மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா?
சென்னை: இந்தியாவில் நாளுக்கு நாள் தங்க நகை அடகு வைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக ரிப்போர்ட் ஒன்று சொல்கிறது.
வீட்டு அலமாரியில் தூங்கிக்கொண்டிருந்த தங்கத்திற்கு இப்போது மவுசு கூடிவிட்டது. "அவசரத்துக்கு அடகு வைக்கிறது" என்பது போய், இப்போது "ஸ்மார்ட்டாக லோன் வாங்குவது" என்கிற ட்ரெண்டுக்கு இந்தியா மாறியிருக்கிறது. டிரான்ஸ்யூனியன் சிபில் (TransUnion CIBIL) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை சொல்லும் தகவல்கள், வங்கி உலகையே புருவம் உயர்த்த வைத்திருக்கின்றன.

எண்கள் சொல்லும் நிஜம்!
இந்தியாவின் ரீடெய்ல் கிரெடிட் (Retail Credit) சந்தையில், இன்று சிங்கப்பாதையை பிடித்திருப்பது தங்க நகைக்கடன் தான். மொத்த லோன் எண்ணிக்கையில் 36 சதவீதமும், மதிப்பின் அடிப்படையில் 40 சதவீதமும் தங்க நகைக்கடன்கள் தான் ஆக்கிரமித்திருக்கின்றன.
குறிப்பாக, 2025 டிசம்பர் காலாண்டில் சராசரி நகைக்கடன் தொகை 1.9 லட்சம் ரூபாயாக உயர்ந்திருக்கிறது. "ஏதோ பத்தாயிரம், இருபதாயிரம் வாங்குவார்கள்" என்ற காலம் மலையேறிவிட்டது. இன்று நடுத்தர வர்க்கம் முதல் பெரும் தொழிலதிபர்கள் வரை பலரும் தங்கத்தை முதலீடாக மட்டும் பார்க்காமல், உடனடி மூலதனமாகவும் பார்க்கத் தொடங்கிவிட்டனர்.
தெற்கைத் தாண்டிய தங்கம்!
நகைக்கடன் என்றாலே அது தென்னிந்திய மாநிலங்களின் கோட்டை என்பது தான் இதுவரை இருந்த பிம்பம். ஆனால், இப்போது காற்று திசை மாறியிருக்கிறது. உத்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் நகைக்கடன் வாங்குவோரின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.
முக்கியமாக, இது ஏழைகளுக்கான 'கடைசி புகலிடம்' (Last resort) என்ற நிலை மாறி, நல்ல வருமானம் ஈட்டும் 'ப்ரைம்' (Prime category) வாடிக்கையாளர்கள் கூட இப்போது நகைக்கடனைத் தான் அதிகம் நாடுகிறார்கள். காரணம், மிகக் குறைந்த நேரத்தில், குறைவான ஆவணங்களுடன் கிடைக்கும் 'குயிக் லோன்' இது என்பதுதான்!
தங்கம் விலையில் சரிவு: ஒரு எச்சரிக்கை மணி!
தங்கத்தின் விலை உயர்ந்து வந்தவரை வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் கொண்டாட்டம் தான். ஆனால், மார்ச் மாத சர்வதேச சந்தை நிலவரம் ஒரு சின்ன நடுக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 2008-க்குப் பிறகு, ஒரே மாதத்தில் தங்கம் விலை சுமார் 12 சதவீதம் சரிந்துள்ளது நிதித்துறையில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
ஈரான் போர் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால் தங்கம் விலை ஆட்டம் கண்டு வருகிறது. இந்த ரிப்போர்ட்டும் அதை பற்றி எச்சரிக்கிறது.
"நகைக்கடன்களில் பாதுகாப்புக்காக ஒரு குறிப்பிட்ட தொகையை வங்கிகள் நிறுத்தி வைக்கும். ஆனால், ஒரே மாதத்தில் 13 சதவீதம் விலை வீழ்ச்சி அடையும் போது, அந்த பாதுகாப்பு போதுமானதா என்பதை வங்கிகள் காகிதத்தில் மட்டும் பார்க்காமல், உடனுக்குடன் (Real-time) கண்காணிக்க வேண்டும். தாமதமாகும் ஒவ்வொரு நிமிடமும் வங்கிக்கு நஷ்டத்தை ஏற்படுத்தலாம்."
சென்டிமென்ட் எனும் கேரண்டி!
விலை சரிந்தாலும், நகைக்கடனைத் திருப்பிச் செலுத்துவதில் இந்தியர்கள் கில்லாடிகள் என்கிறார்கள் நிபுணர்கள். மற்ற கடன்களைப் போல இதை 'டிஃபால்ட்' (Default) செய்ய மாட்டார்கள். காரணம், அதில் கலந்திருக்கும் 'குடும்ப சென்டிமென்ட்'. தாலிக் கொடியோ அல்லது பரம்பரை நகையோ ஏலத்துக்குப் போவதை யாரும் விரும்புவதில்லை. அதனால், கூடுதல் நகையை வைத்தாவது வாடிக்கையாளர்கள் கடனை அடைக்கவே முயற்சிப்பார்கள்.
சந்தைப் பொருளாதார நிபுணர்கள் இது குறித்துக் கூறுகையில்: "இப்போதைய சரிவு என்பது வட்டி விகித எதிர்பார்ப்புகளால் ஏற்பட்ட ஒரு தற்காலிக சறுக்கல் தான். நீண்ட கால நோக்கில் தங்கம் இன்னும் ஒரு பலமான முதலீடு தான். எனவே, விலை குறையும் இந்த நேரத்தை முதலீட்டாளர்கள் ஒரு வாய்ப்பாகவே பயன்படுத்திக் கொள்ளலாம்" என்கிறார்.
இந்தியாவின் கிரெடிட் ஸ்கோர் ஆரோக்கியத்தைக் குறிக்கும் சி.எம்.ஐ (CMI) குறியீடு 97-ல் இருந்து 102-ஆக உயர்ந்திருப்பது நல்ல அறிகுறி தான். நகைகள் இனி வெறும் அழகு சாதனமல்ல; அது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைத் தாங்கிப் பிடிக்கும் ஒரு பலமான அச்சாணியாக மாறியிருக்கிறது!












Click it and Unblock the Notifications