ஓமவள்ளி இலை பெஸ்ட் மூலிகை.. ஓமவல்லி மருந்து குழம்பின் பயன்கள்.. ஓமவல்லி இலைகள் "நுரையீரலின் காவலன்"
சென்னை: ஓமவல்லி எனப்படும் மருத்துவ மூலிகை சுவாச கோளாறுகளுக்கு முதன்மையாக பயன்படுத்தப்படுகிறது. அதேசமயம், ஓமவல்லி இலைகள் வேறு என்னென்ன பிரச்சனைகளை தீர்க்க பயன்படுத்தலாம்? ஓமவல்லி இலையில் மூலிகை குழம்பு வைப்பது எப்படி? இவைகளை சுருக்கமாக பார்க்கலாம்.
அஜ்வைன் இலை என்பார்கள்.. இதுதான் கற்பூரவல்லி அல்லது ஓமவல்லி எனப்படும்.. இந்த மூலிகை இலைகளை அந்த காலத்தில், நம்முடைய முன்னோர்கள் வீடுகளில் கட்டாயம் வளர்த்து வந்தார்கள். நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கக்கூடிய ஓமவல்லி இலைகள், சளி, இருமல், கபம், வறட்டு இருமல், தொண்டை கமறல், மூக்கடைப்பு என சகல சுவாச கோளாறுகளையும் சரி செய்கிறது.

இந்த இலைகளிலிருந்து சாறு எடுத்து, அதில் சிறிது சர்க்கரையை கலந்து நெற்றியில் பற்று போட்டால், நீர்ப்பிடிப்பு, தலைபாரம், தலைவலி நீங்கும்.. அல்லது ஓமவல்லி இலையை அரைத்து, அதை நீரில் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி கொண்டு, ஏலக்காய், கிராம்பு, தேன் கலந்து 3 நாள் தினமும் 2 வேளை குடித்து வரும்போது தலைவலி, தலைபாரம் நீங்கும்.
குழந்தைகளுக்கு மருந்து
வெறுமனே இந்த இலைகளில் ஆவி பிடிக்கலாம். ஒரே ஒரு ஓமவல்லியில் சாறு எடுத்து, தேன் கலந்து குழந்தைகளுக்கு தந்தால், மார்பு சளி, இருமல் நீங்கும். பெரியவர்கள் 3 இலைகளை நீரில் கொதிக்கவிட்டு, பனங்கற்கண்டு சேர்த்து குடிக்கலாம்.
இவையெல்லாம் ஒருபுறமிருந்தாலும், முழங்கால் வலி, மூட்டுவலி , மலச்சிக்கல், வாயு பிரச்சனை, கீல்வாதம் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கும் ஓமவல்லி இலைகள் மருந்தாகின்றன.. வைட்டமின் C, A ஊட்டச்சத்துக்கள் இந்த இலையில் நிரம்பியிருப்பதால், பார்வை திறன் அதிகமாகிறது.. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது. தலைமுடி வளர்ச்சியிலும் இந்த இலைகள் பயன் தருகின்றன..
சருமம், தலைமுடி ஆரோக்கியம்
ஓமவல்லி சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.. ஓமவல்லி இலையில், கடலை மாவு, அரிசி மாவு, ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பேஸ்ட் போல தடவி 20 நிமிடம் ஊறவைத்து கழுவிவந்தால் முகமும் பொலிவு பெறும்.
கண் அழற்சி நெருங்காது.. நரம்புகள் பலம் பெறும்.. வியர்வையை உண்டாக்கும் தன்மையும் இந்த இலைகளுக்கு உண்டு. இத்தனை சத்துக்கள் உள்ளதால், இதனை ஒருவகையில் உணவாகவும் சாப்பிடலாம். அந்தவகையில், ஓமவல்லி இலைகளை நறுக்கி போட்டு பஜ்ஜி செய்வார்கள்.. அல்லது மழைக்காலங்களில், குழம்பு வைத்து சாப்பிடலாம்.
ஓமவல்லி மருந்து மூலிகை குழம்பு
இதற்கு ஓமவல்லி இலைகளை பொடி பொடியாக நறுக்கி வைத்து கொள்ள வேண்டும். ஒரு வாணலில் மிளகு, சீரகம், ஓமம், சுக்கு, வெந்தயம், மல்லி விதைகளை தனித்தனியாக வறுத்து எடுத்து, மிக்சியில் தூள செய்து கொள்ள வேண்டும்.. அதே வாணலியில் சிறிது எண்ணெய், கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து வதக்கி ஆறவைத்து, மிக்ஸியில் அரைத்து கொள்ள வேண்டும்.
இப்போது மீண்டும் அதே வாணலியில் எண்ணெய், கடுகு தாளித்து, நறுக்கி வைத்துள்ள ஓமவள்ளி இலைகளை வதக்க வேண்டும்.. பிறகு சிறிது புளிக்கரைசல், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். குழம்பு நன்றாக கொதித்ததும், அரைத்த விழுது, அரைத்த பொடி, இரண்டையும் கொட்டி கிளறி இறக்க வேண்டும். இதுதான் ஓமவல்லி மருந்து குழம்பு. சளி, கபம், ஜூரம், நீர்க்கோவை, தலைபாரம், தலைவலி, தும்மல் என அனைத்துக்குமே இது பெஸ்ட் மருந்தாகும்.












Click it and Unblock the Notifications