ஓவர்டேக் ஆன தங்கம்! அமெரிக்காவில் உள்ள தங்கத்தை.. மொத்தமாக திரும்பப்பெறும் உலக நாடுகள்! என்ன காரணம்
நியூயார்க்: அமெரிக்காவின் பெட்டகங்களில் வைக்கப்பட்டுள்ள தங்க இருப்புகளை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மறுபரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளன. டொனால்ட் டிரம்ப்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் மிக மோசமான முடிவுகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் அங்கு உள்ள தங்கத்தை எடுக்கலாமா என்ற ஆலோசனைகள் செய்யப்பட்டு வருகின்றன.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தங்க இருப்புகள் அமெரிக்காவிலிருந்து திரும்பப் பெறப்பட வேண்டும் அல்லது தணிக்கை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
தங்க இருப்புகளை திரும்பப் பெற வலியுறுத்தல்
ஐரோப்பிய வரி செலுத்துவோர் சங்கம் (Taxpayers Association of Europe - TAE) வெளியிட்ட அறிக்கையில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தங்க இருப்புகள் அமெரிக்காவிலிருந்து ஐரோப்பாவிற்கு திரும்பக் கொண்டுவரப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. குறைந்தது, தங்க இருப்பின் முழுமையான பட்டியல் மற்றும் தணிக்கை உறுதி செய்யப்பட வேண்டும். நாடுகளின் தங்க இருப்புகளைத் திரும்பப் பெறுவது, அவை சொந்த நாட்டிலேயே சேமிக்கப்பட வேண்டும் என்று அர்த்தமல்ல. முக்கியமான விஷயம் என்னவென்றால், அந்த தங்கத்தை எந்த தடையும் இல்லாமல் அணுகுவதை உறுதி செய்வது அவசியம்.

ஜெர்மனி மற்றும் இத்தாலி போன்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தங்களது தேசிய தங்க இருப்புகளில் பெரும்பகுதியை அமெரிக்காவில் வைத்துள்ளன. இதற்கு வரலாற்று மற்றும் நாணயவியல் கொள்கை காரணங்கள் உள்ளன.
ஜெர்மனி மற்றும் பிற ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஏன் தங்கத்தை திரும்பக் கொண்டுவர வேண்டும் என்பதற்கான காரணத்தையும் விளக்கியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப், அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் (FED) சுதந்திரத்தில் அதிருப்தி அடைந்துள்ளார். குறிப்பாக, அமெரிக்க வட்டி விகிதங்களை குறைக்கும் விஷயத்தில் அவர் அதிருப்தி தெரிவித்துள்ளார். மேலும், பெடரல் ரிசர்வ் வங்கியை வெள்ளை மாளிகை ஓவல் அலுவலகத்துடன் நெருக்கமாக இணைக்க அவர் விரும்புகிறார்.
நாடுகள் தங்கள் தங்க இருப்புகளைத் திரும்பப் பெற விரும்பினால், அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரிகள் அதற்கு அனுமதி மறுத்தால் என்ன செய்வது? கடந்த காலங்களில், அமெரிக்காவில் சேமிக்கப்பட்ட தங்க இருப்புகளை நேரடியாக ஆய்வு செய்ய முடியவில்லை. உதாரணமாக, ஜெர்மன் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நேரடி ஆய்வு மற்றும் கட்டுப்பாட்டுக்கான அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் நம்முடைய தங்கத்தை அணுக முடியாமல் போகலாம்.
அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், சீனா, சுவிட்சர்லாந்து மற்றும் இந்தியா உள்ளிட்ட உலகின் மிகப்பெரிய தங்கம் வைத்திருப்பவர்கள் தங்கள் தங்கத்தை இங்கிலாந்து வங்கி பெட்டகங்களிலும், அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பெட்டகங்களிலும் வைத்துள்ளனர். 2024 ஆம் ஆண்டில், இந்தியா லண்டனில் இருந்து 200 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான தங்கத்தை இரண்டு தவணைகளில் இந்தியாவிற்கு கொண்டு வந்தது.
2023 ஆம் ஆண்டில், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் தங்கம் உட்பட சுமார் 300 பில்லியன் டாலர் மதிப்புள்ள ரஷ்யாவின் வெளிநாட்டுச் செலாவணி சொத்துக்களை முடக்கின. இது அரசாங்கங்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில்தான் தங்கத்தை திரும்ப பெற வேண்டும் என்று யுரோப்பியன் யூனியன் முடிவு செய்துள்ளது.
தங்க இருப்பு விவரங்கள்
உலக தங்க கவுன்சில் தரவுகளின்படி, ஜெர்மனி 3,351.53 டன் தங்கத்தையும், இத்தாலி 2,451.84 டன் தங்கத்தையும், பிரான்ஸ் 2,437.00 டன் தங்கத்தையும், ஸ்விட்சர்லாந்து 1,039.94 டன் தங்கத்தையும் அமெரிக்காவில் இருப்பு வைத்துள்ளது. அமெரிக்கா 8,133.46 டன் தங்கத்துடன் அதிக தங்க இருப்பைக் கொண்டுள்ளது.
அமெரிக்காவின் மொத்த தங்க இருப்பில் கிட்டத்தட்ட பாதி ஃபோர்ட் நாக்ஸில் உள்ளது. அமெரிக்க தங்க இருப்புகள் குறித்த துல்லியமான தகவல்களை கருவூலத் துறை தனது இணையதளத்தில் வழங்குகிறது. ஃபோர்ட் நாக்ஸ் சுமார் 4,000 டன்கள் எடையுள்ள 147,341,858.382 டிராய் அவுன்ஸ் தங்கத்தைக் கொண்டுள்ளது. .
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தங்கம் எவ்வளவு நியூயார்க் அல்லது லண்டன் பெட்டகங்களில் வைக்கப்பட்டுள்ளது என்பதற்கான தரவுகள் கிடைக்கவில்லை. ஜெர்மனியின் தங்கத்தில் கிட்டத்தட்ட பாதி, நியூயார்க் நகரத்தில் உள்ள ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைமையகமான 33 லிபர்ட்டி தெருவில், தெரு மட்டத்திலிருந்து 80 அடி ஆழத்தில் உள்ள ஒரு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
தங்கம் நீண்ட காலமாக சர்வதேச வங்கிகளுக்கான அந்நிய செலாவணி இருப்பு சொத்தாக இருந்து வருகிறது. சமீபத்தில், பணவீக்கம் மற்றும் புவிசார் அரசியல் காரணங்களால் மத்திய வங்கிகள் தங்கத்தை அதிகளவில் வாங்கி வருகின்றன.
ஓவர்டேக் செய்த தங்கம்
ஐரோப்பிய மத்திய வங்கியின் சமீபத்திய அறிக்கையின்படி, மத்திய வங்கிகள் வைத்திருக்கும் இரண்டாவது பெரிய அந்நிய செலாவணி இருப்பு சொத்தாக தங்கம் யூரோவை விஞ்சிவிட்டது. 2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில், மத்திய வங்கிகள் தொடர்ந்து மூன்று வருடங்களாக ஒவ்வொரு ஆண்டும் 1,000 டன்களுக்கு மேல் தங்கத்தை வாங்கியுள்ளன. இது முந்தைய தசாப்தத்தின் சராசரியான 400-500 டன்களை விட கணிசமாக அதிகமாகும்.
அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி மீது அதிபர் டொனால்ட் டிரம்ப் அடிக்கடி தாக்குதல் நடத்தியதும், உலகளாவிய அமைதியின்மை அதிகரித்ததும் ஜெர்மனி மற்றும் இத்தாலி நியூயார்க்கிலிருந்து தங்கத்தை திரும்பப் பெற தூண்டுகோலாக அமைந்தது. அமெரிக்க பெட்டகங்களில் உள்ள தங்க இருப்புகளை ஐரோப்பிய நாடுகள் மறுபரிசீலனை செய்ய இது வழிவகுத்தது. தங்க இருப்பை சொந்த நாடுகளுக்கு கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications