பண்டிகைனாலே கொண்டாட்டம் தான்! ஆனா.. ஆரோக்கியமும் முக்கியம் தானே.. தீபாவளியில் இதை மறக்காதீங்க மக்களே
சென்னை: ஆண்டுக்கு ஆண்டு வந்தாலும் எப்போதுமே சலிக்காதது தீபாவளி பண்டிகை. கொண்டாட்டங்கள் நிறைந்த நாளாக தீபாவளி இருந்தாலும், கொஞ்சம் பிசகினாலும் தீவிர உடல் நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதனால் தீபாவளியை ஆரோக்கியமாக கொண்டாட வேண்டியது அவசியம். அப்படி என்ன பிரச்சனை வரும்? அதை எப்படி சமாளிப்பது? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்..
பண்டிகை என்றாலே கொண்டாட்டம்தான். அதுவும் தீபாவளி பண்டிகை என்றால் சொல்லவே வேண்டியதில்லை. சிறுவர் தொடங்கி பெரியவர்கள் வரை ஆர்வத்தோடு எதிர்நோக்கி காத்திருக்கும் பண்டிகைகளில் ஒன்று தீபாவளி.

தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே அதற்கான ஏற்பாடுகள் தொடங்கி விடும். வீட்டுக்கு தேவையான பொருட்கள், புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள் வாங்கி வீட்டில் வைத்து விட்டால் அடுத்த நாள் தீபாவளி வந்துவிடும்.
கவனம் அவசியம்: தீபாவளியன்று அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, பட்டாசுகள் வெடித்து, இனிப்புகளை உண்டு, அதனை உறவினர்களுக்கும் பங்கிட்டு கொடுப்பது தீபாவளிக்கு நடப்பது தான். அதே நேரத்தில் தீபாவளி அன்று மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். பலகாரங்களும் புகையும் நிறைந்த நாளாக இருப்பதால் சற்று பிசகினாலும் பல்வேறு ஆரோக்கிய சீர்கேடுகள் நடைபெற வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக குழந்தைகளும் இதய நோய் பாதிப்பு உள்ளவர்களும் பெரியவர்களும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
தீபாவளி பலகாரங்கள்: தீபாவளிக்கு பலகார வகைகளை தயாரிக்கும் போது அதிக அளவு எண்ணெய், இனிப்பு மற்றும் செயற்கை நிறமூட்டிகள் சேர்த்து பலகாரங்கள் தயாரிப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் நன்கு வறுத்த அல்லது பொறித்த உணவுகளை எடுத்துக் கொள்வதை முடிந்த அளவு குறைத்துக் கொள்ள வேண்டும். இனிப்பு வகைகள் அதிகம் எடுத்துக் கொள்வதை சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது. அதே நேரத்தில் வீட்டில் தயாரிக்கும் உணவு வகைகள் பாதுகாப்பானது என்பதால் குறைந்த அளவில் எடுத்துக் கொள்ளலாம். முடிந்த அளவு கடைகளில் வாங்குவதை தவிர்க்கலாம். காரணம் தீபாவளி பண்டிகைக்காக பல நாட்களுக்கு முன்பு கூட பலகாரங்களை தயாரித்திருக்க வாய்ப்பு உண்டு. எனவே காலாவதி தேதி உள்ளிட்டவற்றை சரிபார்த்து இனிப்புகளை வாங்குவது நல்லது.
எண்ணெய் குளியல்: பொதுவாக அக்டோபர் நவம்பர் மாதங்களில் மழையும் பணியின் தாக்கமும் அதிகமாக இருக்கும். சிலருக்கு சளி, சைனஸ் தொல்லை இருக்கலாம் எனவே அவர்கள் காலையில் எண்ணெய் தேய்த்து குளிப்பதை தவிர்க்க வேண்டும். எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது உடலில் குளிர்ச்சி தன்மை ஏற்படும். இதனால் மீண்டும் சளி தலைவலி உள்ளிட்ட பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. எனவே சடங்குக்காக ஒரு துளி எண்ணெயை மட்டும் தலையில் தேய்த்து விட்டு சுடுநீரில் குளிக்கலாம். மேற்கண்ட பிரச்சினைகளை தவிர்க்க முடியும்.
பட்டாசு ஆகவே ஆகாது: பொதுவாக தீபாவளி பண்டிகையில் முக்கிய இடம் பிடிப்பது பட்டாசுகள். அதிகாலை தொடங்கி இரவு வரை லட்சக்கணக்கான மக்கள் பட்டாசுகளை ஒரே நேரத்தில் வெடிப்பார்கள். இதனால் நெருக்கமான நகரங்களில் புகை மண்டலமாக காட்சியளிக்க வாய்ப்பு உள்ளது. எனவே ஆஸ்துமா, மூச்சு பிரச்சினை, நுரையீரல் பிரச்சனை உள்ளவர்கள் வெளியே நடமாடுவதை தவிர்ப்பது நல்லது. மேலும் பட்டாசு வெடிக்கும் இடங்களுக்கு அருகில் வயதானவர்கள் குழந்தைகள் செல்வதை தவிர்க்கலாம். முடிந்த அளவு சுவாச நோய் உள்ளவர்கள் முக கவசம் அணிவது நன்மை பயக்கும். அது மட்டுமல்லாமல் பட்டாசுகளில் அதிக அளவு ரசாயனங்கள் இருப்பதால் சற்று விலகியே இருப்பது நல்லது.
மதுவுக்கு குட்பை சொல்லுங்க: கடந்த காலங்களில் தீபாவளி பண்டிகை என்றால் கோயில்களுக்கு செல்வது வழக்கம். ஆனால் தற்போது மது விருந்து பழக்கமும் அதிகரித்துள்ள, நிலையில் போதைப்பொருட்கள் எடுத்துக் கொள்வது அதிகரித்து வருகிறது. தீபாவளி பண்டிகை அன்று இனிப்புகள், பிரியாணி போன்ற ஹெவி உணவு வகைகளை எடுத்துக் கொள்ளும் போது ஆல்கஹால் சேர்வதால் பிரச்சனை வர வாய்ப்பு இருக்கிறது. எனவே பண்டிகை காலங்களில் ஆல்கஹாலை எடுத்துக் கொள்வது கேடு விளைவிக்கலாம். எனவே முடிந்த அளவு மது பயன்பாட்டை குறைத்துக் கொள்வது நல்லது.












Click it and Unblock the Notifications