தங்கம் வேண்டாம் என்ற மோடி.. தள்ளிப்போகும் விஜய்யின் தாய் மாமன் சீர்? சாக்கு சொல்லும் தமிழக அரசு?
சென்னை: நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 'பெண்களின் தாய் மாமனாக இருப்பேன்' என்று தாய்மாமன் வாக்குறுதி அளித்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் தமிழக முதல்வர் விஜய், தனது கவர்ச்சிகரமான 'தாய் மாமன் சீர் திட்டத்தை' தள்ளிப்போடும் முடிவில் இருப்பதாக கோட்டை வட்டாரத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய பேச்சை தமிழக அரசு ஒரு கவசமாகப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
விஜய்யின் மெகா வாக்குறுதி
தேர்தல் பிரசாரத்தின் போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிவித்த முக்கியமான திட்டம் 'அண்ணன் சீர்' மற்றும் 'தாய் மாமன் சீர்'. குறிப்பாக ஏழைப் பெண்களுக்குத் திருமணத்தின் போது 1 பவுன் (8 கிராம்) தங்கம் மற்றும் சீர் வரிசைகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு, கிராமப்புற பெண் வாக்காளர்களைப் பெருமளவில் கவர்ந்தது. ஆட்சிப் பொறுப்பேற்று நம்பிக்கை வாக்கெடுப்பிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்தத் திட்டத்தை எப்போது தொடங்குவார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது.

மோடியின் திடீர் வேண்டுகோள்
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "நாட்டின் பொருளாதார நலன் கருதி அடுத்த ஒரு ஆண்டிற்குப் பொதுமக்கள் தங்கம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார். மேற்கு ஆசியப் போர்ச் சூழல் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு பாதிக்கப்படுவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
நிதியமைச்சர் போடும் கணக்கு
பிரதமரின் இந்தப் பேச்சை தமிழக அரசின் நிதியமைச்சகம் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. தமிழகத்தின் கடன் சுமை ஏற்கனவே 10 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ள நிலையில், தங்கம் வழங்கும் திட்டத்திற்குப் பல ஆயிரம் கோடிகள் தேவைப்படும். தற்போது தங்கம் விலை சவரன் 70,000 ரூபாயைத் தாண்டிச் சென்று கொண்டிருப்பதால், இப்போதைக்குத் தங்கம் வாங்குவது அரசு கஜானாவைக் காலி செய்துவிடும் என அதிகாரிகள் முதல்வர் விஜய்க்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
'மத்திய அரசின் கொள்கை' - சாக்கு சொல்கிறதா TVK?
கோட்டை வட்டாரத் தகவல்களின்படி, "நாட்டின் பொருளாதார நலன் கருதி தங்கம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் சொல்லியிருக்கும் போது, மாநில அரசு மட்டும் போட்டிப் போட்டுக் கொண்டு தங்கம் வாங்கினால் அது தேச நலனுக்கு எதிரானது" என்ற வாதத்தை முன்வைத்து இத்திட்டத்தைத் தள்ளிப்போட விஜய் அரசு ஆலோசித்து வருகிறதி தாம்.
ஆனால், எதிர்க்கட்சிகள் இதை வேறு கோணத்தில் பார்க்கின்றன. "தேர்தலில் வாக்குறுதிகளை அள்ளி வீசிய விஜய், இப்போது நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க முடியாமல் மோடியின் பேச்சை ஒரு சாக்காகப் பயன்படுத்திக் கொள்கிறார். தாய் மாமனாக வருவேன் என்று சொன்னவர், இப்போது பட்ஜெட்டைக் காட்டிப் பின்வாங்குவது மக்களை ஏமாற்றும் செயல்" என்று விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளன.
தள்ளிப்போகும் திருமணங்கள்?
முதல்வர் விஜய்யின் தங்கம் வழங்கும் திட்டத்தை நம்பிப் பல ஏழைக் குடும்பங்கள் தங்கள் வீட்டுத் திருமணங்களைத் திட்டமிட்டிருந்தன. இப்போது இத்திட்டம் ஓராண்டுக்குப் பின்போ அல்லது காலவரையின்றியோ தள்ளிப்போகலாம் என்ற செய்தி அவர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளளது.
"பிரதமர் சொன்னது முதலீட்டுக்காகத் தங்கம் வாங்குபவர்களுக்குப் பொருந்தலாம். ஆனால் ஒரு ஏழைப் பெண்ணின் திருமணத்திற்குத் தங்கம் வழங்குவது என்பது அத்தியாவசியமானது. அதைத் தள்ளிப்போட மத்திய அரசின் பேச்சைத் துணைக்கு அழைப்பது ஒரு முதல்வருக்கு அழகல்ல" என சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications