மூக்குக் கண்ணாடிக்கு பதில் வரும் சொட்டு மருந்தை எப்படி பயன்படுத்த வேண்டும்? பக்க விளைவு இருக்குமா?
சென்னை: சந்தைக்கு வர போகும் கண் சொட்டு மருந்து மூக்குக் கண்ணாடியை இல்லாமல் ஆக்க போகிறதா என்பது குறித்து சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவர் பரூக் அப்துல்லா விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியருப்பதாவது: சந்தைக்கு வரப் போகும் கண் சொட்டு மருந்து மூக்குக் கண்ணாடியை இல்லாமல் ஆக்கப் போகிறதா? இது தான் கடந்த இரண்டு தினங்களாக மீடியாவில் வைரல் நியூஸ். அந்த கண் சொட்டு மருந்து குறித்து விரிவாகப் பார்ப்போம்.

பொதுவாக மனிதர்களுக்கு 40 வயதுக்கு மேல் அகவை மூப்பின் காரணமாக வெள்ளெளுத்து நோய் ஏற்படுகிறது. வெள்ளெளுத்து = வெள்ளை + எழுத்து அதாவது மிக அருகில் இருக்கும் விசயங்கள் தெளிவாகத் தெரியாமல் போகும். குறிப்பாக புத்தகம் படிக்கும் போது எழுத்துகள் தெளிவாகத் தெரியாமல் போவது.
கம்யூட்டர்/ மொபைலில் இருக்கும் சிறிய ஃபாண்ட்கள் தெரியாமல் போவது.குண்டூசியில் நூல் கோர்க்க இயலாமல் போவது உள்ளிட்ட பிரச்சனைகள் எழும். இதை "ப்ரெஸ்பயோபியா" (Presbyopia)என்று அழைக்கிறோம். எதனால் இந்த நோய் ஏற்படுகிறது? நமது கண்களுக்குள் "லென்ஸ்" இருக்கிறது. தூரமான பொருட்களை பார்க்கும் போது லென்ஸ் நீளமாகவும் அருகில் இருக்கும் விசயங்களைக் பார்க்கும் போது அந்த லென்ஸ் நீளம் குறைந்து சற்று குண்டாகி விடும்.
இவ்வாறு லென்சைத் தேவைக்கு ஏற்ப நீட்டிக் கொள்வதற்கும் குறைத்துக் கொள்வதற்கும் நமக்கு பிரத்யேக தசைகள் இருக்கின்றன. அதே போன்று அதிக ஒளி இருக்கும் பகல் நேரங்களில் நமது பாப்பா (Pupil) சுருங்கிக் கொள்ளும். இது மிக அதிக ஒளி கண்ணுக்குள் ஊடுருவி சேதம் விளைவிப்பதை தடுப்பதற்காக இருக்கும் ஏற்பாடு.
குறைவான ஒளி இருக்கும் மாலை மற்றும் இரவு நேரங்களில் நமது பாப்பா விரிந்து கொள்ளும். இது குறைவான ஒளியில் கூட ஓரளவு நல்ல பார்வைத் திறன் கிடைக்க உள்ள ஏற்பாடு. இவ்வாறு தூரத்தில் / அருகில் உள்ள விசயங்கள் , அதிக ஒளி / குறைவான ஒளி இருக்கும் நேரங்களுக்கு ஏற்றபடி நமது லென்ஸ் மற்றும் பாப்பா தன்னை தகவமைத்துக் கொள்வதை "அகாமடேசன்" என்று அழைக்கிறோம்.
இப்போது வெள்ளெளுத்தில் லென்ஸ் தனது நீண்டு பிறகு அளவில் குறைந்து குண்டாகும் ஆற்றலை இழந்து விடுகிறது. இதனால் முதியோர்களால் புத்தகம் படிக்க முடிவதில்லை. இதை சரி செய்வதற்கு இவர்களுக்கு படிப்பதற்கு என்று மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்படுகின்றன.
அதன் வழி கிட்டப் பார்வையை உறுதி செய்ய முடிகின்றது. இப்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ள "ப்ரெஸ்வு" (PresVu) எனும் கண் சொட்டு மருந்து - எப்படி வெள்ளெளுத்தில் வேலை செய்கிறது? வெள்ளெளுத்து இருக்கும் தாத்தா பாட்டி ஒரு செய்தித் தாளைக் கண்ணாடி இல்லாமல் படிக்கும்ச் சொன்னால் என்ன செய்வார்கள்?
கண்களைச் சுருக்கி சுருக்கி படிப்பார்கள் தானே? அவ்வாறு கண்களைச் சுருக்கும் போது அவர்களது பாப்பா சுருங்கும். அதனால் "குண்டூசி ஓட்டை விளைவு" (Pin Hole Effect) மூலம் சற்று பார்வை கூடும். அதே விளைவைப் பயன்படுத்தி பைலோகார்பின் எனும் மருந்தைப் கண்களில் சொட்டு மருந்தாக விடும் போது நமது கண்களின் பாப்பாவை சுருங்கச் செய்து அதன் வழி கிட்டப் பார்வையை தெளிவுறச் செய்கிறது.
இந்த பைலோகார்பின் கண் சொட்டு மருந்து - கண் நோய் சிகிச்சையியலில் புதிய வரவன்று. ஏற்கனவே நெடுங்காலம் க்ளாகோமா எனும் கண் அழுத்த நோய்க்கு மருந்தாகப் பயன்பட்டு வந்தது . தற்போது அதை விட நவீன மருந்துகள் க்ளாகோமாவுக்கு கண்டறியப்பட்டு விட்டதால் மூன்றாம் நிலை மருந்தாக இருக்கிறது.
இந்த பைலோகார்பின் மருந்து க்ளாகோமாவுக்கு 2% எனும் நீர்ப்பு பதத்தில் வழங்கப்படும். அந்த பதத்தில் வழங்கப்படும் போது - ரெடினா எனும் விழிப்படலப் பெயர்ந்து கொள்ளுதல் (RETINAL DETACHMENT) போன்ற சில விரும்பத்தகாத ஒவ்வாமை நிகழ்வுகள் ஏற்படும் வாய்ப்பு இருந்தது. எனவே ப்ரெஸ்பயோபியா சிகிச்சையில் நீர்ப்பு பதத்தை 1.25% ஆகக் குறைத்து பைலோகார்பின் வழங்கப்படுகிறது.
இந்த ப்ரெஸ்வு நிறுவனம் தனது ஆய்வின் அறிக்கையை இன்னும் பொதுவான தளத்தில் பதிவு செய்யாமல் இருப்பதால், பக்கவிளைவுகள் குறித்து விரிவான கருத்து கூற இயலவில்லை. எனினும் அமெரிக்காவில் இதே மருந்து இதே பதத்தில் வுய்ட்டி எனும் பெயரில் சந்தைப்படுத்த அனுமதி வழங்கப்பட்டது.
அதில் தலைவலி, சொட்டு மருந்து போட்ட சில நிமிடங்கள் கண் லேசான எரிச்சல், கண்ணீர் சற்று அதிகமாக சுரத்தல், சில நிமிடங்கள் கண் பார்வை மங்குதல் போன்ற அளவில் குறைவான பக்க விளைவுகள் தோன்றுவதை அறிய முடிகிறது.
அமெரிக்காவில் 2023இல் க்ளோசி எனும் பெயரில் இதே பைலோகார்பின் சொட்டு மருந்தை இன்னும் நீர்மப்படுத்தி 0.4% என்ற அளவில் தயாரித்து சந்தைப்படுத்த அனுமதி வழங்கப்பட்டது. இந்த சொட்டு மருந்தின் விலை 400 ரூபாய்க்கு சற்று குறைவு. ஒரு நாளைக்கு ஓரிரு முறை இரு கண்களிலும் தலா ஒரு சொட்டு விட்டுக் கொள்ள வேண்டும்.
சொட்டு மருந்து விடப்பட்ட பதினைந்து முதல் இருபது நிமிடங்களில் செயலாற்றத் துவங்கி ஆறு முதல் எட்டு மணிநேரங்கள் வரை தொடர்ந்து செயலாற்றும் தன்மை கொண்டது. இந்த மருந்தைக் கொண்டு 40 முதல் 55 வயதினருக்கு மூன்றாம் கட்ட மருத்துவ ஆய்வு செய்யப்பட்டுள்ளது. எனவே 55 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இந்த மருந்து எவ்வாறு வேலை செய்யும் என்பது ஆய்வுகளுக்குப் பின்பே தெரியவரும். மருத்துவரின் பரிந்துரையின் பேரிலேயே இந்த சொட்டு மருந்து விநியோகிக்கப்படும்.
ரெடினா சார்ந்த பக்கவிளைவுகள் மிக அரிதாக ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் கட்டாயம் இந்த மருந்தை உபயோகிக்கும் முன் கண் நல மருத்துவர்கள் உங்களின் ரெடினாவின் (விழிப்படலத்தின்) நலனை உறுதி செய்த பின்னரே இந்த சொட்டு மருந்தை வழங்குவார்கள். இந்த சொட்டு மருந்தை கண்களில் விட்ட சில நொடிகள் முதல் சில நிமிடங்கள் வரை கண் பார்வை சற்று மங்கலாகத் தெரியலாம்.
மேலும் குறைவான ஒளி நிலவும் மாலை மற்றும் இரவு நேரங்களில் இந்த மருந்தைப் போட்டுக் கொண்டு வாகனம் இயக்குவது / இயந்திரங்கள் இயக்குவதை இன்னும் கவனத்துடன் கையாள வேண்டியிருக்கும். இந்த சொட்டு மருந்தை உபயோகிக்கும் போது திடீரென கண்களில் ஒளி பீய்ச்சி அடிப்பது போலவோ பார்வையில் ஏதோ பொருட்களை மிதந்து கொண்டிருப்பது போலவோ அல்லது பார்வை இழப்போ ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
இது ரெடினா பெயர்ந்து கொண்டதன் காரணமாக இருக்கலாம். கண்களில் உள்ள கருவிழியில் அழற்சி இருப்பவர்கள் இந்த மருந்தை உபயோகிக்கக் கூடாது. காண்டாக்ட் லென்ஸ் போடுபவர்கள் அதை கழட்டி வைத்து விட்டு பத்து நிமிடங்கள் கழித்தே இந்த சொட்டு மருந்தை உபயோகிக்க வேண்டும். இவ்வாறு மேற்கத்திய உலகத்தில் ஏற்கனவே சந்தையில் இருக்கும் சொட்டு மருந்து தற்போது இந்தியாவில் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்த அனுமதி கிடைத்துள்ளது.
எனினும் இந்த மருந்தை விநியோகித்த பிறகு ஏற்படும் விளைவுகள் மற்றும் பாதுகாப்பு ஆகியவை குறித்து நான்காம் கட்ட மருத்துவ ஆய்வை உற்பத்தி செய்யும் நிறுவனம் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கண் நல மருத்துவர்கள் இனி வரும் காலங்களில் நோயரை பரிசோதித்து விட்டு இந்த மருந்தின் சாதக பாதக அம்சங்களை சீர்தூக்கிப் பார்த்து
தேவையானவர்களுக்கு பரிந்துரைப்பார்கள். இவ்வாறு பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications