உவ்வே.. தான்.. ஆனால் உயிரை தீர்மானிக்கும் சக்தி.. மனித மலத்தை சேகரிக்கும் விஞ்ஞானிகள்!
நுண்ணுயிர்களை பாதுகாப்பதற்காக மனித மலங்களின் மாதிரிகளையும் மற்றும் பிற உயிரியல் பொருட்களையும் சேகரிப்பதற்கான முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டிருக்கிறார்கள்.
லண்டன்: நாம் சாப்பிடும் ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு நல்ல பாக்டீரியா எது கெட்ட பாக்டீரியா எது என்று தெரிவது இல்லை. அவை கண்ணை மூடிக்கொண்டு அழிப்பதால், பல நல்ல பாக்டீரியாக்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. எனவே அவற்றை பாதுகாப்பதற்காக மனித மலங்களின் மாதிரிகளையும் மற்றும் பிற உயிரியல் பொருட்களையும் சேகரிப்பதற்கான முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டிருக்கிறார்கள்.
சுவிட்சர்லாந்தில் இதற்காக மிகப்பெரும் ஆய்வு கூடத்தில் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அத்துடன் கிரீன்லாண்ட் மற்றும் அர்ஜென்டினா படகோனியா போன்ற பிற இடங்களிலும் விரைவில் கிளைகள் திறப்பதற்கு திட்டமிடப்பட்டு வருகிறது.
நம்முடைய உடல் ஆரோக்கியத்தில், பல்வேறு நுண்ணுயிரிகள் எவ்வளவு முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை புரிந்து கொள்ள இந்த ஆராய்ச்சி முக்கியமாக பார்க்கப்படுகிறது.

பாக்டீரியாக்கள்
மலம் சேமிப்பு வங்கி தொடர்பாக பிபிசி வெளியிட்ட செய்திகளின் படி, விதை சேகரிப்பு பற்றி நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட வகை தானியங்களோ அல்லது காய்கறிகளோ அழியும் நிலைக்கு சென்றால், நாம் சேகரித்து வைத்திருக்கும் விதைகளைக் கொண்டு நம்மால் மீண்டும் அந்த தானியங்களையோ, செடிகளையோ பயிரிட முடியும். இதே போன்று பாக்டீரியாக்களை பாதுகாப்பதற்காக தற்போது மல வங்கி உருவாக்கப்படுகிறது.

அமெரிக்க மக்கள்
நுண்ணுயிரியலாளர் மரியா குளோரியா டொமிங்குஸ்-பெல்லோ, பிபிசி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், இந்த நுண்ணிய உயிரினங்களின் பன்முகத்தன்மை சமீபத்திய ஆண்டுகளில் வெகுவாக குறைந்து வருகிறது. அமேசான் பழங்குடி மக்களிடம் நாங்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியின்போது நாங்கள் கண்டறிந்தது என்னவென்றால், அமெரிக்க மக்களின் குடல்களில் காணப்படும் பல வகையான பாக்டீரியாக்களை விட, இரண்டு மடங்கு அதிகளவில் பல்வேறு வகையிலான பாக்டீரியாக்களை அமேசான் பழங்குடிகள் தங்களது குடல்களில் கொண்டிருக்கிறார்கள்.

அமெரிக்கா
நகரத்தில் வாழும் தங்களுடைய உடல் பிரச்னைகளுக்காக அதிகளவிலான ஆண்டிபயாடிக் மருந்துகள் எடுத்துக் கொள்கிறார்கள். அதன் விளைவாக அவர்கள் தங்களது உடலில் இருக்கும் பல வகையான நல்ல பாக்டீரியாக்களை இழக்கிறார்கள்" என்று அமெரிக்காவின் ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் மரியா குளோரியா தெரிவிக்கிறார்.

சிறிய நகரம் அது
நமது செரிமான அமைப்பில் இயங்கும் 'மைக்ரோபயோட்டா' (microbiota) உடலில் இருக்கும் பல்வேறு வகையான நுண்ணியிரிகளுக்கு முக்கியமான இடமாக இருக்கிறது. நமது ஆரோக்கியத்திற்கு தேவையான சுமார் 100 பில்லியன் வகையான பல்வேறு நுண்ணுயிரிக்களை 'மைக்ரோபயோட்டா' கொண்டிருக்கிறது என சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது. எனவே நமது வயிறானது இத்தனை பல்வேறு உயிரினங்கள் வாழும் ஒரு சிறிய நகரமாக செயல்படுகிறது. இந்த நிலையில், இந்த பல்லுயிர்கள் சமீபத்திய ஆண்டுகளில் சிறிது சிறிதாக அழிந்து வருகிறது என சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.

நார்சத்து
உணவுகளை நாம் பிரிட்ஜில் வைப்பதும், பதப்படுத்த துவங்கியதும் இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம். அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு தேவையான உணவுகளை சேகரிப்பதற்கு இந்த நவீன முறைகள் உதவி வந்தாலும், இதுவே இந்த பாக்டீரியாக்களின் அழிவிற்கும் காரணமாக அமைந்திருக்கிறதாம். கடந்த 20 ஆண்டுகளில் பிரேசில் மக்கள் தங்களது முக்கிய உணவான, நார்சத்து மிகுந்த பீன்ஸ் காய்களை எடுத்து கொள்ளும் அளவு கணிசமாக குறைந்திருக்கிறது என்றும் மாறி வரும் உணவு பழக்கங்கள், நமது உடல்களில் பல தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்றும் கூறப்படுகிறது.

சிசேரியன்
மனிதர்கள் நார்சத்துகள் மிகுந்த உணவுகளை எடுத்து கொள்வது மிகவும் அவசியம். அதுதான் நமது குடல்களில் உள்ள நுண்ணுயிர்களுக்கு முக்கிய உணவாக இருக்கிறது.இந்த நார்சத்துகள்தான் நமது குடல்களிலிருந்து, எந்தவொரு தொந்தரவுகளும் இல்லாமல் எளிமையாக மலம் வெளியேறுவதற்கு உதவி புரிகிறது.அதேசமயம், நாம் எடுத்துக்கொள்ளும் ஆண்டிபயாடிக் மருந்துகளும் நமது உடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை சத்தமில்லாமல் அழிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆண்டிபயாடிக் மருந்துகள் நல்ல பாக்டீரியாக்கள், கெட்ட பாக்டீரீயாக்கள் என்ற பேதம் இல்லாமல், இது அனைத்து வகையான பாக்டீரியாக்களையும் அழிக்கிறது. எனவே இது நமது குடலின் மைக்ரோபயோட்டாவில், ஒரு சமநிலையற்ற தன்மையை உருவாக்குகிறது.
இதன் காரணமாக நல்ல பாக்டீரியாக்கள் நிறைய அழிந்துவிடுகிறது. அதன் இடங்களையும் சேர்த்து கெட்ட பாக்டீரியாக்கள் ஆக்கிரமித்துக் கொள்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். அதிகரித்து வரும் சிசேரியன் பிரசவ முறைகளும் இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. ஒரு குழந்தை இயற்கையான முறையில் பிரசவிக்கும்போது, அது தனது தாயின் உடலில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்களையும் சேர்த்து எடுத்துக் கொள்கிறது. ஆனால் சிசேரியன் முறையில் அறுவை சிகிச்சை மூலம், நேரடியாக வயிற்றுக்குள் இருந்து குழந்தை எடுக்கப்படும்போது, அதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போகிறது. எனவே இதுவும் அந்த குழந்தைகளின் மைக்ரோபயோட்டாவிற்கு தேவையான பாக்டீரியாக்கள் கிடைக்காமல் போவதற்கு காரணமாக அமைகிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

அழியும் நுண்ணுயிர்கள்
நுண்ணுயிர்கள் தொடர்ந்து உடலில் அழிந்து வரும் நிலையில், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளை அறியவும், இருக்கும் நுண்ணுயிர்களை பாதுகாக்கவும் மனித மலங்களின் மாதிரிகளை சேகரிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்மூலம் பல்வேறு வகையான நுண்ணுயிரிக்களை நம்மால் ஆய்வுகூடத்தில் பாதுகாக்க முடியும் என்கிறார்கள். உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாட்டைச் சேர்ந்த மனிதர்களின் மலங்களை சேகரிப்பதும்; தயிர், சீஸ் போன்ற புளிக்க வைக்கப்பட்ட உணவு வகைகளை சேகரிப்பதும் என இரண்டு வகையில் இதற்கான வேலைகள் நடந்து வருகின்றன என்று பிபிசி தனது செய்தியில் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications