உயிர்க் கொல்லியான வெஸ்ட் நைல் வைரஸ்! எப்படி பரவுகிறது? அதீத அறிகுறிகள் என்ன?
சென்னை: கேரளாவில் பரவி வரும் வெஸ்ட் நைல் வைரஸின் அறிகுறிகள் என்ன, நோய் பாதித்தோரிடம் இருந்து தற்காத்து கொள்வது எப்படி என்பது குறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஆப்ரிக்காவின் உகாண்டா நாட்டின் நைல் நதிக்கரையின் மேற்குப் புறப் பகுதிகளில் இந்த வைரஸ் ( தீநுண்மி) 1937 இல் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டமையால்
"வெஸ்ட் நைல் ஃபீவர் வைரஸ்" எனும் பெயரைப் பெற்றது.

இந்த வைரஸ் புறா, காகம் போன்ற பறவைகளில் பரவலாகக் காணப்படுகிறது. அந்த பறவைகளிடையே இந்த வைரஸைப் பரப்பும் பணியைச் செய்வது க்யூலெக்ஸ் இனக் கொசுக்களாகும். வைரஸ் தாங்கிய க்யூலெக்ஸ் கொசுக்கள் - பறவைகளை கடிக்க இயலாத சூழ்நிலையில் - மனிதர்களையும் குதிரைகளையும் கடித்து நமக்கும் குதிரை இனத்திற்கும் இந்த வைரஸைப் பரப்பிவிடுகின்றன.
இந்த வைரஸ் தொற்று ஏற்பட்ட மனிதர்களைக் கடித்த கொசு, ஆரோக்கியமான மனிதர்களைக் கடிக்கும் போது வைரஸ் தொற்று பரவுகிறது. தொற்றுக்குள்ளான தாயிடம் இருந்து கருவுற்றிருக்கும் குழந்தைக்குப் பரவுகிறது. தாய்ப்பால் மூலம் அரிதாகப் பரவலாம். தொற்றுக்குள்ளானவர்களிடம் இருந்து ரத்தம் பெறப்பட்டு பிறருக்கு ஏற்றப்படும் போதும், அவரிடம் இருந்து உறுப்பு தானம் பெறுபவருக்கும் பரவும்.

இவையன்றி வேறு வழிகளில் ஒரு மனிதனிடம் இருந்து மற்றவருக்குப் பரவுவதில்லை. ஒருவருக்கு தொற்று ஏற்பட்டதில் இருந்து 3 முதல் 6 நாட்களுக்குள் அதற்கான அறிகுறிகள் தென்படும். வெகு சிலருக்கு 14 நாட்கள் வரை கூட அறிகுறிகள் தோன்ற காலமெடுக்கும். இதை இன்குபேசன் பீரியட் என்கிறோம். தொற்று ஏற்படும் 80% பேருக்கு அறிகுறிகளற்ற தொற்றாக இருக்கும்.
எந்த அறிகுறிகளும் இல்லாமலேயே நோய் குணமாகிவிடும். மீதமுள்ள 20% பேருக்கு சாதாரண காய்ச்சல், தலைவலி, உடல் வலி, மூட்டு வலி ஏற்பட்டு ஏனைய வைரஸ் காய்ச்சலைக் போலவே குணமாகிவிடும். ஒரு சதவிகிதத்துக்கும் குறைவான நபர்களுக்கு மட்டுமே மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் அளவு - தீவிர நோய் நிலையை உண்டாக்கும்.
அபாய அறிகுறிகள், அதீத காய்ச்சல் , அதீத தலைவலி, அதீத உடல் சோர்வு , பின் கழுத்துப் பகுதியில் தசைப்பிடிப்பு / இறுக்கம், கை / கால் தளர்ச்சி பக்கவாதம் ஏற்படுதல் , வலிப்பு ஏற்படுதல், கோமா ஆகியவை மூளைக்காய்ச்சல் ஏற்பட்டிருப்பதின் அபாய அறிகுறிகளாகும்.
மேற்கூறிய அபாய அறிகுறிகள் இருப்பின் உடனடியாக மருத்துவமனைகளில் அட்மிட் ஆகி சிகிச்சை பெற வேண்டும். முதியோர், நீரிழிவு நோயாளிகள், எதிர்ப்பு சக்தி குன்றியோர் கவனத்துடன் இருக்க வேண்டும். தற்போது கேரளாவில் மலப்புரம், திருச்சூர்,
கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் ஆறு நபர்களுக்கு இந்தத் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
கடந்த திங்கள்கிழமை ஒருவர் இறந்துள்ளார். கொசுக்கடி மூலம் பரவும் நோய் தொற்று ஆதலால் அதீத கவனம் தேவை. க்யூலெக்ஸ் வகை கொசுக்கள் அதிகாலை நேரமும் அந்தி சாயும் நேரமும் இரவு நேரங்களிலும் கடிக்கும் தன்மை கொண்டவை. சாக்கடை , கழிவு நீர், சேற்று நீர், குளம் குட்டைகள், புல்வெளிகள், கழனிகள் ஆகியவற்றில் உள்ள நீரின் மேற்புறத்தில் முட்டை இடும் தன்மை கொண்டவை.
வளர்ந்த கொசு 3.2 கிலோமீட்டர் சுற்றளவு வரை பறந்து நோய் பரப்பும் தன்மை கொண்டிருக்கும். வேனில் மற்றும் இலையுதிர் காலங்களில் இந்தக் கொசுவின் இனப்பெருக்கம் அதிகமாக இருக்கும். இந்த நோய் ஏற்படாமல் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
கொசுக்கடியை இயன்ற அளவு தவிர்க்க வேண்டும். வீடு மற்றும் வீட்டின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
கொசுக்கடியை தவிர்க்கும் முகமாக கொசு வலைகள் , வெளிர் நிற ஆடை அணிய வேண்டும். பளிச்சென அடர்நிறமுள்ள ஆடைகள் கொசுவை ஈர்க்கும் இயல்புடையவை. கைகளையும் கால்களையும் முழுவதுமாக மறைக்குமாறு ஆடை அணிவது சிறந்தது.
கொசுவர்த்தி/ கொசுக்கொல்லி ஆவியாகும் திரவங்கள்/ கொசுக்கொல்லி பூச்சுகள் போன்றவற்றை சூழ்நிலையைப் பொருத்து உபயோகிக்கலாம். வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சலின் அபாய அறிகுறிகள் குறித்து கவனத்துடன் இருப்போம். உயிரிழப்புகளைத் தவிர்ப்போம். இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications