பொன்+ஆம்+காண்+நீ= பொன்னாங்கண்ணி! சித்தர்கள் பயன்படுத்திய பொக்கிஷம்! 2இல் "அந்த" வகைதான் நல்லது
சென்னை: கீரைகள் உடல் நலனுக்கு நன்மையை கொடுக்கும். அந்த வகையில் தினந்தோறும் ஒரு கீரையை சாப்பிடுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
கீரைகளில் எத்தனையோ வகைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பயன்கள் இருக்கின்றன. அந்த வகையில் பொன்னாங்கண்ணி எனும் கீரையின் உடல்நல குறிப்புகள் என்னவென்பதை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

பெயருக்கு ஏற்ப இந்த கீரை பொன் போன்று விலைமதிப்புள்ளது. கீரை கட்டு 10 முதல் 20 ரூபாய்க்குள்தான் விற்பனை செய்யப்படும். ஆனால் அதன் மூலம் கிடைக்கும் பலன்கள் தங்கம் போன்று விலைமதிப்பற்றது.
பொன் போன்ற சருமம் மின்னிட இந்த பொன்னாங்கண்ணி கீரை போதும். பொன்+ஆம்+காண் +நீ = பொன்னாங்கண்ணி. இந்த கீரை நாட்டு பொன்னாங்கண்ணி, சீமை பொன்னாங்கண்ணி என இரு வகைப்படும். சீமை பொன்னாங்கண்ணியில் மருத்துவ குணங்கள் குறைவு. எனவே பச்சை நிறத்தில் நீண்ட இலைகளுடன் கூடிய பொன்னாங்கண்ணி கீரை கிடைத்தால் விடாதீர்கள்.
இந்த கீரையின் இலைகளை ஆய்ந்து அவற்றை தண்ணீரில் சுத்தம் செய்துவிட்டு பிறகு பொடியாக நறுக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய், வெங்காயம் போட்டு வதக்கி, கீரையை போட வேண்டும். கீரை சுருண்டு வரும் அந்த சமயத்தில் மஞ்சள் தூள், உப்பு போட வேண்டும்.
கீரையை மூடி வைத்து வேகவைக்கக் கூடாது. திறந்தபடியே தண்ணீரை தெளித்து தெளித்து வேக வைக்க வேண்டும். இது கீரை பொறியல், இந்த கீரையை எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இந்த கீரையை தொடர்ந்து 27 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவு பெறும். வாரத்தில் இரு முறை சமைத்து சாப்பிட்டால் இதயம், மூளை புத்துணர்வு பெறும்.
இந்த காரையில் இரும்பு சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி உள்ளிட்டவை உள்ளன. இந்த கீரையை சாப்பிட்டு வந்தால் கண் இமை வீக்கம் குணமாகும். மாலை கண் நோய்க்கு இந்த கீரையை வதக்கி வெண்ணெய்யுடன் சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும்,
இந்த கீரையை நெய்யில் வறுத்து வெள்ளை துணியில் வைத்து கண்களில் வைத்து கட்டினால் கண் பார்வை மேம்படும். இந்த இலையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்யை உச்சந்தலையில் தேய்த்து குளித்தால் உடல் உஷ்ணம் நீங்கிவிடும். இந்த கீரை மூல நோயை விரட்டும். ஆஸ்துமா பிரச்சனைக்கு இரண்டு பல் பூண்டுடன் சாப்பிட்டு வர வேண்டும். தாய்ப்பாலை நன்கு சுரக்கும் தன்மை இந்த கீரைக்கு உண்டு. இந்த கீரை தலை வலியை குணமாக்கும். கால்சியம் சத்து இருப்பதால் எலும்பையும் பற்களையும் வலிமை பெறும். புரதச் சத்து இருப்பதால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
காசம் புகைச்சல் கருவிழிநோய் வாதமனல்
கூசும் பீலீகம் குதாங்குர நோய் பேசி வையால்
என்னாங் காணிப்படிவம் எமம் செப்ப லென்னைப்
பொன்னாங்கண்ணிக் கொடியைப் போற்று
என்ற அகத்தியரின் பாடல் பொன்னங்கண்ணிக் கீரையின் மருத்துவக் குணத்தைக் கூறுகிறது.
இந்தப் பாடலின் பொருள் - பொன்னாங்கண்ணி கீரை காச நோய், இருமல், கண்நோய்கள், வெப்ப நோய்கள், வாத நோய்கள் போன்றவற்றை குணமாக்கக் கூடிய சிறந்த உணவாகும் என்பது தான். எனவே இந்த கீரையை வாரத்திற்கு இரு முறையாவது சமைத்து சாப்பிட்டு பயன்பெறுங்கள்.












Click it and Unblock the Notifications