கோழிக்கறி ரசம்.. நாட்டுக்கோழி இடிச்சச்சாறு செய்து பாருங்க..மருந்தாகும், விருந்தாகும் நாட்டுக்கோழிகள்
சென்னை: நம்முடைய பாரம்பரியத்தில் நாட்டுக்கோழிக்கென்று தனி இடம் என்றுமே உண்டு.. மருந்தாகவும், விருந்தாகவும் ஒரு உணவு நமக்கு கைகொடுக்கிறதென்றால், அது இந்த நாட்டுக்கோழிதான். வெறும் குழம்பு மட்டுமே அல்லாமல், எந்தெந்த மருத்துவ முறைகளில் நாட்டுக்கோழி செய்யலாம்?
நாட்டுக்கோழி 200 நாட்கள் சேர்ந்து வளர வேண்டியதை, பிராய்லர் கோழிகள் 45 நாட்களில் வளர்கிறதென்றால் அதன் வளர்ச்சி வித்தியாசம் அதிர வைக்கிறது..

100 கிராம் நாட்டுக்கோழியில் 4 கிராம் கொழுப்பு மட்டுமே இருக்கிறது. ஆனால், 100 கிராம் பிராய்லரில் 23 கிராம் கொழுப்பு இருக்கிறதாம்.. 100 கிராம் பிராய்லரில் 16 கிராம் புரதமும், இதுவே 100 கிராம் நாட்டுக்கோழியில் 21 கிராம் புரதமும் இருக்கிறதாம்..
எந்த உணவு கொழுப்பு குறைவாகவும், புரதம் அதிகமாகவும் இருக்கிறதோ, அதுவே சிறந்த உணவு என்கிறார்கள்.. அந்த அடிப்படையில்தான், நாட்டுக்கோழியை சிறந்த உணவில் சேர்க்கிறார்கள்.
முக்கிய இடம்: நாட்டுக்கோழி உடலுக்கு வலுவும், தசைகளுக்கு உறுதியும், நரம்புகளுக்கு உரத்தையும் தருபவை.. காமத்தைத் தூண்டும் உணவு பட்டியலில் நாட்டுக் கோழிக்கு முக்கிய இடமுண்டு என்கிறார்கள்.
முன்பெல்லாம் வீடுகளில் "கோழி அடித்து குழம்பு வைப்பது" என்றுதான் சொல்வார்கள்.. அதற்கு காரணம் இந்த நாட்டுக்கோழிகள்தான். உறவினர்களை விருந்தோம்பலுக்கும்சரி, நொந்துபோன உடல்நலிவுக்கும் சரி, நாட்டுக்கோழி மட்டுமே விருந்தும், மருந்துமாக திகழ்ந்திருக்கிறது.
சுவாச நோய்கள் தீர, சளி, இருமல் நீங்க, இந்த நாட்டுக்கோழியை பிச்சுப்போட்டுதான் மிளகு சேர்த்து, ரசம் வைப்பார்கள்.. நாட்டுக்கோழி ரசம், நாட்டுக்கோழி சூப், இடிச்ச நாட்டுக்கோழி சாறு என்று பலவகைகளில் மருந்தாக பயன்படுகிறது.
கோழி ரசம்: குக்கரில் எண்ணெய் ஊற்றி, பட்டை, லவங்கம், வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டு்ம். பிறகு, இஞ்சி, பூண்டு, தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து அதையும் நன்றாக வதக்கி கொள்ள வேண்டும்..
பிறகு, பொடித்த மிளகு, சீரகம், மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு, சுத்தம் செய்யப்பட்டு, சிறுசிறு துண்டுகளாக வெட்டப்பட்ட நாட்டுக்கோழியையும் கொட்டி கிளற வேண்டும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரில் 6 அல்லது 7 விசில் வரும் வரை வேக விட வேண்டும். இறுதியில், கருவேப்பிலை, மல்லி இலை தூவினால், இதுவே நாட்டுக்கோழி ரசம்.
நாட்டுக்கோழி சூப்: குக்கரில் நல்லெண்ணெய் ஊற்றி, பட்டை, லவங்கம், இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி என ஒவ்வொன்றாக சேர்த்து வதக்க வேண்டும். பிறகு, நாட்டுக் கோழியையும் அதில் கொடி, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும்..

மல்லிவிதை + சீரக விதை இரண்டையும் பேஸ்ட் போல அரைத்து, அதையும் குக்கரிலேயே கொட்டி 6 அல்லது 7 விசில் வரும்வரை வேக வைத்து இறக்க வேண்டும். கடைசியாக கொத்தமல்லியை தூவினால், இதுவே நாட்டுக்கோழி சூப்.
இடிச்ச நாட்டுக்கோழி சாறு: நாட்டுக்கோழியை அம்மியில் வைத்து நன்றாக நசுக்கி எடுத்து கொள்ள வேண்டும். ஒரு வாணலில் நல்லெண்ணெய் ஊற்றி, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் போட்டு வதக்கவேண்டும். பிறகு, இஞ்சி, பூண்டு இரண்டையும் இடித்து அதில் சேர்க்க வேண்டும்.. பிறகு சின்ன வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
இப்போது இடித்து வைத்த நாட்டுக்கோழியை அதில் கொட்டி, மஞ்சள் பொடி, மல்லிதூள், கல் உப்பு சேர்த்து, சற்று அதிகமாகவே தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். இதுதான் நாட்டுக்கோழி இடிச்சச் சாறு.. மசாலாக்களும் இதில் அவ்வளவாக இல்லாதது. பிரசவ காலத்தில் பெண்களுக்கு இந்த சாறு தருவார்கள்.. அதேபோல கை கால் வலியால் அவதிப்படுபவர்களும், உடலில் பலம் குறைந்தவர்களும் இந்த சாறு குடித்தால் நலம்பெறுவார்கள்.












Click it and Unblock the Notifications