ரஜினி சொல்வது போல மது குடிப்பதால் "மூளை" வேலை செய்யாமல் போகுமா? வேறு என்ன பாதிப்பு எல்லாம் ஏற்படும்
சென்னை: நேற்று ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் மனம் விட்டுப் பல விஷயங்கள் குறித்துப் பேசினார். குறிப்பாகக் குடிப்பழக்கம் குறித்து மனம் விட்டுப் பேசியிருந்தார். அவர் சொன்னது போலக் குடிப்பதால் என்ன பாதிப்பு ஏற்படுகிறது என்பது குறித்துப் பார்க்கலாம்.
நெல்சன் இயக்கத்தில் பல நட்சத்திரங்கள் நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் ஜெயிலர். இந்தத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில், இதில் கலந்து கொண்டு பேசிய ரஜினிகாந்த் குடிப்பழக்கம் குறித்து மனம் விட்டுப் பேசியிருந்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ரஜினி, "குடிப்பழக்கம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நான் இப்போது இருக்கும் இடத்தை விடப் பல மடங்கு உயரத்திற்குச் சென்றிருப்பேன்.. 'குடிப்பழக்கம்' எனக்கு நானே வைத்துக் கொண்ட சூனியம். குடிப்பழக்கத்தை விட்டுவிடுங்கள். குடிப்பழக்கத்தால் நான் நிறைய இழந்துள்ளேன். அனுபவத்தில் சொல்கிறேன்" என்று பேசியிருந்தார்.

ரஜினி பேச்சு: குறிப்பாகத் தினமும் குடிப்பதால் மூளை சரியாக வேலை செய்யாது என்றும் சரியான முடிவு எடுக்க முடியாது என்றும் அவர் கூறியிருந்தார். நடிகர் ரஜினிகாந்த் கூறிய அந்த மூளை பாதிப்பு என்ன என்பது குறித்தும் மது எந்தளவுக்கு நமது மூளையில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
மது குடிப்பதால் நமது உடலுக்குப் பாதிப்பு என்பது மது குடிப்போருக்கும் கூட தெரியும். இருப்பினும், இடையில் சில காலத்திற்கு முன்பு மதுவை அளவாகக் குடித்தால் இதயம், கிட்னிக்கு நல்லது என்றெல்லாம் போலியான ஆதாரமே இல்லாத தகவல்கள் வாட்ஸ்அப்பில் பரவின. இன்னும் சிலர் லைட்டாக மது குடித்தால் பிரச்சினை இல்லை. அதிகம் குடித்தால் மட்டுமே பிரச்சினை என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால், உண்மை அதுவுமில்லை.
என்ன பாதிப்பு: நடிகர் ரஜினி சொன்னது போலவே மது குடிப்பது மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும். இது குறித்த 'நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்' இதழிலும் ஆய்வுகள் வெளியிடப்பட்டு இருக்கிறது. மொத்தம் 36,000 பேரிடம் இந்த விரிவான ஆய்வை நடத்தியுள்ளனர்.

தினசரி குறைந்த அளவு மது குடித்தாலும் கூட மூளையில் பாதிப்பு ஏற்படுவதாகவும். மது குடிப்பதால் மூளை இரண்டு வயது வரை விரைவில் முதுமையடைவதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். அதிகம் மது குடிப்பது மூளையில் இன்னுமே மோசமான பாதிப்பை ஏற்படுத்துமாம். அதிகப்படியான குடிப்பழக்கம் என்பது மூளையின் அமைப்பு மற்றும் செயல்பாடுகளைக் கடுமையாகப் பாதிக்கிறது. அவை அறிவாற்றல் குறைபாடுகளையும் ஏற்படுத்தும் ஆபத்து இருக்கிறதாம்.
மோசமான பாதிப்பு: இது மட்டுமின்றி பீர் அல்லது ஒயினை வாரத்திற்கு ஒரு முறை குடிப்பது கூட மூளைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு குடிப்பழக்கம் எந்தளவுக்கு மோசமான ஒரு பாதிப்பை நேரடியாக நமது மூளையில் ஏற்படுத்துகிறது என்பதைக் காட்டுகிறது.
அதிகப்படியான குடிப்பழக்கம் என்பது மூளையின் அமைப்பு மற்றும் செயல்பாடுகளை நேரடியாகப் பாதிக்கிறது. மேலும், இது மூளையில் இருக்கும் சாம்பல் மற்றும் வெள்ளை நிற மேட்டரின் எண்ணிக்கையைக் கடுமையாகக் குறைகிறது.
அல்சைமர்: சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் காலப்போக்கில், அதிகப்படியாக மது குடிப்பதால் மூளை செல்கள் உயிரிழக்கிறது. மேலும் இது மூளை திசுக்கள் சுருங்கிவிடும். மூளை பல்வேறு பணிகளைச் செய்ய வேண்டி இருக்கும் நிலையில், அதில் இருக்கும் செல்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்பதால் அப்போது பல சிக்கல்கள் ஏற்படும். குறிப்பாக அளவுக்கு அதிகமாக மது குடித்தால் அல்சைமர் எனப்படும் ஞாபக மறதி நோய் கூட ஏற்படும்.
இது மட்டுமின்றி நுரையீரல் செயலிழப்பு, தசைச் சிதைவு, கண் பிரச்சினை, இதய பிரச்சினை, கல்லீரல் பாதிப்பு, வயிற்றில் எரிச்சல் என் பல பாதிப்புகளும் மதுவைக் குடிப்பதால் ஏற்படும். எனவே, தலைவர் சொன்னது போல மதுவில் இருந்து தள்ளியே இருப்போம். அப்போது தான் நமது உடலை நம்மால் பாதுகாக்க முடியும்.












Click it and Unblock the Notifications