தள்ளாட வைக்குது தங்கம்..ஒரு வாரமா ஆட்டம் காட்டுதே! ஒரே நாளில் ரூ.1600 உயர்வு..இல்லத்தரசிகளுக்கு ஷாக்
சென்னை: தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் கணிசமாக மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடும் சரிவை நோக்கிச் சென்ற தங்கத்தின் விலை மீண்டும் உயரத் தொடங்கியிருக்கிறது. கடந்த ஐந்து நாட்களாக தங்க விலையில் ஏற்பட்ட ஏற்றத் தாழ்வுகள், முதலீட்டாளர்களையும், நகைக்கடை உரிமையாளர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், சென்னையில் இன்று ஒரே நாளில், ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ. 200 உயர்ந்து ரூ.11,800க்கும், சவரனுக்கு ரூ.1600 ரூபாய் உயர்ந்து ரூ.94,400க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு 9 ரூபாய் உயர்ந்து 182 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தீபாவளி பண்டிகைக்கு முன்பு தங்கத்தின் விலை வேகமாக உயர்ந்த நிலையில், பண்டிகைக்குப் பிறகு திடீரென குறைந்தது. இதனால் திருமண நகை வாங்க திட்டமிட்டவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் தங்கத்தின் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளதால், தங்க முதலீட்டாளர்கள் மற்றும் நகை வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அக்டோபர் கடைசி வாரத்தில் தங்கத்தின் விலை ரூ.3,680 வரை சரிந்தது. அதன்பின் அக்டோபர் 28ஆம் தேதி மேலும் ரூ.2,200 குறைந்து, ஒரு சவரன் ரூ.89,000க்கும் கீழ் விற்பனையானது. இந்நிலையில் நவம்பர் முதல்வாரத்திலும் தங்கத்தின் விலை சரிந்த நிலையில், இரண்டாவது வாரத்தில் உயரத் தொடங்கியது.
தங்கம் விலை நிலவரம்
நவம்பர் 9ஆம் தேதி தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.11,300, ஒரு பவுனுக்கு ரூ.90,400 என விற்பனை செய்யப்பட்டது. ஆனால் அதே நாளில் இருமுறை விலை உயர்வு ஏற்பட்டது. காலை விலை அதிகரித்து ஒரு சவரன் ரூ.91,280 ஆகவும், மாலை மேலும் உயர்ந்து ரூ.91,480 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. இதனையடுத்து, நவம்பர் 11-ஆம் தேதி தங்க விலை மேலும் ஏறி, ஒரு கிராமுக்கு ரூ.11,700, ஒரு பவுனுக்கு ரூ.93,600 என்ற அளவுக்கு சென்றது. இதே சமயத்தில் வெள்ளி விலையும் அதிகரித்தது. ஒரு கிராமுக்கு ரூ.170, ஒரு பார் ரூ.1,70,000 என விற்பனை செய்யப்பட்டது.
நேற்று தங்கம் விலை
ஆனால் நேற்று (நவம்பர் 12) சிறிய அளவில் விலை குறைந்தது. சென்னையில் நேற்று ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.11,600க்கும், ஒரு சவரன் ரூ.800 குறைந்து ரூ.92,800க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையும் சிறிய மாற்றத்துடன் கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.173 ஆக விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஐந்து நாட்களின் சராசரி விலை நிலவரத்தைப் பார்க்கும் போது, தங்க விலை ஒரு பவுனுக்கு ரூ.90,160 முதல் ரூ.92,800 வரை மாறியிருக்கிறது. அதேபோல், வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.165 லிருந்து ரூ.173 வரை உயர்ந்துள்ளது.
இன்றைய தங்கம் விலை
இந்நிலையில், இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், சென்னையில் இன்று ஒரே நாளில், ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ. 200 உயர்ந்து ரூ.11,800க்கும், சவரனுக்கு ரூ.1600 ரூபாய் உயர்ந்து ரூ.94,400க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு 9 ரூபாய் உயர்ந்து 182 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி கிலோவுக்கு ரூ.9000 உயர்ந்து, 1 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது
திருமண சீசன்
தங்கம் விலையின் இந்த ஏற்றத்திற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. முதன்மையாக, தீபாவளி மற்றும் திருமண சீசன் என்பதால் மக்கள் தங்கத்தை அதிக அளவில் வாங்கத் தொடங்கியுள்ளனர். பண்டிகை நாட்களில் நகை வாங்குவது நன்மை தரும் என நம்பும் பாரம்பரியம் காரணமாக விற்பனை அதிகரித்துள்ளது. இதுவே விலை உயர்வுக்கான முக்கிய காரணமாக குறிப்பிடப்படுகிறது. அதே சமயம், உலக தங்கச் சந்தையில் ஏற்பட்ட விலை மாற்றங்கள், அமெரிக்க டாலரின் மதிப்பில் ஏற்பட்ட அதிர்வுகள், மேலும் இந்தியாவில் முதலீட்டாளர்களின் தங்க முதலீடு அதிகரித்தது போன்ற காரணங்களும் தங்க விலையை உயர்த்தியுள்ளன.
தங்கம் விலை அதிகரிக்குமா?
நிபுணர்கள் கூறுவதாவது, "தங்கம் எப்போதுமே பாதுகாப்பான முதலீடாகவே கருதப்படுகிறது. பங்குச்சந்தை மற்றும் டாலர் மதிப்பில் நிலை குலைந்தால், முதலீட்டாளர்கள் தங்கத்தை விரும்புகின்றனர். இதனால் தான் கடந்த வாரங்களில் விலை தொடர்ந்து உயர்வதும், சில நாட்களில் சிறு அளவில் குறைவதும் நடந்துள்ளது" என்கிறார்கள். தற்போதைய சூழலில், தீபாவளிக்கு பின் தங்கம் விலை மீண்டும் உயரக்கூடும் என்றும், வெள்ளி விலையும் அதனோடு சேர்ந்து அதிகரிக்கும் வாய்ப்புகள் இருப்பதாகவும் நகைக்கடையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.












Click it and Unblock the Notifications