கோவையில் 23 வயது இளம்பெண் நாய்க் கடியால் மரணம்! கடித்த 3 மாதத்தில் நடந்தது என்ன?
சென்னை: கோவையில் 23 வயது இளம்பெண் அவருடைய வீட்டில் வளர்த்த செல்ல நாய் கடித்ததால் 3 மாதங்கள் கழித்து அவர் மரணமடைந்துள்ள சம்பவம் குறித்து சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவர் டாக்டர் பரூக் அப்துல்லா விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா கூறியிருப்பது: கோவையில் 23 வயது இளம்பெண் அவர் வீட்டில் வளர்க்கும் செல்ல நாய்க்குட்டி கடித்து சுமார் மூன்று மாதங்கள் கழித்து ரேபிஸ் நோய் ஏற்பட்டு மரணமடைந்துள்ளார்.

இவரைக் கடந்த ஜூலை மாதம் இவர் வளர்க்கும் நான்கு குட்டிகளுள் ஒன்று கடித்துள்ளது.
தனியார் கிளினிக் சென்ற அவருக்கு கடித்த காயத்துக்கான சிகிச்சை மற்றும் டெட்டானஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
நாய்க்குட்டிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி முறையாக செலுத்தப்பபட்டிருக்கும் என்ற காரணத்தாலும்
காயம் சிறிதாக இருந்திருக்கும் என்பதாலும்
ரேபிஸ் தடுப்பூசி போடாமல் விட்டிருக்கிறார்கள்.
ஆனாலும் மூன்று மாதங்கள் கழித்து ரேபிஸ் நோய் ஏற்பட்டு அன்னார் இறந்திருக்கிறார்.
இது குறித்து மருத்துவர்களும் பொதுமக்களும் விழிப்புணர்வு பெற வேண்டியது அவசியம்
நாய்க்கு தொடர்ந்து வருடா வருடம் ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டு வந்தாலும் நாய் கடித்தாலோ பிராண்டிணாலோ கட்டாயம் ரேபிஸ் தடுப்பூசி போடப்பட வேண்டும்.
நாய் பூனை ஆடு மாடு உள்ளிட்ட வளர்ப்பு விலங்குகள் மற்றும் காட்டுப்பகுதிக்குச் செல்லும் போது வன விலங்குகள் கடித்தாலும் ரேபிஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். வளர்ப்பு நாய்கள் குழந்தைகளையோ அல்லது வளர்ப்பவர்களையோ வாய் கண் உள்ளிட்ட பகுதிகளில்
நக்குவதற்கு அனுமதிக்கக் கூடாது.
நாயின் எச்சிலில் ரேபிஸ் கிருமி இருக்கும். அதன் வழியாக தொற்றுப் பரவும் அபாயம் உண்டு.
தடுப்பூசிப் போட்டு பராமரித்து வரும் செல்லப் பிராணிகளை, தடுப்பூசி போடாமல் சுற்றி வரும் தெருநாய்களுடன் தொடர்பின்றி பார்த்துக் கொள்ள வேண்டும். நாய்க்கு முறையாக தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும் கூட அதற்கு ரேபிஸுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி சரியாக தூண்டப்படாமல் இருந்தால் அதனிடம் ரேபிஸ் வைரஸ் தொடர்ந்து வாழ்ந்து வரும்.
எனவே கவனம் தேவை. பொதுவாக நாய் இனத்தில் முப்பது முதல் நாற்பது சதவிகிதம் நாய்களிடம் ரேபிஸ் வைரஸ் சாதாரணமாகவே காணப்படுகிறது. எனவே நாய்க்கடி , பூனைக்கடி , நகக் கீறல் போன்றவற்றை சாதாரணமாகக் கடந்து செல்லக் கூடாது. உடனே கடிபட்ட இடத்தில் 15 நிமிடங்கள் சோப் போட்டு குழாய் நீரைத் திறந்து விட்டு நன்றாகத் தேய்த்துக் கழுவ வேண்டும்.
இவ்வாறு தேய்த்துக் கழுவுமுன் கடிபட்ட இடத்தை உங்களின் செல்போனில் நல்ல வெளிச்சத்தில் ஒரு புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் . இது சிகிச்சை அளிக்கும் மருத்துவரிடம் காட்டி
அவர் நாய்க்கடியை வகைப்படுத்தற்கு துணை புரியும்.
கடித்த இடத்தில் ரத்தம் வந்து விட்டால் அது மூன்றாம் நிலை கடியாகும். இதற்கு ரேபிஸ் தடுப்பூசியுடன் கூடவே இம்யூனோகுளோபுளின் எனும் உடனடி எதிர்ப்பு சக்தி மருந்தை கடிபட்ட இடத்தில் ஊசியாக செலுத்த வேண்டும்.
ரேபிஸ் மரணங்களுள் சில இந்த இம்யூனோகுளோபுளின் சரியான நேரத்தில் போடப்படாமலும் நடக்கிறது என்பதை குறிப்பிடுகிறேன். ரத்தம் வராத கடிகளுக்கு இரண்டாம் வகை எனப்படும். இதற்கு
ரேபிஸ் தடுப்பூசி மட்டும் போதுமானது.
அரசு மருத்துவமனைகள் அனைத்திலும் ரேபிஸ் தடுப்பூசி மற்றும் இம்யூனோகுளோபுளின் இலவசமாக வழங்கப்படுகின்றன.
தனியார் மருத்துவமனைகளிலும் ரேபிஸ் தடுப்பூசியைப் பெறலாம். தயவுகூர்ந்து நாய்க்கடி அது செல்ல நாய்க்கடியாக இருந்தாலும் சரி.. அந்த விலங்குகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி சரியாக வழங்கப்பட்டிருந்தாலும் சரி.. கடிபட்டவர்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி வழங்கிடுங்கள். அசட்டை செய்யாதீர்கள், ரேபிஸ் 100% உயிர்க்கொல்லி நோயாகும். அதைத் தடுப்பதற்கு நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம், "தடுப்பூசியும் இம்யூனோகுளோபுளினும்" என்பதை அறிந்திடுங்கள். இவ்வாறு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications