்கவும், உறுதியுடன் பணியாற்றவும் வாய்ப்பு கிடைத்ததற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்" இவ்வாறு ஒரு அறிக்கை ஹெச் ராஜா பெயரில் பரவி வருகிறது.

இந்த அறிக்கை முற்றிலும் போலியானது என்பதும், திமுக ஆதரவாளர்கள் சிலர் ஹெச் ராஜாவிற்கு எதிராக திட்டமிட்டு பரப்பியதாவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதுபற்றி ஹெச் ராஜா வெளியிட்டுள்ள பதிவில், "என் பெயருக்கு களங்கம் வரவைக்கும் வகையில், சமூக விரோதிகளால் தவறான தகவல்கள் (FAKE NEWS) சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது. இந்த போலி தகவலை தயார் செய்து பரப்பிய நபர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன். இந்த பொய்யான தகவலை யார் பரப்பினாலும் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்".

Fact Check
வெளியான செய்தி
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜாக, பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டாவிற்கு கடிதம் எழுதியதாக அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது.
முடிவு
தன் பெயருக்கு களங்கம் வரவைக்கும் வகையில், சமூக விரோதிகளால் தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது. இந்த போலி பரப்பிய நபர் மீது சட் நடவடிக்கை எடுக்கப்படும் என ஹெச் ராஜா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications