வைரஸ்ன்னா! காஞ்சனா படத்தில் ராகவா உடலில் சரத்குமார் இறங்குவாரே! அதுதான்.. டாக்டர் பரூக் விளக்கம்
சென்னை: வைரஸ் காய்ச்சலில் இருந்து குணமான பிறகு பழைய மாதிரி உடலை எப்படி மீட்க வேண்டும் என்பது குறித்து டாக்டர் பரூக் அப்துல்லா விளக்கியுள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது சமூகவலைதளங்களில் கூறியிருப்பதாவது: வைரஸ் காய்ச்சல் குணமான பிறகு என்ன செய்ய வேண்டும் ? வைரஸ்கள் - பாக்டீரியாக்களிடம் இருந்தும் மாறுபட்டவை. வைரஸ்கள் உயிருள்ள செல்களில் தொற்றை ஏற்படுத்தி அவற்றில் இருந்து உணவை உண்டு கூடவே அந்த செல்களின் மரபணுக்களில் இணைத்துக் கொண்டு தன்னைப் போலவே பல வைரஸ்களை உருவாக்குமாறு கட்டளை இடுகின்றன.

இவ்வாறாக ஒரு மனிதன் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி குணமான பின்பும் கூட அந்த வைரஸ் தொற்றின் பாதிப்பு அவனை விட்டு நீங்க சில நாட்கள் முதல் பல மாதங்கள் ஆகின்றன. இதை நாடுகளுக்கு இடையே நடக்கும் போருடன் ஒப்பிடலாம். இங்கே வைரஸும் நமது உடலும் இருவேறு நாடுகள் என்று கொண்டால் ஒரு நாட்டின் படை (வைரஸ்) மற்றொரு நாட்டுக்குள் ஊடுருவினால், இந்த நாட்டின் ராணுவம் எதிர்வினையாற்றும் (நோய் எதிர்ப்பு சக்தி மண்டலம்) இந்த போர் நடக்கும் காலத்தைத் தான் நாம் நோயாக உணர்கிறோம்.
காய்ச்சல்
இருமல்
தும்மல்
மூக்கொழுகுதல்
தொண்டை வலி
உடல் வலி
அசதி
போன்ற பல அறிகுறிகளும், பெரும் வைரஸ் படை நம் எதிர்ப்பு சக்தி எனும் அரணைத் தாண்டி உள்ளே வந்து முற்றுகையிட அதனுடன் பெரும் போர் நடந்து வருகிறது. வந்திருக்கும் வைரஸின் வகை மற்றும் அதற்கு எதிராக நமது எதிர்ப்பு சக்தி எத்தகைய தாக்குதல்களை தொடுக்கிறது என்பதைப் பொருத்து நோயின் தீவிரம் இருக்கிறது.
நான் முன்னரே கூறியது போல உள்ளே வரும் வைரஸ்கள் தனியாக உயிர் வாழ முடியாது. ஒவ்வொரு வைரஸும் ஒவ்வொரு செல்லுக்குள் சென்று காஞ்சனா படத்தில் சரத்குமார் - ராகவா லாரன்ஸ் உடலுக்குள் இருப்பாரே அது போல வைரஸ் அனைத்தும் நமது செல்களுக்குள் இருக்கும். எனவே நமது எதிர்ப்பு சக்தி வைரஸ்களை அழிக்க வேண்டும் என்றால் அவை புகுந்துள்ள செல்களையும் அழிக்க வேண்டும்.
எனவே இருபக்க பாதகம் இருக்கும். நமது உடலிலும் இதனால் கொலேட்டரல் டேமேஜ் இருக்கும். வைரஸ் படையை வெல்வதற்கு ஒரு சில நாட்கள் எடுத்துக் கொண்டாலும். அதனால் உடலுக்கு ஏற்பட்ட பாதிப்பு பூரணமாக குணமாக மேலும் சில நாட்கள் முதல் சில வாரங்கள் ஏன் சில மாதங்கள் வரை எடுத்துக் கொள்கிறது. இதைத் தான் "வைரஸ் தொற்றுக்கு பின்பான நிலை" ( POST VIRAL SYNDROME) என்கிறோம் .
இந்த காலத்தில்
- அதீத அசதி
- உடல் சோர்வு
- தொடரும் இருமல்
- சில நாட்கள் லேசான ஜுரமும் இருக்கலாம்
- மூட்டுகளில் வலி
- உறக்க சுழற்சியில் பாதிப்பு
- மனச்சோர்வு
- கவனமின்மை
- உடலுறவில் நாட்டமின்மை
- குறி விரைப்புத்தன்மை பாதிப்பு
- மாதவிடாய் சுழற்சியில் பாதிப்பு
இப்படி பல விதங்களில் இந்த நிலை தொடரலாம். இதற்குக் காரணம் போர் புரிந்த வைரஸ்கள் முற்றிலுமாக அழிந்து விட்டாலும் நமது உடல் மேலும் சில காலம் போரைத் தொடர்கிறது என்றும் மேற்கண்ட போரின் விளைவால் ஏற்பட்ட பாதிப்புகளின் தன்மையால் இந்த அறிகுறிகள் தொடர்கின்றன என்றும் அர்த்தம்.
இந்த போஸ் வைரஸ் சிண்ட்ரோமை சரி செய்ய என்ன செய்யலாம்?
1. புரதச்சத்து நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும்.
மாமிச உணவாளர்கள்
- நெஞ்செலும்பு சாறு / ஆட்டுக்கால் சாறு
- கோழிச் சாறு
- மீன்
- முட்டை போன்றவற்றை உணவில் சேர்த்து வர வேண்டும்
தாவர உணர்வாளர்கள்
- பால் மற்றும் பால் பொருட்கள்
- வெண்ணெய் / பனீர் / நெய்
- பயறு/ பீன்ஸ் வகைகள்
- காய்கறி சாறு
சேர்க்க வேண்டும்
பொதுவாக தயிர் / யோக்ஹர்ட் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் 8-9 மணிநேரம் உறங்க வேண்டும். கடுமையான உடல் பயிற்சிகளை உடனே துவங்கக் கூடாது. எனினும் தினமும் அரை மணிநேரம் நடைப்பயிற்சி செய்யலாம். மன & உடல் அழுத்தத்தை சில காலம் குறைத்துக் கொள்ள வேண்டும். மனதுக்கு உகந்த விசயங்களை செய்து வர வேண்டும்.
லேசான ஜுரம் / இருமல் போன்றவை இருப்பின் மருத்துவரை அணுகி வைரஸ் தொற்றுக்கு பிந்தைய நிலை தானா? அல்லது எதிர்ப்பு சக்தி குறைவால் ஏற்பட்டுள்ள வாய்ப்பில் உள்ளே புகுந்த பாக்டீரியா தொற்றா? என்பதை பகுத்தாய்ந்து சிகிச்சை பெற வேண்டும். வைரஸ் தொற்றுக்கு பின்னால் உடல் தன்னை சரிசெய்து கொள்ள அதற்குரிய காலத்தை வழங்க வேண்டும்.
அதற்கு முன்னால் அதீத உடல் உழைப்பு மன உளைச்சலை வழங்கினால் உடல் தன்னை மீட்டெடுக்கும் காலம் இன்னும் நீளும் வாய்ப்பு உண்டு. இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications