அர்ஜென்டா அரை பவுனாவது வாங்குங்க! தாறுமாறாக தங்கம் மார்க்கெட்! போன வாரம் வாங்கியிருந்தா 5,000 லாபம்!
சென்னை: தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரத்தில் மிக அதிகமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக பவுன் தங்கத்தின் விலை ஒரே வாரத்தில் ரூ.5,600 உயர்ந்தது என்பது நகை வாங்கும் மக்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது. சென்னை உள்ளிட்ட நகரங்களில் ஆபரணத் தங்கம் விற்பனை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கத்தின் விலை எப்படி இருந்தது என பார்க்கலாம்..
சனிக்கிழமையான நேற்று தங்கத்தின் விலை மேலும் உயர்ந்தது. அன்றைய தினம் காலை தங்கம் ஒரு கிராம் ரூ.13,000க்கு விற்பனை செய்யப்பட்டு இருந்தது. ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்து 4,000க்கு விற்றது. ஆனால் மாலை நேரத்தில் விலை மீண்டும் உயர்ந்தது.
அப்போது ஒரு கிராம் தங்கம் ரூ.13,100 ஆகவும், பவுன் தங்கம் ரூ.1 லட்சத்து 4,800 ஆகவும் விற்பனையானது. இவ்வாறு ஒரே நாளில் கூட தங்க விலையில் பெரிய உயர்வு ஏற்பட்டது. நேற்று மட்டுமல்ல கடந்த ஒரு வாரமாகவே தங்கத்தின் விலை சிறிது சிறிதாக உயர்ந்தே வந்தது.

தங்கம் விலை
கடந்த வாரத்தில் தங்க விலை எப்படி உயர்ந்தது என்பதை பார்க்கும் போது, டிசம்பர் 22 முதல் 27 வரை ஒவ்வொரு தினமும் தங்க விலைஉயர்ந்து வந்தது. டிசம்பர் 22 அன்று பவுன் தங்கம் ரூ.1 லட்சத்து 560க்கு விற்றது. அதன் பின்னர் அடுத்த நாட்களிலும் விலை உயர்ந்து, டிசம்பர் 27 அன்று பவுன் ரூ.1 லட்சத்து 4,800 ஆகியது. இதனால், இந்த ஆறு நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.5,600 உயர்ந்தது. தங்கத்தின் விலை ஏன் அதிகரிக்கிறது என்பதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.
உலக சந்தை
அமெரிக்க டாலரின் மதிப்பு உயர, இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருகிறது. அதே நேரத்தில் தங்கத்தில் முதலீடு செய்யும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. உலக சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரிப்பதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. இதன் தாக்கம் இந்திய தங்க சந்தையிலும் தெரிகிறது. சில நாட்களுக்கு முன்பு, டிசம்பர் 15 அன்று, தங்க விலை முதன்முறையாக பவுனுக்கு ரூ.1 லட்சத்து 120க்கு சென்றது. ஆனால் அதன் பின்னர் சில நாட்கள் தங்க விலை அந்த அளவை மீறாமல் இருந்தது.
வெள்ளி விலை
இப்போது மீண்டும் விலை உயர்ந்து, பவுன் ரூ.1 லட்சத்தை தாண்டி நிலைத்திருக்கிறது. தங்கத்துடன் சேர்த்து வெள்ளி விலையும் அதிகரித்து வருகிறது. மின்சாதனங்களை தயாரிக்க வெள்ளி அதிகமாக பயன்படுத்தப்படுவதால், அதன் தேவை அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக வெள்ளி விலை தினமும் உயர்ந்து வருகிறது. சனிக்கிழமை அன்று மட்டுமே ஒரு கிலோ வெள்ளி ரூ.31,000 உயர்ந்து ரூ.2.85 லட்சம் ஆனது. இந்த உயர்வு தொடர்ந்தால், விரைவில் ஒரு கிலோ வெள்ளி ரூ.3 லட்சத்தை தாண்டும் என்று சந்தை வட்டாரங்கள் கூறுகின்றன. தங்கமும் வெள்ளியும் இவ்வளவு வேகமாக உயர்ந்து வரும் நிலையில், பொதுமக்கள், குறிப்பாக நகை வாங்க திட்டமிடுபவர்கள் கவலையில் இருக்கிறார்கள். விலை இன்னும் உயருமா அல்லது குறையுமா என்பது குறித்து பொருளாதார நிபுணர்களும் 'காத்திருந்து' கவனித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications