சென்னையில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 400 குறைந்தது.. 7 நாளில் எக்குத்தப்பான மாற்றம்
சென்னை: தங்கம் விலை கடந்த அக்டோபர் 17ம் தேதி அன்று ஒரு பவுன் ரூ.97 ஆயிரத்து 600 ஆக இருந்தது. ஆனால் அதன்பிறகு கடந்த 10 நாட்களாக தங்கம் விலையில் பெரும் சரிவு ஏற்பட்டு வருகிறது. காலையில் ஏறுவதும், மாலையில் கடுமையாக வருவதுமாக இருக்கிறது. அக்டோபர் 25ம் தேதி அன்று தங்கம் விலை காலையில் 800 ரூபாய் ஏறிய நிலையில் மாலையில் மீண்டும் 800 ரூபாய் சரிந்து 92000 ஆக மாறியது. ஆனால் அக்டோபர் 27 தேதியான இன்று தங்கம் ஒரு சவரனுக்கு 400 ரூபாய் குறைந்துள்ளது
தங்கம் விலை கடந்த 4 வருடங்களில் நம்பவே முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது. தங்கத்தில் ஒருவேளை ஒருவர் பல கோடி முதலீடு செய்திருந்தால், இன்று அப்படியே இரு மடங்கு லாபம் கிடைத்திருக்கும். பங்கு சந்தையில் உள்ள பல நிறுவனங்களின் பங்குகளையும் விட தங்கத்தால் லாபம் கொட்டி வருகிறது.

பொதுவாக தங்கம் என்பது ஆபத்தான சமயங்களில் கைகொடுக்கும் ஒன்று. பங்கு சந்தையில் முதலீடு செய்பவர்கள், திடீரென ஏற்படும் சிக்கல்களின் போது தங்கத்தில் தான் முதலீடு செய்வார்கள். அந்த வகையில் அமெரிக்கா திடீரென இந்தியாவிற்கு விதித்த வரி, ரஷ்யா அமெரிக்கா இடையிலான மறைமுக மோதல், சீனா அமெரிக்கா இடையில் வர்த்தக போர், இஸ்ரேல் காசா போர், ரஷ்யா உக்ரைன் போர் மற்றும் அமெரிக்காவின் வரி மிரட்டல்கள் போன்ற காரணங்களால் உலக அளவில் தங்கம் விலை தாறுமாறாக ஏற தொடங்கியது.
இதனால் தங்கம் விலை கடந்த சில வருடங்களாகவே வேகமாக ஏறியது. வெறும் ஒன்றரை வருடத்தில் கிடத்தட்ட 40 ஆயிரம் ரூபாய் வரை ஏறி உள்ளது.தங்கம் விலை கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஏறி உள்ளது.
ஒரு கட்டத்தில் ஒரு கிராம் 12 ஆயிரத்தை தாண்டி உச்சம் பெற்றது. அதற்கு அடுத்த நாளே அதாவது, அக்டோபர் 17ம் தேதி அன்று தங்கம் விலை ஒரு சவரன் 97 ஆயிரத்து 600 ரூபாய் என்கிற நிலையை எட்டியது. ஒரு கிராம் 12 200 என்ற ஆக உயர்ந்தது.ஆனால் அடுத் நாளில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு 1600 ரூபாய் வரை குறைந்தது. இதனால் ஒரு சவரன் அக்டோபர் 18ம் தேதி நிலவரப்படி 96000 ஆக இருந்தது. அக்டோபர் 19ம் தேதி அன்று விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை..
ஆனால் அக்டோபர் 20ம் தேதியான தீபாவளி அன்று ஒரு கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 95 ஆயிரத்து 360 ஆக குறைந்தது. தீபாவளிக்கு மறுநாள் மட்டும் சற்று அதிகமாகி பழைய படி 96000 ஆக விற்பனை ஆனது. ஆனால் அக்டோபர் 22ம் தேதி அன்று ஒரு சவரன் தங்கம் மிகப்பெரிய அளவுக்கு சரிந்தது. 3680 ரூபாய் ஒரு நாளில் குறைந்தது. இதனால் தங்கம் விலை ஒரு சவரன் 92 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
கடந்த அக்டோபர் 23ம் தேதி அன்று கிராமுக்கு ரூ.100-ம், பவுனுக்கு ரூ.800-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 400-க்கும், ஒரு பவுன் ரூ.91 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்பட்டது, இதன் மூலம் தங்கம் விலை ரூ.92 ஆயிரத்துக்கு கீழ் சென்றிருக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கிராமுக்கு ரூ.800-ம், பவுனுக்கு ரூ.6,400-ம் குறைந்து இருந்தது.
இந்நிலையில் அக்டோபர் 25ம் தேதி காலையில் ஒரு சவரனுக்கு 800 ரூபாய் ஏறியது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் 92800க்கு விற்பனையானது. ஆனால் மாலையில் தங்கம் விலை பழையபடி 800 குறைந்து 92000க்கு விற்பனையாகிறது. இந்நிலையில் அக்டோபர் 27ம் தேதியான இன்று சென்னையில் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 91,600 ரூபாய்க்கு விற்கிறது. ஒரு கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து, 22 கேரட் தங்கம் ஒரு கிராம் 11,450க்கு சென்னையில் விற்பனையாகிறது.
வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.170-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது. அக்டோபர் 25ம் தேதி, அக்டோபர் 26ம் தேதிகளை தொடர்ந்து அக்டோபர் 27ம் தேதியான இன்றும், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.












Click it and Unblock the Notifications