சர்வதேச மார்கெட்டில் பட்டென எகிறிய தங்கம் விலை.. புதிய உச்சம்! காரணம் வேற யாரும் இல்லை டிரம்ப் தான்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் சற்று நேரத்திற்கு முன்பு ரெசிப்ரோக்கல் வரி குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இதற்கிடையே சர்வதேச மார்க்கெட்டில் தங்கம் விலை மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஒரே நாளில் சர்வதேச சந்தையில் தங்கம் விலை கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், அது இந்தியச் சந்தையிலும் எதிரொலிக்கும் என அஞ்சப்படுகிறது.
அமெரிக்கா மீது உலக நாடுகள் அதிக வரி வசூலிப்பதாக இத்தனை காலம் கூறி வந்த டிரம்ப், இப்போது ரெசிப்ரோக்கல் வரியை அறிவித்துள்ளார். அதாவது உலக நாடுகள் எவ்வளவு வரி விதிக்கிறதோ.. அதற்கேற்ப அந்த நாடுகள் மீது வரி விதிப்போம் என்பதே இதன் அடிப்படை.

டிரம்ப்
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ரெசிப்ரோக்கல் வரி குறித்த அறிவிப்பை வெளியிட்டார். முழுமையான ரெசிப்ரோக்கல் வரியை அறிவிக்கவில்லை என குறிப்பிட்ட அதிபர் டிரம்ப், சலுகையுடன் கூடி ரெசிப்ரோக்கல் வரியையே இப்போது விதிப்பதாகக் குறிப்பிட்டு அறிவிப்பை வெளியிட்டார். 10% முதல் 49% வரை பல நாடுகளுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்திய இறக்குமதிகளுக்கு 26% வரியை அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்கம்
இதற்கிடையே டிரம்பின் இந்த தடாலடி ரெசிப்ரோக்கல் வரி காரணமாகச் சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. உலகப் பொருளாதாரத்தில் நிலவும் நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் வர்த்தக மோதல்கள் காரணமாகத் தங்கத்தின் விலை தொடர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் (சுமார் 28.3 கிராம்) சுமார் ₹2,59,000 (கிராமுக்கு சுமார் ₹8,330)ஆக உயர்ந்தது. அதாவது ஒரே நாளில் 0.3% வரை உயர்ந்துள்ளது. டிரம்பின் ரெசிப்ரோக்கல் வரி மட்டுமின்றி, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவில் நிலவும் போர் சூழல்களும் இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
இந்திய மார்கெட்
இந்தியாவில் ஏற்கனவே தங்கம் விலை இதை விட அதிகமாகவே இருக்கிறது. சென்னையில் நாட்டில் 22 கேரட் தங்கமே கூட நேற்று கிராமுக்கு ரூ.8500ஐ கடந்தது. இந்தியாவில் தான் ஏற்கனவே அதிகமாக இருக்கே.. அப்போ ரேட் அதிகரிக்காதே என்ற கேள்வி உங்களுக்கு வரலாம்.. ஆனால், அது அப்படி அல்ல.. இந்தியாவில் தங்க இறக்குமதிக்கு 6% இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. இதன் காரணமாகவே நமது நாட்டில் தங்கம் விலை அதிகமாக இருக்கிறது.
அதேநேரம் சர்வதேச சந்தையில் இப்போது ஒரே நாளில் 0.3% தங்கம் விலை அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவிலும் இன்று தொடங்கி வரும் நாட்களில் தங்கம் விலை அதிகரிக்கும் என்பதே வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது.
தங்கம் விலை உயர என்ன காரணம்?
முன்னதாக இந்த மாத தொடக்கத்தில், தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் முதல் முறையாக அவுன்ஸ் ஒன்றுக்கு ₹2,50,000 (கிராமுக்கு சுமார் ₹8,038)ஐ தாண்டியது. சர்வதேச அளவில் பொருளாதார சிக்கல் நிலவும் காலங்களில் முதலீட்டாளர்கள் பொதுவாகப் பாதுகாப்பான முதலீடாகக் கருதி தங்கத்தில் முதலீடு செய்வார்கள்.
அதாவது பொருளாதார கொந்தளிப்பு, போர்க் காலங்கள், பெருந்தொற்று என எந்தவொரு பதற்றமான சூழலாக இருந்தாலும் அதுபோன்ற காலங்களில் தங்கம் தான் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும். மேலும் மார்கெட் நிலைமைகள் நிச்சயமற்றதாகத் தோன்றும்போது தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிக்கும். இதன் காரணமாகவே நிச்சயமற்ற காலங்களில் தங்கம் விலை அதிகரிக்கும்












Click it and Unblock the Notifications