சாகும் வயசா? 19 வயது தங்கல் பட நடிகை சுஹானி பட்னாகர் பலியானது ஏன்? அரிய வகை நோயின் அறிகுறிகள் யாவை?
மும்பை: பாலிவுட் நடிகர் அமீர் கான் நடித்த தங்கல் படத்தில் நடித்த சுஹானி பட்னாகர் உடல்நலக் குறைவால் தனது 19ஆவது வயதில் உயிரிழந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவருடைய மரணத்திற்கு காரணமான நோய் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அது ஒரு அரிய வகையான நோய் என சொல்லப்படுகிறது. சுஹானி, கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான தங்கல் திரைப்படத்தில் பபிதா குமாரி போகத் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மல்யுத்த வீராங்கனைகளான தீபிகா போகத், பபிதா போகத் ஆகியோரின் வாழ்வை மையமாக கொண்டு உருவான இந்த படத்தில் அமீர் கான், பாத்திமா சனா, சான்யா மல்கோத்ரா, சாக்ஷி தன்வர் ஆகியோர் நடித்திருந்தனர்.
எலும்பு முறிவு: இந்த தங்கல் படம் ரூ 2000 கோடி வசூலை வாரி குவித்தது. இந்த சாதனையை படைத்த ஒரே இந்திய திரைப்படம் இது ஆகும். இந்த படத்திற்கு பின்னர் பல விளம்பர படங்களில் நடித்த சுஹானி படிப்பில் கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில் சில காலம் நடிப்பிலிருந்து விலகி இருந்த அவருக்கு ஒரு விபத்து ஏற்பட்டது. அதில் கால் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து மருத்துவ ரீதியிலான சில பிரச்சினைகளை எதிர் கொண்டார்.இந்த நிலையில் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டு பிப்ரவரி 7ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் பிப்ரவரி 16ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இது திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுஹானிக்கு என்ன ஆனது: இவருடைய உடல் ஃபரீதாபாத்தில் உள்ள செக்டார் 15 இல் உள்ள அஜ்ரோண்டா சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. சுஹானிக்கு என்ன ஆனது என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அவருடைய தந்தை கூறுகையில் , சுஹானிக்கு 2 மாதங்களுக்கு முன்பு சில அறிகுறிகள் தென்பட்டன. அதாவது அவரது கைகளில் சிவப்பு நிற புள்ளிகள் இருந்தன.
உடனே நாங்கள் பல்வேறு மருத்துவமனைகளில் காண்பித்தோம். அதை சரி செய்யவே முடியவில்லை. இதையடுத்து அவரது உடல் நிலை மோசமடைந்ததை அடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தோம். அங்கு அவருடைய உடலில் எந்த வித முன்னேற்றமும் இல்லை.
அரிய வகை நோய்: அவருக்கு டெர்மேடோமியோசைட்டீஸ் எனும் அரிய வகை அழற்சி நோய் இருப்பது 10 நாட்களுக்கு முன்புதான் ஒரு பரிசோதனையில் தெரியவந்தது. இதனிடையே சுஹானியின் நுரையீரல் பாதிக்கப்பட்டு அதில் அதிக நீர் சேர்ந்து கொண்டது. பின்னர் எய்ம்ஸில் அவர் செயற்கை சுவாசத்தின் உதவியுடன் வைக்கப்பட்டிருந்தார்.
ஆனால் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார். இது போன்ற அரிய நோய் உலகிலேயே 4 அல்லது 5 பேருக்குத்தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாம். இந்த நோய் தசைகளை வலுவிழக்க செய்யும். தோலில் வித்தியாசமான தடிப்புகள் தோன்றும். இது இதயம், கல்லீரல், நுரையீரல், குடல் உள்ளிட்ட உறுப்புகளை பாதிக்கும் என சுஹானியின் தந்தை தெரிவித்தார்.
இதன் அறிகுறிகள் சோர்வு, காய்ச்சல், எடை குறைதல், தசை வலி, கண் இமைகள் தொங்கி இருத்தல், மூச்சுவிடுவதில் சிரமம், தோல் சிவப்பு நிறமாக மாறுதல், கண் பகுதியில் வீக்கம் உள்ளிட்டவையாகும். இந்த நோயை முழுமையாக குணப்படுத்த முடியாது. ஆனால் மருந்து மற்றும் பிசியோதெரபி மூலம் கட்டுப்படுத்தலாம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications