வடகிழக்கு பருவமழை! seasonal fever! டெங்குவா, கொரோனாவா, வைரஸ் காய்ச்சலா எப்படி கண்டுபிடிப்பது?
சென்னை: பருவகாலங்களில் ஏற்படும் காய்ச்சல் என்ன காய்ச்சல் என்பதை கண்டறிவது எப்படி? என சிவகங்கை அரசு மருத்துவமனை டாக்டர் பரூக் அப்துல்லா விளக்கியுள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: பருவகால காய்ச்சல் எந்த வகை ஜூரமெனக் கண்டறிவது எப்படி ? தமிழ்நாட்டில் மழை பொழிந்து குளிர்ந்த பருவ காலம் நிலவும் வருடத்தின் இறுதி மாதங்களில் பல வைரஸ்கள் எளிதாகப் பரவி நோய்த்தொற்றை ஏற்படுத்துவது இயல்பான ஒன்றாகும்.

குளிர்காலம் நிலவும் போது சுவாசப் பாதையைத் தாக்கும் வைரஸ்களுக்கு கொண்டாட்டம் தான்.
இருமுவது தும்முவது போன்ற சுவாசப்பாதை தொற்று அறிகுறிகள் மூலம் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதாகப் பரவும். பள்ளிகளில் கல்லூரிகளில் கூட்டமாக சேரும் சந்தைகள் , பேரங்காடிகளில் என எளிதாகப் பரவும் சூழ்நிலை ஏற்படும்.
சுவாசப்பாதையை தாக்கி நோயை வரவழைக்கும் வைரஸ்கள் பின்வருமாறு
- இன்ஃப்ளூயன்சா
- கொரோனா
- ரெஸ்பிரேட்டரி சின்ஸியல் வைரஸ்
போன்ற வைரஸ்களால் தொற்றுகள் ஏற்படும். பெரும்பான்மை தொற்றுகளில் ஒரு வாரத்திற்குள்
காய்ச்சல் இருமல் /தும்மல் / மூக்கொழுகுதல்
தொண்டை வலி , உடல் வலி , சோர்வு என்று ஏற்பட்டு குணமாகும். எனினும் இன்ஃப்ளூயன்சாவின் H1N1 , H3N2 போன்ற வகைகள்,
கொரோனாவின் சமீபத்திய வகையான SARS nCOV19 போன்ற வகைகள் தாக்கும் போது நோய் சற்று தீவிரமாக வெளிப்பட வாய்ப்புள்ளது.
மேற்கூறிய சாதாரண அறிகுறிகளுடன்
- திடீரென மூச்சு விடுவதில் சிரமம்
- மூச்சுத் திணறல்
- நெஞ்சுப்பகுதியில் அழுத்துவது போன்ற உணர்வு
- தலை சுற்றல்
- பிதற்றல் நிலை
இந்த அபாய அறிகுறிகள் சேர்ந்தால் வந்திருப்பது பிரச்சனைக்குரிய வைரஸ் தொற்று என்பதை அறிந்து உடனடியாக அட்மிட் ஆகி சிகிச்சை பெற வேண்டும்.
இன்னும் மழைக்காலத்தில் கொசுவினால் பரவும் டெங்கு காய்ச்சல் சற்று அதிகமாக வெளிப்படும். டெங்கு காய்ச்சலைப் பொருத்தவரை
- முதல் மூன்று நாட்கள் அதீத உடல் உஷ்ணம்
- தீவிர உடல் வலி
- மூட்டுக்கு மூட்டு வலி
- கண்களுக்குள் வலி
போன்றவை ஏற்படும்
இத்துடன்
- மலம் கறுப்பாக செல்வது
- சிறுநீரில் ரத்தம் செல்வது
- பல்லின் ஈறுகளில் ரத்தக்கசிவு
- உடல் முழுவதும் சிறு சிறு ரத்தக்கட்டு போன்ற திட்டுகள் ஏற்படுவது
- உணவு நீர் அருந்த இயலாமை
- கடுமையான வயிற்று வலி
போன்றவை அபாய அறிகுறிகளாகும்.

பருவ காலத்தில் சுவாசப்பாதை தொற்றுகள் ஒருபக்கமும் மற்றொரு பக்கம் டெங்குவும் பரவுவதால் ஒரே நபருக்கு இரண்டு தொற்றுகளும் ஏற்படலாம். எனவே மேற்கூறிய அத்தனை அறிகுறிகளும் ஒருவரிடமே இருக்கலாம். இவையன்றி கொரோனா வைரஸ் தொற்று இருப்பின்
- வயிற்றுப் போக்கு
- சுவை உணர இயலாத தன்மை
- நுகர்தல் திறன் இழப்பு போன்றவையும் அறிகுறிகளாக ஏற்படலாம்.
இத்தகைய சூழ்நிலையில் காலத்தின் அவசியம் கருதி அறிகுறிகள் ஏற்பட்ட உடனே மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெற வேண்டும். சுய மருத்துவம் , மருந்து கடைகளில் மருந்துகள் வாங்கி உண்பது போன்றவை உயிருக்கு ஆபத்து விளைவிக்கலாம்.
குறிப்பாக குழந்தைகளுக்கும் வயோதிகர்களுக்கும் பல இணை நோய்களைக் கொண்டவர்களுக்கும் ஏற்படும் அறிகுறிகளை உதாசீனம் செய்வது நல்லதல்ல.
காய்ச்சல் அறிகுறிகள் தோன்றிய உடனே மருத்துவரை சந்திப்பதே சரியானது இந்த பருவ காலத்தில் சளி இருமல் காய்ச்சல் அறிகுறிகளுடன் இருப்பவர்கள் இயன்றவரை ஓரிரு நாள் விடுப்பு எடுத்து வீட்டில் இருந்தால் நோய் தொற்று பிறருக்கு பரவாது.
அவ்வாறு பணிபுரிய வேண்டிய சூழல் ஏற்படின் முகக்கவசம் அணிந்து கொண்டு பணிபுரிவதும் சிறப்பான செயல். மழைக்காலத்தில் சாதாரண சீசனல் காய்ச்சலுடன் கூடவே டெங்கு , பன்றிக் காய்ச்சல், கொரோனா போன்றவையும் பரவும் என்பதால்
எச்சரிக்கை உணர்வுடன் காய்ச்சல் அறிகுறியை அணுக வேண்டியது நம் பொறுப்பு. இவ்வாறு பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications