பதுங்கிப் பாயுது தங்கம்..சட்டுனு வித்துடாதீங்க! மார்க்கெட்டில் அதிசயம் நடக்கும்! நிபுணர்கள் அட்வைஸ்!
சென்னை: ஜனவரி மாதத்தில் இருந்து செப்டம்பர் இறுதி வரை உச்சத்தில் இருந்த நிலையில், சமீப காலமாக தங்கத்தின் விலை திடீரெனக் குறைந்துள்ளதால், முதலீட்டாளர்கள் 'இப்போது தங்கத்தை வாங்கலாமா? அல்லது வாங்கிய தங்கத்தை விற்று விடலாமா? என்ற குழப்பத்தில் உள்ளனர். கடந்த சில வாரங்களாக தங்க விலை அதிகரித்து வந்த நிலையில், இப்போது ஏற்பட்ட திடீர் சரிவு தங்க சந்தையில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திங்கட்கிழமை (அக்டோபர் 27, 2025) இந்தியாவின் மல்டி கமாடிட்டி எக்சேஞ்சில் (MCX) தங்கத்தின் ஸ்பாட் விலை 4.92% அளவுக்கு வீழ்ச்சி அடைந்து, 10 கிராம் ரூ.1,20,909 ஆக குறைந்த நிலையில், இதற்கு முன் அக்டோபர் 24 அன்று அது ரூ.1,26,854 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் டிசம்பர் மாத டெலிவரி ஒப்பந்தத்திற்கான தங்கத்தின் ஃபியூச்சர் விலை 1.55% வீழ்ச்சியடைந்து ரூ.1,21,533 ஆக குறைந்ததது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் 3.95% சரிந்துள்ளது உலக அளவில் தங்க சந்தையில் குழப்பத்தை உருவாக்கி உள்ளது.

இந்திய தங்கம் விலை
இந்திய புலியன் மற்றும் நகை விற்பனையாளர் சங்கம் (IBJA) வெளியிட்ட தகவலின் படி, கடந்த 10 நாட்களில் 999 தங்கத்தின் விலை 6.85% குறைந்துள்ளது. அக்டோபர் 17 அன்று கிராம் ஒன்றுக்கு ரூ.12,958 இருந்த தங்கம், அக்டோபர் 27 அன்று ரூ.12,108 ஆக குறைந்துள்ளது. இதேபோல் அமெரிக்காவில் தங்க ஃபியூச்சர் விலை 7% வரை சரிவைக் கண்டுள்ளது. இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணம், அமெரிக்க டாலர் வலுவடைந்தது, அமெரிக்கா-சீனா வர்த்தக பதட்டம் குறைந்தது, மேலும் பல முதலீட்டாளர்கள் அதிக லாபம் பெற்றதால் 'ப்ராஃபிட் புக்கிங்' செய்ததுதான் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
தங்கம் விலை சரிவு
இந்தியாவில் பண்டிகைக் காலம் முடிவடைந்தது, ரூபாய் மதிப்பு சற்று வலுவடைந்தது, மேலும் ரிசர்வ் வங்கி தங்கம் வாங்குவதை குறைத்தது என்பது உள்ளிட்ட காரணிகள் தங்கத்தின் விலை குறைய காரணமாகியுள்ளது.ஆனால் இது நீண்டகால சரிவா? இல்லை தற்காலிகமா? என்கிற கேள்விக்கு நிபுணர்கள் தற்போது விடையளித்துள்ளனர்.
நிபுணர் கருத்து
இந்திய புலியன் & ஜுவல்லர்ஸ் அசோசியேஷன் துணைத் தலைவர் அக்ஷா கம்போஜ் பேசும் போது: "குறுகிய காலத்தில் சிறிதளவு தங்கத்தின் விலை தளர்வு இருக்கலாம். ஆனால் நடுத்தர காலத்தில் மீண்டும் தங்கம் உயர வாய்ப்பு உள்ளது. கடந்த சில மாதங்களாக தங்கம் மிக அதிகமாக உயர்ந்தது. எனவே இந்த சரிவு ஒரு இயல்பான திருத்தம் மட்டுமே," என்றார்.
தங்கம் மீண்டும் உயரும்
அரிஹந்த் கேபிட்டல் மார்க்கெட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ருதி ஜெயின் கூறும் போது"மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கம் வாங்கிக் கொண்டிருப்பதும், பன்னாட்டு பொருளாதார சிக்கல்கள் நீடிப்பதும் தங்கத்தின் நீண்டகால மதிப்பை உறுதியாக வைத்திருக்கிறது. எனவே தங்கத்தின் புல் மார்க்கெட் (Bull Market) முடிவடையவில்லை. இது ஒரு சற்று ஓய்வு எடுக்கும் கால கட்டம் மட்டுமே," என்றார்.
தங்க முதலீட்டு ஆலோசனை
முதலீட்டாளர்கள் இதனை கண்டு பீதி அடைந்து தங்கத்தை விற்க வேண்டாம் எனவும், தங்கள் முதலீட்டுப் பெட்டகத்தை (portfolio) சமநிலைப்படுத்திக் கொள்ளவேண்டும் எனவும் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். தங்கத்தில் ஏற்கனவே 15-20% க்கும் மேல் முதலீடு செய்துள்ளவர்கள் சிறிதளவு குறைக்கலாம். புதிய முதலீட்டாளர்கள் ஒரே முறையில் வாங்காமல், சிறிய அளவில் (SIP முறையில்) வாங்குவது பாதுகாப்பானது என்று பரிந்துரைக்கின்றனர்.
தங்க எடிஎஃப்
அதேபோல், தற்போது நேரடியாக தங்கம் வாங்குவதற்கு பதிலாக Gold ETF அல்லது Gold Mutual Fund மூலம் முதலீடு செய்வது சிறந்தது என நிபுணர்கள் கூறுகின்றனர். இது குறைந்த செலவில், பாதுகாப்பாகவும், எளிதாகவும் தங்கத்தில் முதலீடு செய்யும் வாய்ப்பை அளிக்கிறது. மொத்தத்தில் பார்க்கும்போது, தங்க விலை குறைந்திருப்பது சிலருக்கு நட்டமாக இருந்தாலும், புதிய முதலீட்டாளர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும். கடந்த சில நாட்களாக தங்க விலை அதிகரித்து இருந்த நிலையில், தற்போது ஏற்பட்ட இச்சரிவு ஒரு தற்காலிக சரிவு மட்டுமே. எதிர்வரும் மாதங்களில் மீண்டும் தங்கம் விலை உயரக்கூடும் என நிபுணர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications