முருங்கையை போல.. மருதம்பட்டை.. சிறுநீரகம் முதல் இதயம் வரை காக்கும் மருத மர பட்டை.. ஆச்சரிய பவுடர்
சென்னை: முருங்கை மரத்தின் பட்டை எந்த அளவுக்கு மருத்துவ குணங்களை பெற்றுள்ளதோ, அதுபோலவே, ஏகப்பட்ட நலன்களை தரக்கூடியது மருதம் பட்டையாகும்.
பாரம்பரியமாகவே ஆயுர்வேத மருத்துவத்தில் மருத மரத்துக்கென்றே பிரத்யேக முக்கியத்துவம் என்றுமே உண்டு.. அன்றைய காலம் முதல் இன்றுவரை இந்த மரத்தின் பயன்பாடுகள் ஏராளம் ஏராளம்.

மருத மரங்கள்: இன்று சென்னையில் பெரும்பாலான இடங்களில் சாலையோரம் நடப்பட்டிருப்பது இந்த மருத மரங்கள்தான்.. இந்த மரத்தின் பட்டைகளில் மருத்துவ குணங்கள் ஒளிந்திருக்கின்றன.
குளிர்ச்சி நிறைந்த இந்த பட்டையில், வைட்டமின் சி அதிகம் உள்ளது.. ஆன்டி ஆக்சிடெண்ட் நிறைய உள்ளது.. எனவே, சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த பட்டை மிகவும் நல்லது. இந்த பட்டையுடன், அதே அளவுக்கு ஆவாரம் பட்டையும் சேர்த்து சிறிது ஏலம், சுக்கு சேர்த்து சூரணமாக தயாரித்து தினமும் 2 வேளை குடித்து வரலாம். இதனால், சர்க்கரை கட்டுக்குள் இருக்கும்.
மருதம்பட்டை: அல்லது, இந்த மருதம் பட்டையுடன், அருகம்புல், நாவல் கொட்டை, நெல்லி, கடுக்காய், தான்றிக்காய் இவை அனைத்தையும் சமமாக எடுத்து பொடி செய்து சாப்பிட்டு வந்தாலும் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.
இந்த பட்டைகள், இதய செயல்பாட்டை மேம்படுத்தி தமணியில் ஏற்படும் ரத்த அழுத்தத்தை கிட்டத்தட்ட 254 சதவீதம் குறைக்கிறதாம்.. மேலும், இந்த பட்டையிலிருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சுவாச மண்டலத்தில் ஏற்படும் வீக்கத்தையும் குறைக்கின்றன..
கஷாயம்: அதேபோல, வெறும் தண்ணீரில் இந்த பட்டையை கொதிக்க வைத்து குடித்தாலே, உடலிலுள்ள உஷ்ணம் நீங்கும்.. நன்றாக தூக்கம் வரும்.. இந்த மருதம் பட்டையில் கஷாயம் வைத்து குடித்தால், ஒழுங்கற்ற மாதவிடாய் சீராகும்.. வாய் புண்களும் தொண்டை கரகரப்பும் நீங்கும்..
இந்த மருதம் பட்டையை தூளாக்கி வைத்து கொண்டால், பல பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது.. குறிப்பாக, இந்த பவுடருடன் சிறிது தேன் கலந்து சாப்பிட்டால், சுவாச கோளாறுகள் நீங்கும்... கடும் காய்ச்சலும் நீங்கும்.. அஜீரணம் ஏற்பட்டுவிட்டால், அதற்கும் இந்த பொடியே தீர்வாகிறது.. ஒரு டம்ளர் மோரில், சிறிது மருதம் பட்டை பொடி செய்து கலந்து குடித்தாலே அஜீரணம் நீங்கி, செரிமானமும் சரியாகும்.
பற்கள் வலி: இந்த பவுடரை, பற்களின் ஆரோக்கியத்துக்கும் பயன்படுத்தலாம்.. இந்த பவுடரில் பல் தேய்த்து வந்தால், பற்களில் ரத்த கசிவு, பல் வலிநீங்குவதுடன், பற்கள் பளிச்சென்று மாறிவிடும். அல்லது, இந்த பட்டையுடன் ஆலம்பட்டை, அரச மர பட்டை, கருவேல மரப்பட்டை, கொட்டை பாக்கு, கிராம்பு என அனைத்தையும் தலா 25 கிராம் எடுத்து பொடி செய்து, பற்களை துலக்கி வந்தாலும், பற்களின் முழு ஆரோக்கியம் பேணப்படும்.

ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கக்கூடியது இந்த பட்டை பவுடர்.. மேலும் கொழுப்பு சேர்வதால் ஏற்படும் அபாயத்தையும் இந்த பட்டை பவுடர் போக்குகிறது.. உடலில் காயங்கள் ஏற்பட்டுவிட்டால், இந்த பவுடரை வைத்து, கட்டு போட்டால் காயங்கள் ஆறிவிடும்..
சிறுநீர்: இந்த பொடியிலிருந்து வெறும் 5 கிராம் சாப்பிட்டாலே, சிறுநீர் அதிகமாக வெளியேறுவது கட்டுப்படும். இந்த பொடியை, 2 கிராம் அளவு வெந்நீரில் கலந்து குடித்து வந்தால், வாத நோய்கள், மூட்டுவலிகள் குணமாகும்..
இந்த மருத மரத்தின் பட்டைகள் மட்டுமல்லாமல், மருத மரத்தின் இலைகளும், பழங்களும்கூட மருத்துவ குணம் வாய்ந்தவை.. இந்த மரத்தின் இலையை அரைத்து பாலில் கலந்து குடித்தால் பித்தவெடிப்பு தீரும் என்பார்கள்.. இந்த மரத்தின் பழங்கள், புண்களையும், காயங்களையும் ஆற்றக்கூடியவையாம். இப்படி பலவித நன்மைகளை இந்த மருத மரங்கள் தந்தாலும், மருத்துவர்களின் ஆலோசனைகளை பெறாமல், எந்த வகையிலும், இவைகளை மருந்தாக உட்கொள்ளக்கூடாது.












Click it and Unblock the Notifications