ஆடாதொடை.. ஆயுசை கூட்டும் ஆடாதோடை.. அடங்காத நோயையும் அடிச்சு விரட்டும் "ஆடு தொடா இலைகள்".. அற்புதம்
சென்னை: ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த பலனை தரக்கூடிய மூலிகைகளில் ஒன்றுதான் ஆடாதோடை இலைகள்.. "ஆயுள் மூலிகை" என்று இந்த இலையை நாம் ஏன் அழைக்கிறோம் தெரியுமா?
இந்த செடி எங்கெல்லாம் வளர்கிறதோ, அங்கேயிருக்கும் கார்பன் டை ஆக்சைடை உள்வாங்கிக்கொண்டு, மனிதனுக்கு தேவைப்படும் ஆக்சிஜனை அதிகளவில் வெளியிடுகிறது. அதனால்தான், "ஆயுள் மூலிகை" என்று போற்றப்படுகிறது.

ஆடுகள்: பொதுவாக, எந்த இலைகளையுமே ஆடுகள் சாப்பிட்டுவிடுமாம்.. ஆனால், இந்த இலையை மட்டும் தொடாமல் விட்டுவிடுமாம். அதனால்தான், இதற்கு ஆடுதொடா இலை என்று பெயர் வந்ததாக சொல்கிறார்கள்.
வாசிசின் என்ற வேதிப்பொருள் இருப்பதால், நுரையீரலுக்கு பாதுகாப்பையும், ஆரோக்கியத்தையும் தரக்கூடியது இந்த இலைகள்.. எல்லா இருமல் மருந்துகளும் ஆடாதொடையிலிருந்தே தயாராகின்றன என்பதுதான் இதன் சிறப்பு. கசப்பு தன்மை நிறைந்த ஆடாதோடை இலைகளை நீரில் போட்டு, காய்ச்சி குடித்தாலே, பூச்சிகள், நச்சுக்கள் வெளியேறிவிடும். குடல் சுத்தமாகும்.
கசப்பு இலைகள்: சளி, காய்ச்சல் வந்தாலும், இந்த இலைகளை நீரில் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால், மொத்த காய்ச்சலும் நீங்கிவிடும். இந்த சாறு குடித்து வருபவர்களுக்கு, உடலில் எந்த அலர்ஜியும் ஏற்படாது. அவ்வளவு ஏன்? வெறுமனே இந்த இலையை பறித்து, நெருப்பில் போட்டு, அந்த புகையை இழுத்தாலே, நெஞ்சிலுள்ள சளி கரைந்துவிடுமாம்.
சுவாச பிரச்சனைகளையும் தாண்டி, ஆடாதொடை இலைகள் பல தீர்வுகளை தருகின்றன.. குறிப்பாக, ரத்தம் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு பேருதவி புரிகின்றன.. அதிலும், பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தின்போது ஏற்படும் அதிக உதிரப்போக்கை தடுத்து நிறுத்த இந்த இலைகளே கை கொடுக்கின்றன. கர்ப்பிணிகள் 8வது மாதம் முதல், இந்த செடியின் வேரை கஷாயம் தயாரித்து தினமும் குடித்து வந்தால் சுகப்பிரசவம் ஆகுமாம். கர்ப்பப்பையையும் வலுப்படுத்துகிறது.
ரத்தக் கொதிப்பு: ஒரு கைப்பிடி அளவுக்கு, ஆடாதொடை இலைகளை அரைத்து, நல்லெண்ணெயில் கலந்து சாப்பிட்டாலே அதிகமான ரத்தப்போக்கு நின்றுவிடுமாம்.. ரத்தக் கொதிப்பு பிரச்சனையை போக்கவும் இந்த இலைகள்தான் துணைபுரிகின்றன.
உடலில் ஏற்படும் காயங்களுக்கு, ஆடாதொடை இலையுடன் வெற்றிலையை சேர்த்து, மென்று விழுங்கினால் உடனடி நிவாரணம் கிடைத்துவிடும். அதேபோல, இந்த இலையின் சாறில் தேன் கலந்து சாப்பிட்டால், மஞ்சள் காமாலை நோயும் குணமாகும்.
ரத்த அழுத்தம்: இந்த இலையை நிழலில் உலர்த்தி பொடித்து, பிறகு, மெல்லிய வெள்ளை துணியில் சலித்து வைத்து கொள்ள வேண்டும்.. இந்த பவுடரை, 3 வேளையும், ஒரு ஸ்பூன் வீதம், 6 மாத காலம் சாப்பிட்டு, வெந்நீரை குடித்துவந்தால், ரத்த அழுத்தம் சீராகும். அத்துடன், நுரையீரல் பிரச்சனை, சைனஸ் பிரச்சனை, ஆஸ்துமா பிரச்சனை இப்படி அனைத்துமே நீங்கிவிடும்.












Click it and Unblock the Notifications