கோடை இரவிலும் குழந்தைகளுக்கு தண்ணீர் குடுங்க.. 2 வேளையும் குளிங்க.. குட் அட்வைஸ் தந்த தமிழக அரசு
சென்னை: நம்முடைய உடல் செயல்பட வேண்டுமானால் தண்ணீர் இன்றியமையாதது. அதிகமாக தண்ணீர் குடிப்பது செரிமானத்தை எளிதாக்குகிறது, மலச்சிக்கலை தடுக்கிறது, உடலிலுள்ள நச்சுகளை வெளியேற்றுகிறது, சிறுநீரக செயல்பாட்டை சீராக்குகிறது, மூட்டுகள் மற்றும் தசைகளை வலுவாக்குகிறது, சருமத்தை காக்கிறது, இன்னும் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. ஆனால், கோடையில் தண்ணீரை சரியாக குடிக்காமல் போனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா?
தாகம் எடுக்காமல் இருக்கிறதே என்று பலரும் தண்ணீர் குடிக்காமல் விட்டுவிடுவார்கள்.. நீரிழப்பு உள்ளிட்ட பல்வேறு உடல் கோளாறுகளுக்கு இதுதான் பிரதான பிரச்சனையாக அமைகிறது... வழக்கமான நாளிலேயே தினமும் இரண்டரை லிட்டர் தண்ணீரையாவது குடிக்க சொல்கிறார்கள். இதுவே கோடை என்றால், நீரின் அளவை கட்டாயம் அதிகப்படுத்த வேண்டியிருக்கிறது.
ஏனென்றால், மூளை முதல் சிறுநீரகங்கள் வரை உறுப்புகள் சிறப்பாக செயல்பட தண்ணீர் தேவை.. தண்ணீர் குறைவாக குடித்தால் கிட்னி பாதிப்புகள் வரும்.. சிறுநீரகத்தில் கற்கள் உருவாகிவிடும்.. தண்ணீர் உடலில் இருந்தால்தான், உமிழ்நீர் சுரப்பிகளின் செயல்பாடுகள் நன்றாக இருக்கும். அப்போதுதான் சாப்பிடும் உணவு ஜீரணமாகும். உமிழ்நீர் சுரக்கவில்லையென்றால் தொற்றுநோய் பாதிக்க வாய்ப்புகள் உள்ளன.

வெயில் கால பாதிப்புகள்
இதுபோக வெயிலில் வியர்வை காரணமாக நிறைய நீர் இழப்புகள் ஏற்படும்...இது மலச்சிக்கலை தந்துவிடும்.. அதேபோல மூட்டுகள் மற்றும் திசுகள் சிறப்பாக செயல்படவும் தண்ணீர் தேவை.. இல்லாவிட்டால் மூட்டுகளில் தேய்மானம் ஏற்பட்டு, கால்வலி, நரம்பு பிரச்சனை ஏற்படும். நாம் சாப்பிடும் உணவின் சத்துதேவையான சத்துக்களை எடுத்துச் செல்வதில் தண்ணீரின் பங்கு இன்றியமையாதது.
ரத்த ஓட்டத்தை உடலின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு செல்ல ஆக்ஸிஜன் தேவை.. இதற்கு தண்ணீர் தேவை.. அதேபோல சரும ஆரோக்கியத்துக்கும், தலைமுடி ஆரோக்கியத்துக்கும் தண்ணீர்தான் பிரதானம். கோடையில் தண்ணீர் சரியாக குடிக்காவிட்டால் பகலில் மட்டுமல்ல, இரவிலும் நீர்ச்சத்து குறைபாடு வருமாம்.. இதுகுறித்து, முக்கிய அறிவுரை ஒன்றை தமிழக பொது சுகாதார துறை விடுத்துள்ளது.
மீண்டும் அறிவுறுத்தல்
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருவதால், காலை, 11:00 முதல் மாலை, 3:00 மணி வரை, தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம். அப்படியே சென்றாலும், குடிநீர் பாட்டில், குடை உள்ளிட்டவற்றை, எடுத்து செல்ல வேண்டும் என்று ஏற்கனவே பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், மீண்டும் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதில், "கோடை வெயிலின் தாக்கத்தால், பகல் போன்று இரவிலும், வெப்ப உஷ்ணம் அதிகமாக காணப்படுகிறது. துாங்கிக் கொண்டிருந்தாலும், வாய், நாக்கு போன்றவை வறண்டு விடுகிறது. எனவே, குழந்தைகளுக்கு இரவிலும், அடிக்கடி நீர் அருந்த கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.
2 வேளை குடிக்க வேண்டும்
இது குறித்து, பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் சொல்லும்போது, ஏசி வசதி இல்லாத வீடுகளில், குழந்தைகளுக்கு அடிக்கடி குடிநீர் கொடுப்பதும், அவர்களை தினமும் இரு வேளை குளிக்க வைப்பதும் மிக அவசியம். குறிப்பாக, இரவில் தூக்கத்திலேயே, வாய், நாக்கு போன்றவை வறண்டு போகும்.
பெரியவர்கள் சுதாரித்துக்கொண்டு, தண்ணீர் குடித்துவிடுவார்கள். ஆனால், குழந்தைகள், சிறுவர்கள், சிறுமிகள் அப்படி தண்ணீர் குடிப்பது சந்தேகம்.. எனவே, குழந்தைகள் துாங்கும்போதும், குறிப்பிட்ட இடைவெளியில், அவர்களுக்கு தண்ணீர் கொடுப்பது அவசியம்" என்று தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications