Silver Rate Today: தங்கத்தை தூக்கி சாப்பிடும் வெள்ளி.. புதிய உச்சம்! ஆனாலும் எச்சரிக்கும் ஆனந்த் சீனிவாசன்! என்ன காரணம்
சென்னை: இந்தாண்டு தங்கம் மற்றும் வெள்ளி என இரண்டுமே வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டு பெரிய லாபத்தைக் கொடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக வெள்ளி விலை இந்தாண்டு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இன்றைய தினம் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.7 உயர்ந்த நிலையில், வரலாறு காணாத வகையில் அது கிராமுக்கு ரூ.207க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் மற்றும் வெள்ளிக்கு இந்தாண்டு முழுக்க ஒரு மிக சிறப்பான ஆண்டாகவே இருந்துள்ளது. வரலாறு காணாத அளவுக்குத் தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்துவிட்டது. அமெரிக்காவில் டிரம்ப் போடும் உத்தரவுகளால் சர்வதேச வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்படும் நிலையில், இதுவே தங்கம் மற்றும் வெள்ளி விலை உயரப் பிரதானக் காரணமாக இருக்கிறது.

வெள்ளி
இந்தாண்டு தங்கத்தைக் காட்டிலும் வெள்ளி விலையே புதிய உச்சத்தைத் தொட்டு இருக்கிறது. சர்வதேச சந்தையில் வெள்ளி விலை இந்தாண்டு தொடக்கம் முதலே கிட்டத்தட்ட 100% உயர்ந்துள்ளது. இந்தியாவிலும் அதுவே தான் எதிரொலித்துள்ளது. இந்தியாவிலும் ஜனவரி மாதம் முதலே வெள்ளி விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது.
வெள்ளி விலை
தங்கத்தைத் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு வெள்ளி விலை உயர்ந்து வருகிறது. கடந்த மாதமே வெள்ளி விலை ரூ.200ஐ கடந்த நிலையில், பிறகு அது கணிசமாகக் குறைந்திருந்தது. இந்தச் சூழலில் தான் வெள்ளி விலை மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்தது. இன்று வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி ஒரு கிராம் 8 ரூபாய் உயர்ந்து ரூ.207க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ 2.07 லட்ச ரூபாய்க்கு விற்பனையாகிறது.

காரணம் என்ன
அமெரிக்காவில் இன்றைய தினம் பெடரல் வங்கி தனது வட்டி விகிதம் குறித்த அறிவிப்பை வெளியிடுகிறது. இன்று பெரும்பாலும் வட்டி குறைக்கப்படும் என்றே தெரிகிறது. இதுபோல வட்டி குறையும்போது அமெரிக்காவில் டாலர் மதிப்பு குறையும் தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிகரிக்கும். அமெரிக்க பெடரல் வங்கி தனது வட்டி விகிதத்தைக் குறைக்கும் என்ற எதிர்பார்ப்பிலேயே வெள்ளி விலை உயர்ந்துள்ளது.
வெள்ளி விலை இப்படித் தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், பொதுமக்கள் பலரும் வெள்ளியின் பக்கம் திரும்பியுள்ளனர். தங்கம் விலை தான் எங்கோ ராக்கெட்டில் ஏறிப் போய்விட்டது. அந்த வாய்ப்பைத் தான் மிஸ் செய்துவிட்டோம். வெள்ளியைத் தவறவிடக்கூடாது என்பதால் பொதுமக்கள் பலரும் வெள்ளியில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள். கடந்த சில காலமாகவே பலரும் இப்படித் தான் வெள்ளியில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர்.
இருப்பினும், பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் வெள்ளியில் முதலீடு வேண்டாம் என்றே தொடர்ந்து எச்சரித்து வருகிறார். வெள்ளி என்பது தங்கத்திற்கு மாற்றாக ஆகவே ஆகாது என்பது அவரது கருத்து. தங்கத்தை போல இல்லாமல் வெள்ளிக்குத் தொழில்துறையில் அதிகம் பயன்படுத்தப்படும். எனவே, தொழில்துறை தேவைக்கு ஏற்பவும் வெள்ளி விலை மாறும் என்கிறார்.
ஆனந்த் சீனிவாசன் எச்சரிக்கை
மேலும், அமெரிக்க பெடரல் வங்கி, இந்திய ரிசர்வ் வங்கி உள்ளிட்ட உலக நாடுகளின் வங்கிகள் எப்போதும் தங்கத்தையே வாங்கி சேமித்து வருகிறது என்பதைக் குறிப்பிடும் அவர், எப்போது உலக நாடுகள் வெள்ளியை வாங்கி குவிக்கிறதோ.. அப்போது தான் அதில் முதலீடு செய்வது பற்றி யோசிக்க வேண்டும் என்கிறார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications