சாலையில் ஓடும் ஆறுகள்.. மொத்தமாக மூழ்கிய கார்கள்.. ஒரே நாளில் ஸ்தம்பித்து நிற்கும் டெல்லி
டெல்லி: தென்மேற்கு பருவமழை இந்தாண்டு லேட்டாக வந்தாலும் வெளுத்து வாங்கி வருகிறது. டெல்லியில் நேற்று புதன்கிழமை இரவு முதல் கொட்டித்தீர்த்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்துவிட்டது. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. மேலும், நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்த சம்பவமும் அரங்கேறியுள்ளது.
பொதுவாக ஜூன் மாதம் தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை இந்தாண்டு தாமதமாகவே தொடங்கியது. இதனால் ஜூன் 2வது வாரம் வரையிலும் கூட பெரியளவில் மழை இல்லாமல் இருந்தது. ஆனால், ஜூலை ஆரம்பித்தவுடன் மழை ஆரம்பித்துவிட்டது. நாட்டின் பல பகுதிகளில் பருவமழை பேயாட்டம் போட்டு வருகிறது.

டெல்லி மழை
ஏற்கனவே கடந்த சில நாட்களாக மகாராஷ்டிராவை மழை புரட்டி போட்டது. இந்தச் சூழலில் தான் இப்போது டெல்லியிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அங்கு கனமழையால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. மேலும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.. நேற்று இரவு முழுக்க கனமழை கொட்டியது. இந்த கனமழையால் டெல்லியின் பல முக்கிய சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின.
பல இடங்களில் சாலையே தெரியாத அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கிட்டத்தட்ட ஆறு போல காட்சி அளித்தது. பல இடங்களில் மழைநீர் வடிகால் அமைப்புகளும் முடங்கியது. இதனால் தாழ்வான பகுதிகளில் நீர் வெளியேறாமல் தேங்கியது. முக்கிய சாலைகளிலும் கூட நீர் இருந்ததால் வாகனங்கள் மெதுவாக நகர வேண்டிய சூழல் ஏற்பட்டது. பாதசாரிகள் முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து செல்ல வேண்டிய நிலை உருவானது.
3 பேர் பலி
இதற்கிடையே இந்த கனமழையால் மோசமான விபத்து ஒன்றும் ரோகிணி பகுதியில் நிகழ்ந்தது. அங்கு கட்டப்பட்டு வந்த நான்கு மாடி கட்டிடம் ஒன்று கனமழையால் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், மீட்பு பணிகளும் தொடர்ந்து நடந்து வருகிறது. அங்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்றும் நாளையும் கூட கனமழை கொட்டும் என்றே தெரிகிறது
கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை அதிகபட்சமாக டெல்லியின் சப்தர்ஜங் பகுதியில் 72.6 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. லோதி ரோடு பகுதியில் 80.2 மி.மீ., ரிட்ஜ் பகுதியில் 77.8 மி.மீ., பாலம் பகுதியில் 63 மி.மீ. மற்றும் அயனாகர் பகுதியில் 57.4 மி.மீ. மழை பெய்துள்ளது. கனமழையால் கிரேட்டர் கைலாஷ், நாசிர்பூர், மகாவீர் பஜார், விகாஸ் மார்க், கிழக்கு டெல்லி மற்றும் டெல்லி ரயில் நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது.
போக்குவரத்து பாதிப்பு
இந்த கனமழையால் சாலைகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. ரிங் ரோடு, அவுட்டர் ரிங் ரோடு, டெல்லி நொய்டா எக்ஸ்பிரஸ் சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை 48 உள்ளிட்ட முக்கிய சாலைகளில் பல கிலோமீட்டர் தூரத்திற்குப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கனமழையால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஈஸ்ட் ஆஃப் கைலாஷ் பகுதியில் உள்ள இஸ்கான் கோயில் அருகிலும், நேஷனல் ஹார்ட் இன்ஸ்டிடியூட் முன்பும் இரண்டு பெரிய மரங்கள் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடரும் கனமழை
டெல்லி மட்டுமின்றி புறநகர் பகுதியான குருகிராமிலும் கனமழை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல முக்கிய சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதால் ஏராளமான வாகனங்கள் சிக்கிக்கொண்டன. டெல்லி ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் இமயமலை அடிவாரப் பகுதிகளை நோக்கி நகர்ந்திருப்பதே டெல்லி மற்றும் வட இந்தியாவில் பரவலான மழைக்கு காரணம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு மேலும் வடக்கே நகரும் வரை மழை தொடரும் என்றும் எச்சரித்துள்ளது. கனமழை பெய்துள்ள நிலையில், டெல்லியின் காற்று தரம் ஓரளவுக்கு ஓகேவாக இருக்கிறது. இன்று காலை காற்றுத் தரக் குறியீடு 61ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.














Click it and Unblock the Notifications