பனம்பழம் சூப்பர்.. பனங்கிழங்கும் பலே.. தமிழக மக்களுக்கு குட்நியூஸ்.. இனிமே இதிலும் "பனைமர பொருட்கள்"
சென்னை: பனைமரம் இந்த மனித குலத்துக்கு தரும் நன்மைகளை பட்டியலிட முடியாது.. அந்தவகையில், தற்போது மக்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி வெளியாகியிருக்கிறது.
பனங்கிழங்குகளை பொறுத்தவரை, வைட்டமின் B, C நிறைந்த இந்த பனங்கிழங்கில் பாதாமுக்கு இணையான சத்துக்கள் உள்ளன. 100 கிராம் பனங்கிழங்கில் 87 கிலோ கலோரிகளும், 77 கிராம் நீர்ச்சத்தும் உள்ளதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை இந்த கிழங்கு பெருக்குகிறது..

சத்துக்கள்: ஆஸ்டியோபோரோசிஸ், கீல்வாதம் போன்ற எலும்பு கோளாறுகளை தடுக்ககூடிய சக்தி இந்த கிழங்குக்கு உண்டு.. ஹீமோகுளோபின் பிரச்சனை இருப்பவர்கள், பனங்கிழங்கை சாப்பிட்டு வந்தால், ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
பனம்பழங்களை எடுத்துக் கொண்டால், கார்போஹைட்ரேட்டு, கொழுப்பு, சர்க்கரை, நார்ச்சத்து, புரோட்டீன், சோடியம், பொட்டாசியம், தாமிரம், துத்தநாகம், வைட்டமின் B6 போன்றவை நிறைந்திருக்கின்றன.. மிகக்குறைந்த அளவு கலோரிகளையும் அதிக அளவு பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்களையும், கொண்டுள்ள இந்த பழம், உடலுக்கு வலு தரக்கூடியது.. எலும்புகள் வளர்ச்சிக்கு உதவக்கூடியது..
பனங்கற்கண்டு: பனங்கற்கண்டுகளை எடுத்துக் கொண்டால், இரும்புச்சத்து, பொட்டாசியம், ஜிங்க், வைட்டமின் பி1,பி2, பி3, ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன. சர்க்கரை நோயிலிருந்து தப்பிக்க உதவும் மிகப்பெரிய துடுப்புதான் இந்த பனங்கற்கண்டு.. வாதம், பித்தத்தை நீக்குகிறது.. இதிலிருக்கும் இரும்புச்சத்து, உடல் பித்தத்தை நீக்குகிறது.
பதநீர்: பதநீரை எடுத்துக் கொண்டால், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த அற்புதமான இயற்கை பானம்... எலும்புத் தேய்மானம் மற்றும் எலும்புத் தொடர்பான நோய்கள் வராமல் பாதுகாக்கும்.
நீர்க்கடுப்பு, சிறுநீர் வெளியேறும் பாதையில் வரக்கூடிய வலிகளைக் குணப்படுத்தும். ரத்த சோகையை போக்கும். பதநீரில் லாக்டோர்ஸ் எனும் சர்க்கரை சத்து மிகவும் அதிகமாக உள்ளது. இது தவிர கொழுப்பு, கால்சியம், புரோட்டீன் சத்துக்களும் உள்ளன. வைட்டமின் பி சத்து கொண்டுள்ள பதநீர் பித்தத்தை நீக்கி இதயத்தை வலுவாக்கும்.
அதாவது, வாழைமரம், தென்னை மரம் போல, பனைமரத்தின் அத்தனை பாகங்களுமே மருத்துவ குணம் நிறைந்தவை. அதனால்தான், தமிழக அரசின் கவனம் எப்போதுமே பனைமரங்களின் மீது இருந்து வருகிறது. இப்போதும் ஒரு குட்நியூஸ் வெளியாகியிருக்கிறது. அந்தவகையில், பனை பொருட்கள் விற்பனையிலும், ஆவின் நிறுவனம் காலடி வைக்க போகிறதாம்.
ஆவின்: நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, ஆவின் நிறுவனம் பால் மட்டுமின்றி, இனிப்பு வகைகள், ஐஸ்கிரீம் உள்ளிட்ட, 230க்கும் மேற்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் விற்பனையிலும் ஈடுபட்டு வருகிறது ஆனால், இப்போது பால் பொருட்கள் உற்பத்தி வெகுவாக குறைந்துவிட்டது.

இப்படிப்பட்ட சூழலி்ல், பனை பொருட்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், பனை வெல்லம், நாட்டு சர்க்கரை, பனங்கருப்பட்டி, சுக்கு காபி பவுடர், பனங்கருப்பட்டி சுக்கு மிட்டாய் மட்டுமின்றி, தேன் விற்பனையிலும் களமிறங்க, ஆவின் நிர்வாகம் களமிறங்க போவதாக தகவல்கள் கூறகின்றன.
வரவேற்பு: இதனால், பெரிய அளவில் விளம்பரம் கிடைப்பதுடன், அரசிடமும் நன்மதிப்பு உயரும் என்று ஆவின் நிறுவனம் நினைக்கிறதாம்.. ஆவினின் இந்த முடிவுக்கு பலரும் வரவேற்பு தெரிவிக்கிறார்கள் என்றாலும், இந்த முன்னெடுப்பு, நம்முடைய தமிழக விவசாயிகள் நலன் சார்ந்ததாகவும் இருக்க வேண்டும் என்ற விருப்பத்தையும் சமூக ஆர்வலர்கள் முன்வைத்து வருகிறார்கள்.
அதேசமயம், பால் மற்றும் பால் பொருட்கள் தட்டுப்பாடு நிலவும் நிலையில், அந்த விவகாரத்தை இந்த புதிய முயற்சியானது, திசை திருப்பும் முயற்சியாக அமைந்து விடக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications