பொது சிவில் சட்டம்: கற்பனைக்கே ஒத்துவராத கருத்தியல்- 7ஆண்டுகளுக்கு முன் 'பாடம்' நடத்திய கருணாநிதி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொதுசிவில் சட்டம் என்பது செயல் வடிவம் பெற முடியாதது மட்டுமல்லாமல், கற்பனைக்கும் ஒவ்வாத கருத்தியலாகும் என்று மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதி, திமுகவின் நிலைப்பாட்டை 7 ஆண்டுகளுக்கு முன்னர் தெளிவாக விளக்கி இருக்கிறார்.

லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில் பொது சிவில் சட்டம் தொடர்பான கருத்துகளை சட்ட ஆணையம் கேட்டிருக்கிறது. பிரதமர் மோடி உள்ளிட்டோர் பொது சிவில் சட்டத்தை ஆதரித்து கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

பொது சிவில் சட்டத்தை முதலில் இந்துமதத்தில் அமல்படுத்துங்கள் என திமுகவின் டிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார். பொது சிவில் சட்டம் குறித்த திமுகவின் தெளிவான நிலைப்பாட்டை 7 ஆண்டுகளுக்கு முன்னர் அக்கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான மறைந்த கருணாநிதி விரிவாகவே விளக்கி இருக்கிறார்.

Former Chief Minister Karunanidhi explained DMK Stand on Uniform Civil Code

2016-ம் ஆண்டு ஜூலை 4-ந் தேதி கருணாநிதி இது தொடர்பாக வெளியிட்ட விரிவான அறிக்கை: நம் நாட்டின் உரிமையியல் சட்டங்களில் 99 சதவிகிதம் எல்லோர்க்கும் பொதுவான சட்டங்களாகவே உள்ளன. தொழில் நடத்துதல், கொடுக்கல் வாங்கல், வாடகை, சொத்து விற்பனை உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளில் அனைவருக்கும் பொதுவான சட்டங்களே பின்பற்றப்படுகின்றன.

முஸ்லிம் சட்டங்கள்: ஒரு முஸ்லிம், வங்கியில் வாங்கிய கடனை முறையாகத் திரும்பச் செலுத்தாத நிலையில், வட்டியுடன் கடன் தொகை அதிகரித்து, வழக்கு மன்றத்துக்குப் போகும்போது, இஸ்லாம் மார்க்கத்தில் வட்டி வாங்குவதும், கொடுப்பதும் தடை செய்யப்பட்டுள்ளதால், வங்கியில் வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்த முடியாது என வாதிட முடியாது. திருமணம், மணவிலக்கு, வாரிசுரிமை, வக்ப் சொத்துக்களின் நிர்வாகம் இவற்றில் மட்டும்தான் முஸ்லிம்களுக்கு மார்க்க அடிப்படையிலான தனியார் சட்டங்களை இந்திய அரசியல் சாசனம் அனுமதித்துள்ளது.

பிற மதங்களுக்கும் சிறப்பு சட்டங்கள்: முஸ்லிம்களுக்கு மட்டுமே தனியார் சட்டம் இருப்பது போல கருதுவது உண்மைக்கு மாறானது. இந்துக்களுக்கும், சீக்கியர்களுக்கும், இன்ன பிற பிரிவினர்களுக்கும் அவர்களுக்கென சிறப்புத் தனியார் சட்டங்கள் இந்திய அரசியல் சாசனத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. 1948ஆம் ஆண்டு அரசியல் நிர்ணய அவையில் சமயச் சுதந்திரம் தொடர்பான விவாதம் நடந்த போது தனியார் சட்டங்கள் இல்லை என்றால், இந்திய அரசியல் சாசனத்தின் 25 (எ) பிரிவான விரும்பிய சமயத்தைத் தேர்வு செய்தல், பின்பற்றுதல், பரப்புரை செய்தல் ஆகிய உரிமைகள் அர்த்தமற்றுப் போவதை எடுத்துரைத்து தனியார் சட்டங்களை அரசியல் சாசனம் ஏற்பளிப்புச் செய்ய காயிதே மில்லத் காரணமாக இருந்தார்.

தனியார் சட்டங்களும் பிற நாடுகளும்: தனியார் சட்டங்கள் நம் நாட்டில் மட்டும்தான் நடைமுறையில் உள்ளனவா என்றால் இல்லை. தாய்லாந்திலும், இலங்கையிலும் கூட தனியார் சட்டங்கள் உள்ளன. வங்க தேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலும், எத்தியோப்பியா, உகாண்டா, கிரீஸ் ஆகிய நாடுகளிலும் தனியார் சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இது அந்த நாடுகளின் ஒருமைப்பாட்டுக்கு எந்த வகையிலும் ஊறு செய்யவில்லை. இந்தியாவிற்கும், உலகில் ஏனைய நாடுகளுக்கும் உள்ள மிக முக்கியமான வேறுபாடு நம் நாட்டின் பன்முகத்தன்மையாகும். வேற்றுமையில் ஒற்றுமை (Unity in Diversity) என்பது நமது வேர்க் கொள்கை. இதை மிகச் சரியாக உணர்ந்திருந்த நமது முன்னோர் சட்டங்களிலும், அதைப் பிரதிபலிக்கச் செய்துள்ளனர்.

Former Chief Minister Karunanidhi explained DMK Stand on Uniform Civil Code

பொதுவான சட்டங்கள்: இந்தியாவில் பின்பற்றப்பட்டு வரும் கிரிமினல் சட்டம், தண்டனைச் சட்டம் எல்லாம் இங்கே அனைவருக்கும் பொதுவாகத் தான் இருக்கின்றன. சிவில் சட்டத்தில் விவாகரத்து, தத்து எடுத்தல், சொத்துரிமை ஆகிய வற்றில் மட்டும் சில வேறுபாடுகள் மத அடிப்படையில் இங்கே அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பலவிதமான மொழி, பண்பாடு மதம், சாதி எனப் பன்னெடுங் காலமாகக் கொண்டிலங்கும் இந்திய மக்கள் குழுமங்களிடையே பொது சிவில் சட்டம் சாத்தியமல்ல. இந்துக்களிடையே கூட ஒரு சாதி மக்களின் பழக்க வழக்கங்கள் மற்றொரு சாதியுடன் முழுமையாக ஒத்துப் போவதில்லை. எடுத்துக்காட்டாக சில சாதியினர் மத்தியில் எளிதில் விவாகரத்தும் மறுமணமும் அனுமதிக்கப்படு கின்றன. சில சாதிகளில் அவை தடை செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் பல்வேறு மதங்களையும் சாதிகளையும் உள்ளடக்கிய பொதுசிவில் சட்டம் என்பது செயல் வடிவம் பெற முடியாதது மட்டுமல்லாமல், கற்பனைக்கும் ஒவ்வாத கருத்தியலாகும். இந்த நாடு என்னுடையது; என்னுடைய அடிப்படையான, மத, பண்பாட்டு, மொழி உரிமைகள் எதுவும் புறக்கணிக்கப்படவில்லை; அந்த உரிமைகள் இந்த நாட்டின் சட்டத்தாலும், அரசாலும், நீதிமன்றங்களாலும் நிச்சயம் பாதுகாக்கப்படும் என்கிற உணர்வு ஒவ்வொரு குடிமகனுக் கும் உறுதியாகும்போதுதான், இந்த நாட்டின் மீதும், அதன் ஒருமைப்பாட்டின் மீதும் இயல்பாகவே நம்பிக்கை ஏற்படும்.

ஏன் எதிர்ப்பு: பொதுசிவில் சட்டம் போன்றவற்றின் மூலம் அந்த உரிமைகள் மறுக்கப்பட்டு உணர்வுகள் காயப்படுத்தப்படும் போதுதான், இது நமது நாடுதானா என்கிற ஐயம் எவருக்கும் ஏற்படும். ஆகஸ்ட் 20, 1972ஆம் ஆண்டு தீனதயாள் உபாத்யாய ஆராய்ச்சிக் கழகத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய போது, ''பாரத ஒற்றுமையைப் பாதுகாக்க பொது சிவில் சட்டம்தான் கருவியாகும் என்பது தவறு; இயற்கைக்கு எதிரானது; விபரீத விளைவுகளை உண்டாக்கக்கூடியது'' என்று பாஜக - ஆர்.எஸ்.எஸ். பிதாமகர்களில் முக்கியமானவரான குரு கோல்வால்கர் கூறியிருப்பது 21-8-1972 தேதியிட்ட மதர் லாண்ட் பத்திரிகையில் வெளிவந்தது. நடை முறைக்குகந்த இந்த நல்ல கருத்தை மத்திய பாஜக ஆட்சியினர் மனதிலே கொள்ள வேண்டுமென விரும்புகிறேன்.

கருத்து ஒற்றுமை: பொது சிவில் சட்டம் குறித்து முதலில் அனைத்து அரசியல் கட்சிகளிடமும், நாட்டின் அனைத்து தரப்பினரிடமும் கருத்தொற்றுமை ஏற்படுத்தப்பட வேண்டும். உண்மையில் சொல்லப் போனால், இந்த விவகாரத்தில் சட்டக் கமிஷனின் பரிந்துரையைப் பெறுவது மட்டும் முக்கியமல்ல. பல்வேறு சமயங்கள் மற்றும் சாதிகளிடையே தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றப்பட்டு வரும் நெறிமுறைகளையும், நெடுங்காலப் பழக்க வழக்கங்களையும் ஒருங்கிணைத்து அனைவருக்கும் பொது வானதொரு சிவில் சட்டத்தை ஏற்படுத்துவது என்பதும் எளிதான காரியமல்ல. நமது நாட்டில் தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சினைகள் ஆயிரம் இருக்கும்போது; பொருளாதாரச் சீர்திருத்தங்கள், நீதித் துறைச் சீர்திருத்தங்கள் எனப் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் நாள்தோறும் பெருகி வரும் போது; பொது சிவில் சட்டம் என்னும் முன்னுரிமை இல்லாத - சிக்கலான பிரச்சினையைக் கையிலெடுக்க முயற்சிப்பது குளவிக் கூட்டிற்குள் கையை விடுவதற்கு ஒப்பானதாகும். இவ்வாறு கருணாநிதி கூறியிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+