தங்கம் விலை கூடுறதுக்கு முக்கிய காரணமே இவங்கதானா.. டன் கணக்கில் வாங்கி குவிக்கும் நாடு எது தெரியுமா?
சென்னை: தங்கம் விலை தொடர்ந்து தடாலடியாக உயர்ந்து வருகிறது. தினந்தோறும் புது உச்சம் தொட்டும் வரும் தங்க விலையால் நகை பிரியர்கள் அச்சமடைந்துள்ளனர். தொடர்ந்து தங்கம் விலை உயர்வுக்கு பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கி குவிப்பதே காரணம் ஆகும். கடந்த 28 மாதங்களில் மத்திய வங்கிகள் 28 முறை தங்கத்தை வாங்கியுள்ளன. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் மத்திய வங்கிகள் 18 டன் தங்கத்தை வாங்கியுள்ளதாம்.
தங்கம் விலை கடந்த சில மாதங்களாக வரலாறு காணாத உச்சத்தை எட்டி வருகிறது. இந்த ஆண்டு துவக்கத்தின் 57 ஆயிரமாக இருந்த தங்கம் விலை வெறும் 9 மாதங்களில் 34 ஆயிரம் அதிகரித்துள்ளது. தினமும் உச்சத்தை தொட்டு ஏழை மற்றும் நடுத்தர மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

தங்கம் விலை உயர்வு காரணம்
தங்கம் விலை உயர்வுக்கு சர்வதேச அளவில் நிலவும் போர் பதற்றம் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளே காரணமாக சொல்லப்படுகிறது. இதனால், இதுவரை இல்லாத அளவிற்கு தங்கம் விலையானது உச்சம் தொட்டுள்ளது. தங்கம் விலை அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கி குவிப்பதே ஆகும்.
சர்வதேச அளவிலான போர் பதற்றம் போன்ற காரணங்களால் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதி பல்வேறு நாடுகளும் தங்கள் தங்கத்தின் கையிருப்பை அதிகரித்து வருகின்றன. இதனால் தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
கஜகஸ்தான் நாடு
தங்கம் விலை ஏற்றத்திற்கு முக்கிய காரணமாக பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் அதிக அளவு தங்கத்தை வாங்கி குவிப்பதே காரணமாக சொல்லப்படுகிறது. கடந்த 28 மாதங்களில் மத்திய வங்கிகள் 28 முறை தங்கத்தை வாங்கியுள்ளன. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் மத்திய வங்கிகள் 18 டன் தங்கத்தை வாங்கியுள்ளன.
இதில் பாதிக்கும் மேலான தங்கத்தை கஜகஸ்தான் பெற்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதன் மூலம் அந்த நாட்டின் ஒட்டுமொத்த தங்க இருப்பு 308 டன்களாக உயர்ந்துள்ளது. இதில் எந்தெந்த நாடுகள் தங்கத்தை அதிகம் வாங்கியுள்ளன என்ற விவரமும் வெளியாகியுள்ளது.
அதிக தங்கம் யாரிடம் உள்ளது
இதன்படி பார்த்தால் பல்கேரியா, துருக்கி மற்றும் சீனாவின் மத்திய வங்கிகள் தங்கத்தை அதிக அளவில் வாங்கியுள்ளன. சீனாவின் மத்திய வங்கி தொடர்ந்து 10வது மாதமாக தங்கத்தை வாங்கியுள்ளது. சீனாவின் தங்க இருப்பு 2,200 டன்களுக்கு மேல் இருக்கும் என்று தரவுகள் கூறுகின்றன.
இருப்பினும், அதிக தங்க கையிருப்பு வைத்து இருக்கும் நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டிடம் மட்டும் 8,133 டன்கள் உள்ளது. அமெரிக்கா 35 ஆண்டுகளாக தங்கத்தின் இருப்பை குறையாமல் அப்படியே வைத்து வருகிறது. அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தில் ஜெர்மனி உள்ளது. ஜெர்மனியிடம் மட்டும் 3,350 டன் தங்கம் உள்ளது.
இந்த வரிசையில் 3வது இடத்தில் இத்தாலி உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் பிரான்ஸ், ரஷ்யா உள்ளது. இந்த நாடுகளிடம் 2,400க்கும் அதிகமான டன்கள் தங்கம் உள்ளது. சீனா 2,301 டன்களுடன் ஆறாம் இடத்தில் உள்ளது. சுவிட்சர்லாந்து 1,040 டன் தங்கத்துடன் 7வது இடத்தில் உள்ளது. இந்தியா 840 டன் தங்கம் வைத்துள்ளது. ஜப்பான் 846 டன் தங்கம் வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications
