தம்பி எனக்கு வயசே ஆகாது.. 39 வயதிலும் மாஸான சம்பவம் செய்த மெஸ்ஸி.. இதுதான்டா அர்ஜென்டினா!
டல்லாஸ்: ஜோர்டான் அணிக்கு ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து லீக் போட்டியில் அர்ஜெண்டினா அணி 3-1 என்ற கணக்கில் வென்று அசத்தியுள்ளது. இந்தப் போட்டியில் கடைசி நேரத்தில் களமிறங்கிய நட்சத்திர மெஸ்ஸி அதிரடியாக ஒரு கோல் அடித்து புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார். உலகக்கோப்பை தொடரில் தொடர்ச்சியாக 7 போட்டிகளில் கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார்.
கால்பந்து உலகின் ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, சர்வதேச கால்பந்து வரலாற்றில் இதுவரை எந்தவொரு வீரரும் செய்திராத ஒரு மாபெரும் உலக சாதனையைப் படைத்து மீண்டும் தன்னை 'GOAT' என நிரூபித்துள்ளார். உலகக்கோப்பை வரலாற்றில் தொடர்ச்சியாக 7 போட்டிகளில் கோல் அடித்த உலகின் முதல் வீரர் என்ற சாதனையை மெஸ்ஸி எட்டியுள்ளார்.

இதற்கு முன்னதாக, உலகக்கோப்பை தொடர்களில் தொடர்ச்சியாக ஆறு போட்டிகளில் கோல் அடித்ததே சாதனையாக இருந்தது. பிரேசில் நாட்டின் ஜாம்பவான் ஜெய்ர்சின்ஹோ (Jairzinho) 1970 உலகக்கோப்பையிலும், பிரான்ஸ் நாட்டின் ஜஸ்ட் ஃபான்டைன் (Just Fontaine) 1958 உலகக்கோப்பையிலும் தொடர்ச்சியாக 6 போட்டிகளில் கோல் அடித்திருந்தனர்.
தற்போது, 2022 உலகக்கோப்பையின் நாக்-அவுட் சுற்றுகள் மற்றும் 2026 உலகக்கோப்பையின் தற்போதைய லீக் போட்டிகள் என அனைத்தையும் சேர்த்து, உலகக்கோப்பை அரங்கில் தொடர்ச்சியாக தாம் விளையாடிய 7 போட்டிகளிலும் கோல் அடித்து இவர்களின் நீண்ட கால சாதனையை மெஸ்ஸி முறியடித்துள்ளார். ஜோர்டான் அணிக்கு எதிரான போட்டியில் மெஸ்ஸி இந்த சாதனையைப் படைத்திருக்கிறார்.
இந்தப் போட்டியில் அர்ஜெண்டினா அணி 3-1 என்ற கணக்கில் அபார வெற்றியைப் பெற்று லீக் சுற்றின் ஜே பிரிவில் முதலிடத்தில் நிறைவு செய்துள்ளது. 39 வயதான லியோனல் மெஸ்ஸி, தனது வயதைக் வெறும் எண்கள் மட்டும்தான் என்பதை நிரூபித்து மைதானத்தில் தொடர்ந்து மேஜிக் செய்து வருகிறார்.
2022ல் அர்ஜென்டினா அணிக்கு உலகக்கோப்பையைப் பெற்றுக் கொடுத்த கையோடு, சர்வதேச கால்பந்திலிருந்து ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போதைய 2026 உலகக்கோப்பைத் தொடரிலும் அர்ஜென்டினா அணியை வழிநடத்தி, அடுத்தடுத்து சாதனைகளைக் குவித்து வருகிறார்.
மெஸ்ஸியின் இந்த வரலாற்றுச் சாதனையைக் கால்பந்து ரசிகர்கள் உலகளவில் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். "கால்பந்து வரலாற்றின் மிகச்சிறந்த வீரர் மெஸ்ஸி தான் என்பதற்கு இந்த ஒரு சாதனை போதும்" என ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் அர்ஜெண்டினா அணியும் வலிமையாக இருக்கிறது. இவர்களுக்கு ஈடுகொடுத்து விளையாட பிரான்ஸ் அணி மட்டுமே இருப்பதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications