தங்கம் வாங்குவதில் 2வது இடம்.. இந்திய வீடுகளில் உள்ள தங்கத்தின் மதிப்பு ரூ.337 லட்சம் கோடியாம்!
சென்னை: தங்கம் விலை ஒவ்வொரு நாளும் 2 முறை உயர்ந்து அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்து வரும் நிலையில், இந்திய வீடுகளில் உள்ள ஒட்டுமொத்த தங்க நகைகளின் மதிப்பு இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. அதாவது இந்தியாவில் உள்ள வீடுகளில் மட்டும் ரூ.337 லட்சம் கோடி மதிப்பிலான நகைகள் இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் சாமானிய மக்கள் தங்கம் வாங்குவதே அவசர பொருளாதார தேவைகளுக்காக தான். திடீரென கல்வி, மருத்துவம் உள்ளிட்ட தேவைகள் எழுந்தால், உடனடியாக வீட்டில் உள்ள தங்கத்தை விற்பனை செய்தோ அல்லது அடகு வைத்தோ பணத்தை தயார் செய்ய முடியும். ஆனால் கடந்த 6 மாதமாக இந்தியாவில் தங்கம் விலை அதிகரித்து கொண்டே செல்கிறது.

கிட்டத்தட்ட 2 மாதத்தில் சுமார் ரூ.30 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது. தற்போது ஒவ்வொரு நாளும் தங்கம் விலை 2 முறை அதிகரித்து வருகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் தங்கம் விலை உயர்வதால், சாமானிய மக்கள் பலரும் கலக்கத்தில் இருக்கின்றன. நேற்று தங்கம் விலை ரூ.92 ஆயிரத்தை கடந்து புதிய வரலாறு படைத்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.11,500 ஆக உயர்ந்துள்ளது.
இதனால் விரைவில் ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்தை எட்டும் என்று கணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக வீடுகளில் உள்ள தங்க நகைகளின் மதிப்பு உயர்ந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சில நாட்களுக்கு முன் வெளியான ஆய்வு அறிக்கையில், இந்திய குடும்பங்களில் பல தலைமுறைகளாக சேகரித்து பாதுகாக்கப்பட்டு வரும் தங்கத்தின் இருப்பு மட்டும் 34,600 டன்னாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் அந்த தங்க நகைகளின் மதிப்பு மட்டும் ரூ.3.8 லட்சம் கோடி அமெரிக்க டாலராக உள்ளது. அதனால் இந்திய ரூபாயின் மதிப்பில் சுமார் ரூ.337 லட்சம் கோடியாகும். என்னதான் தங்கம் விலை உயர்ந்து வருவது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தினாலும், அவர்கள் முதலீடு செய்துள்ள தங்கத்தின் மதிப்பு உயர்ந்து இன்னொரு பக்கம் மகிழ்ச்சியை கொடுத்து வருகிறது.
2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியான உலக தங்க கவுன்சில் அறிக்கையில், இந்திய வீடுகளில் தங்க நகைகளின் இருப்பு 25 ஆயிரம் டன்களாக மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் 2 ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள தங்க நகைகளின் மதிப்பு 34,600 டன்னாக உயர்ந்துள்ளது. இதனால் சர்வதேச அளவில் அதிகளவில் தங்கம் வாங்கும் 2வது பெரிய நாடாக இந்திய வளர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications