சிக்குன் குனியாவை ஞாபகம் இருக்கா? மீண்டும் பரவுகிறதாம்! தடுப்பது எப்படி? அறிகுறிகள் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிக்குன் குனியா என்ற காய்ச்சல் மீண்டும் பரவி வருகிறது. இந்த வைரஸ் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும். இதன் அறிகுறிகள் என்ன என்பது குறித்து சிவகங்கை அரசு மருத்துவமனையின் மருத்துவர் டாக்டர் பரூக் அப்துல்லா விவரித்துள்ளார்.

இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் 2005 - 2006ஆம் வருடம் சிக்குன் குனியா காய்ச்சல் படுத்திய பாட்டை தொற்றுக்குள்ளாகி தீவிர மூட்டு வலிக்கு உள்ளானோர் யாரும் அத்தனை எளிதில் மறந்திருக்க முடியாது.

health dr farook abdulla

அது போன்றதொரு சிக்குன் குனியா தொற்றுப் பரவலை தற்போது மஹாராஷ்ட்ராவின் பூனே மாநகரம் சந்தித்து வருகிறது. அங்கு, கடந்த வருடத்தை ஒப்பிடும் போது இந்த வருடம் நான்கு மடங்கு சிக்குன் குனியா தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

வருடம் தோறும் கொசுவினால் பரவும் காய்ச்சல்களான டெங்கு, சிக்குன் குனியா போன்றவை மழை காலங்களில் கூடும் என்பது நாம் அறிந்ததே. ஆயினும் இம்முறை சிக்குன் குனியா காய்ச்சலை உண்டாக்கும் வைரஸ் பூனே மாநகரில் - மரபணு மாற்றங்களுடன் வெளிப்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாக காய்ச்சல் மற்றும் தீவிர மூட்டு வலி ஆகியவற்றுடன் மட்டுமே சிக்குன் குனியா வெளிப்படும். ஆனால் இம்முறை பூனா நகரில் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள்
- நரம்பியல் பாதிப்புகள்
கூடவே பக்கவாதம் ஏற்படுதல்
- மூக்கு கருப்பாக மாறுதல் ( இரண்டு வாரங்கள் கழித்து திரும்ப பழைய நிலைக்கு திரும்பி விடுகிறது)
- கால் பாத எரிச்சல்
- நுரையீரல் மற்றும் வயிற்றுப் பகுதியில் நீர் கோர்த்துக் கொள்ளுதல்
- மூன்றில் ஒருவருக்கு வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்படுவது
போன்ற விசித்திர புதிய அறிகுறிகளுடன் வெளிப்படுவதாக அறிவிக்கின்றனர்.

டெங்குவின் அறிகுறியான கண்ணுக்குள் அதீத வலி, தலைவலி ஆகியவையும் டெங்கு போன்றே தட்டணுக்கள்( ப்ளேட்லெட்ஸ்) இதிலும் குறைவதாகவும் பதிவு செய்கின்றனர். டெங்குவும் சிக்குன் குனியாவும் ஏடிஸ் வகை கொசுக்கள் மூலம் பரவுவதால் எங்கெல்லாம் டெங்கு பரவும் வாய்ப்பு உள்ளதோ அங்கெல்லாம் சிக்குன் குனியாவும் பரவ வாய்ப்புள்ளது.

சிக்கன் குனியாவைப் பொருத்தவரை 1952ஆம் ஆண்டு ஆப்பிரிக்க நாடான டான்சானியாவில் முதலில் கண்டறியப்பட்டது. கிமோகோண்டே மொழியில் "குன்குன்யாலா" என்றால் "வளைத்துப் போடுவது" என்று பொருள். அதாவது நோய்த்தொற்றுக்கு உள்ளானவருக்கு கடுமையான மூட்டு வலி ஏற்பட்டு வளைத்துப் போடும் என்று பொருள்.

மற்றபடி சிக்கனுக்கும் சிக்குன் குனியாவுக்கும் துளி சம்பந்தமும் இல்லை. சிக்குன் குனியா வைரஸ் குடும்பங்கள்
- ஆசிய வகை
- கிழக்கு மத்திய தென் ஆப்ரிக்க வகை
- மேற்கு ஆப்பிரிக்க வகை
என்று மூன்று வகைகளாக உள்ளன.

இவற்றில் இந்தியாவில் முதன் முதலில் 1963இல் கொல்கத்தாவில் சிக்குன்குனியா முதலில் கொள்ளை நோயாக ஏற்பட்டது. 1964இல் சென்னை புதுச்சேரி வேலூர் ஆகிய ஊர்களில் சிக்குன் குனியா வந்தது. 1965இல் விசாகபட்டிணம், ராஜமுந்திரி, காக்கி நாடா,
அடுத்து 1973இல் மத்திய இந்தியாவின் நாக்பூர், பார்சி ஆகிய ஊர்களில் ஏற்பட்டு மறைந்தது.

அதற்குப் பிறகு 2005 ஆம் ஆண்டு 32 ஆண்டுகளுக்குப் பிறகு ஆந்திராவில் தொடங்கி தென் இந்தியா முழுவதும் சுழற்றிப் போட்டது. அதுவரை ஆசிய குடும்ப சிக்குன் குனியா வைரஸ் மட்டுமே இந்தியாவில் பரவி வந்த நிலையில் 2005 ஆம் ஆண்டு ECSA எனும் ஆப்பிரிக்க குடும்ப வைரஸ் உள்ளே நுழைந்து பிரளயத்தை ஏற்படுத்தியது.

அதற்குப் பிறகு 2009,2015,2016, 2019 ஆகிய ஆண்டுகளில் கர்நாடகா, மஹாராஷ்ட்ரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து கொள்ளை நோய் அவ்வப்போது சிறிய அளவில் ஏற்பட்டு வருகிறது. எனினும் தமிழ்நாட்டில் சொல்லிக் கொள்ளும்படியான சிக்கன் குனியா கொள்ளை நோய் 2005 -2006க்குப் பிறகு பெரிதாக ஏற்படவில்லை.

இதற்குக் காரணம் தென் இந்திய மாநிலங்களில் 2006ஆம்ஆண்டு கொள்ளை நோயில் சிக்கன் குனியா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம் என்பதால் அந்தத் தொற்றின் மூலம் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ளனர். தென் இந்தியர்களில் தற்போது சுமார் 50% பேர் சிக்குன் குனியா தொற்றுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியுடன் இருக்கின்றனர்.

ஆனால் வட கிழக்கு இந்தியர்களில் 10% க்கு குறைவானோர் மட்டுமே சிக்குன் குனியா எதிர்ப்பு சக்தியுடன் இருக்கின்றனர். சிக்குன் குனியா பரப்பும் ஏடிஸ் கொசு நகரங்களில் - குப்பை மேலாண்மை, நீர் தேக்க மேலாண்மை போன்றவற்றில் திட்டமிடல் குறைபாடு இருக்கும் போது கொசு அதிகமாக வளருகிறது.

இதன் காரணமாக நகரமயமாக்கல் அதிகமாக உள்ள தென் இந்தியாவில் அதிகமாகவும் , நகரமயமாக்கல் குறைவாக உள்ள வட கிழக்கு இந்தியாவில் குறைவான தாக்கத்துடன் உள்ளது. சிக்குன் குனியாவைப் பொருத்தவரை தற்போது வரை செய்யப்பட்ட ஆய்வு முடிவுகளின் படி ஒரு முறை தொற்று பெற்றவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என்பது ஏற்கனவே தொற்று பெற்றவர்களுக்கு ஆறுதலான செய்தி.

எனினும் பருவகாலங்களில் அதிகமான கொசு பெருகுதலின் காரணமாக டெங்கு, சிக்குன் குனியா போன்ற காய்ச்சல்கள் பரவுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. எனவே நம்மால் இயன்றவரை வீடுகளுக்குள்ளும் வீடுகளுக்கு வெளியேவும் நீர் சிறிய அளவு கூட தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏடிஸ் வகை கொசுக்கள் நன்னீரில் முட்டை இட்டு குஞ்சு பொரிப்பவை.

மேலும் பகலில் கடிக்கும் தன்மை கொண்டவை. குழந்தைகளுக்கு முழுக்கை சட்டை அணிவிக்கலாம். கொசு வலை உபயோகித்து உறங்கலாம். கொசு எதிர்ப்பு களிம்புகளை பூசிக் கொள்ளலாம். கொசு எதிர்ப்பு களிம்புகளில் DEET, IR3535, ICARIDIN இவற்றில் ஒரு கொசு விரட்டி மருந்து இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

அதீத காய்ச்சல் மற்றும் தீவிர மூட்டு வலி இருப்பின் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். வந்திருப்பது டெங்கு இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே வலி நிவாரணிகளை உட்கொள்ள வேண்டும். டெங்கு நோயில் வலி நிவாரணிகள் - ரத்தக் கசிவு தன்மையை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பூனா மாநகருக்கு தற்போது ஏற்பட்டு வரும் நிலையில் இருந்து நமக்கான பாடம் உள்ளது. விழிப்புணர்வு பெறுவோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+