சறுக்கலில் இருந்து விஸ்வரூபம்.. இந்த ஏப்ரலில் தலைகீழாகும் தங்கம்.. பீட்டர் ஷிஃபின் அதிரடி கணிப்பு!
சென்னை: சமீபகாலமாக தங்கம் விலை 'ஏற்றம் இறக்கம்' என்கிற கண்ணாமூச்சி ஆட்டத்தில் முதலீட்டாளர்களைக் குழப்பிக் கொண்டிருந்தது. குறிப்பாக, மார்ச் மாதத்தில் மட்டும் தங்கம் சுமார் 11% சரிவைச் சந்தித்து, 2008-க்குப் பிறகு மிக மோசமான மாதமாகப் பதிவானது. ஆனால், "இது வெறும் ஆரம்பம்தான், இனிமேல்தான் ஆட்டம் சூடுபிடிக்கப் போகிறது" எனப் பட்டாசைப் பற்ற வைத்திருக்கிறார் பிரபல முதலீட்டாளர் பீட்டர் ஷிஃப்.
தங்கம் விலை விரைவில் 5,000 டாலரைத் தாண்டி, 6,000 டாலர் வரை எகிறும் என்பதுதான் அவரது தற்போதைய ஹாட் டாபிக் கணிப்பு.

மார்ச் சரிவு... ஏப்ரல் எழுச்சி!
தன்னுடைய பிறந்தநாளான மார்ச் 23-ம் தேதியிலிருந்து தங்கம் விலை மீண்டெழுந்ததை சுட்டிக்காட்டிய பீட்டர் ஷிஃப், எக்ஸ் (X) தளத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். "தங்கம் தற்போது 4,700 டாலருக்கு மேல் உள்ளது. மார்ச் 23-க்குப் பிறகு வெறும் ஒரே வாரத்தில் தங்கம் 15% லாபத்தைக் கொடுத்துள்ளது. மார்ச் மாதம் தங்கம் சந்தித்த மிகப்பெரிய சறுக்கல், ஏப்ரல் மாதத்தில் 1980-க்குப் பிந்தைய மிகப்பெரிய ஏற்றத்திற்கு வழிவகுக்கலாம்" என உற்சாகம் ததும்பக் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச சந்தையில் தங்கம் மீண்டும் 4,800 டாலர் கோட்டைக்கு அருகில் நகர்வதைப் பார்க்கும்போது, ஷிஃபின் கணிப்புகள் வெறும் வார்த்தைகள் மட்டுமல்ல என்பது புரிகிறது.
டாலரா? தங்கமா? - எது கெத்து?
தங்கத்தின் இந்த அதிரடி உயர்வுக்குப் பின்னால் போர்ப் பதற்றங்கள் ஒரு காரணமாக இருந்தாலும், அது மட்டுமே முழுமையான காரணம் அல்ல என்கிறார் ஷிஃப். முதலீட்டாளர்கள் இப்போது அமெரிக்க டாலரை விட தங்கம் போன்ற 'Hard Assets' எனப்படும் நிலையான சொத்துக்களின் பக்கம் நகரத் தொடங்கியுள்ளனர்.
"அரசியல் களத்தில் ட்ரம்ப் என்ன பேசினாலும், போர் எந்தத் திசையில் நகர்ந்தாலும், அது டாலரின் மதிப்பைக் குறைத்து தங்கத்தின் மதிப்பையே உயர்த்தப்போகிறது. பணவீக்கம், அதிகரித்து வரும் கடன் சுமை, பொருளாதார மந்தநிலை மற்றும் வேலைவாய்ப்பின்மை போன்ற காரணிகள் சந்தையைக் கவ்விப் பிடிக்கக் காத்திருக்கின்றன. இத்தகைய சூழலில் காகிதப் பணத்தை விடத் தங்கமே சிறந்த பாதுகாப்பாக இருக்கும்" என்பதே அவரது வாதம்.
தற்போதைய நிலவரம் என்ன?
சர்வதேச நிலவரங்களின்படி, ஈரான் மீதான ராணுவத் தாக்குதல்கள் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை 6% வரை எகிறியது. இது பணவீக்க அச்சத்தை அதிகப்படுத்தியுள்ளதால், வட்டி விகிதக் குறைப்பு குறித்த எதிர்பார்ப்புகளும் தள்ளிப்போயுள்ளன.
இதன் விளைவாக சர்வதேச சந்தையில் தங்கம் விலை 2% சரிந்து 4,664.39 டாலராக நிலைகொண்டது. உள்ளூர் சந்தையைப் பொறுத்தவரை 24 காரட் தங்கம் 10 கிராமுக்கு ₹1,48,966 என்ற அளவிலும், வெள்ளி கிலோ ₹2,33,336 என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகிறது.
முதலீட்டாளர்களுக்கு ஷிஃபின் அட்வைஸ்!
"தங்கம் விலை 5,000 டாலரைத் தொட்டு, பின்னர் 6,000 டாலருக்கு எகிறும்போது வருத்தப்படுவதை விட, இப்போதே வாங்குவது புத்திசாலித்தனம். தங்கம் என்னும் ரயில் நிலையத்தை விட்டு வெகுதூரம் செல்வதற்குள் அதில் ஏறிவிடுங்கள்" என முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் பீட்டர் ஷிஃப்.
பொதுவாக கச்சா எண்ணெய் விலை உயர்வும், நீண்ட காலப் போரும் பங்குச்சந்தை மற்றும் பத்திரச் சந்தைக்கு (Bonds) வேட்டு வைக்கும் என்றாலும், தங்கத்திற்கு அவை ஒரு உரம்போலச் செயல்படும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.












Click it and Unblock the Notifications