வெயிலுக்கு போயிட்டு வீட்டுக்கு வந்ததும் நாக்கு வறண்டு போகுதா? ஐஸ் வாட்டரை குடிக்கலாமா?
சென்னை: என்னங்க வெயில் வாட்டி எடுக்குதா? ஐஸ் வாட்டாரை வெயில் காலத்தில் குடிக்கலாமா கூடாதா? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
என்னா வெயிலு என்னா வெயிலு! தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே இளநீர் கடைகள், ஜூஸ் கடைகள், மோர் கடைகள், சர்பத் கடைகள் முளைத்துள்ளன.

வெயில் நேரத்தில் கட்டாயம் வெளியே செல்ல தேவையுள்ளவர்கள் இந்த கடைகளில் நின்று ஆசுவாசப்படுத்திக் கொண்டுதான் செல்கிறார்கள். அது போல் நுங்கு, பதநீர் உள்ளிட்ட கடைகளும் சாலையோரங்களில் நாம் பார்க்கிறோம்.
அது போல் வீட்டுக்கு வரும் போதே ரெடியாக விற்கப்படும் ஜூஸ்களை வாங்கிக் கொண்டு வந்து அதை வீட்டில் உண்பவர்களும் இருக்கிறார்கள். இது தவறு, ஏற்கெனவே பாட்டில்களில் டின்களில் அடைக்கப்படும் சோடா நிறைந்த ஜூஸ்களை குடிக்கக் கூடாது. இது உடலின் உஷ்ணத்தை மேலும் அதிகரிக்கக் கூடும்.
எல்லாவற்றுக்கும் மேல் ஃபிரிட்ஜில் வைக்கப்படும் கூலிங் நிறைந்த தண்ணீரை பலர் குடிக்கிறார்கள். இதன் மூலம் தாகம் தணிவதாகவும் நம்புகிறார்கள். ஆனால் இது போல் ஐஸ் வாட்டர் உடலில் உள்ள உஷ்ணத்தை மேலும் அதிகரிக்கும் என்பதை அறியாமல் இருக்கிறார்கள். வெயிலில் இருந்து வீட்டுக்கு வந்தாலோ, வெயிலில் அலைந்து திரிந்தாலோ ஐஸ் வாட்டர்தான் பெஸ்ட் என நினைக்கிறார்கள்.
இது தவறு. செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு உடல் செயல்பாடுகளை ஆதரிக்க மற்றும் இயல்பான உடல் வெப்பநிலையை பராமரிக்க தினமும் குறிப்பிட்ட அளவு தண்ணீரை குடிப்பது என்பது அவசியமாகிறது. இதன் மூலம் அதிகபடியான வெயிலால் ஏற்படக் கூடிய நீரிழிப்பையும் தடுக்க உதவுகிறது.
உடலின் இயல்பான வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ், அதாவது 98.5 டிகிரி பாரன்ஹீட்டாகும். இதனால் ஐஸ் வாட்டரை பருகும் போது உடலில் சமநிலையின்மையை ஏற்படுத்தும். செரிமானத்திலும் தாமதமாகும். வெயில் காலத்திலும் ஐஸ் வாட்டர் குடித்தால் தொண்டையில் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு காய்ச்சலை தரும் என்கிறார்கள்.
அறை வெப்பநிலையில் உள்ள தண்ணீரை குடிப்பதே அதிக நன்மைகளை தரும். தண்ணீரை நடந்து கொண்டோ நின்று கொண்டோ குடிக்கக் கூடாது. உட்கார்ந்து கொண்டுதான் குடிக்க வேண்டும். ஐஸ் வாட்டரை குடிப்பதற்கு பதில் வெந்நீரை குடித்தால் கூட தாகம் அடங்கும். இது பலருக்கு தெரியாத ஒரு விஷயம்!
அப்படியும் வெயிலுக்கு இதமாக குடிக்க வேண்டும் என்றால் மண் பானையில் வைக்கும் நீரை குடியுங்கள், உடலுக்கும் ஆரோக்கியம், வறட்சிக்கும் இதமாக இருக்கும். மேலும் ஐஸ் வாட்டரை குடித்தால் ரத்த நாளங்கள் வெடிப்பதாகவும் ஒரு தகவல் உலா வருகிறது. மேலும் பக்கவாதம் ஏற்படவும் வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications