தம்மாதுண்டு அவல்.. அதுவும் அந்த சிகப்பு கலர்..அவல் தரும் அளவிலா அற்புதம்.. உடல் எடை குறையும் பாருங்க
சென்னை: பண்டிகை காலங்களுக்காக மட்டுமே ஒதுக்க வைத்துவிட்ட பொருள்தான் அவல்.. ஆனால், தினந்தோறும் சாப்பிடக்கூடிய அத்தனை சத்துக்களும் இந்த அவலில் உள்ளன என்பதுதான் ஆச்சரியமான விஷயம்.
நெல்லை பதப்படுத்தி இடித்து பெறப்படக் கூடியதுதான் இந்த அவல்.. அதாவது, நெல்லை ஊறவைத்து இடித்து, அதிலிருந்து உமியை நீக்கி, அவலாக பயன்படுத்தப்படுகிறது..

அவல் அரிசி: இப்படி கைக்குத்தல் முறையில் தயாரிக்கப்படுவதால்தான், ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் இந்த அவலில் நிறைந்துள்ளன. நிறைய நார்ச்சத்துக்களும், வைட்டமின் B, கால்சியம், ஜிங்க், இரும்புச்சத்து, மாங்கனீசு, மெக்னீசியம் போன்ற சத்துக்கள் இந்த அவலில் நிறைந்துள்ளன... பட்டை தீட்டப்படாத அரிசியில் இருந்து தயாரிக்கபடுவதால், முழு சத்துக்களும் இந்த அவலில் நிறைந்துள்ளன..
இதில் சிவப்பு அவல், வெள்ளை அவல் என்று 2 வகைகள் உண்டு. சிவப்பு அரிசியில் இருந்து சிவப்பு அவல் மற்றும் வெள்ளை அரிசியில் இருந்து வெள்ளை அவல் தயாரிக்கப்படுகிறது. இந்த இரண்டிலுமே சத்துக்கள் உள்ளது என்றாலும், சிகப்பு அவலில் சற்று கூடுதலாகவே சத்துக்கள் நிறைந்துள்ளன.. ஆந்தோசயனின் என்ற நிறமி தான் இந்த அரிசிக்கு இந்த நிறத்தை தருகிறது..
காலை டிபன்: இந்த அவலை காலை டிபனில் சேர்த்து கொள்ள சொல்கிறார்கள்.. குறிப்பாக, கோதுமை அவல் சாப்பிட சொல்கிறார்கள்.. பல்வேறு சத்துக்கள் இந்த அவலில் உள்ளதால், காலை உணவில் சாப்பிடும்போது, நாள் முழுவதும் தேவைப்படும் சத்துக்கள் இதன்மூலம் கிடைத்துவிடுகின்றன.
அதாவது ஒரு கப் அவலில், 250 கலோரிகள் இருக்கிறதாம்.. இதுவே வறுத்த அவலில் 333 கலோரிகள் இருக்கிறதாம்.. காலையில் சாப்பிட்டால், நீண்ட நேரத்துக்கு பசியும் எடுக்காது.. தொடர்ந்து அவல் சாப்பிடும்போது, நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.. நார்ச்சத்து அதிகம் என்பதால், மலச்சிக்கலை தீர்த்து, குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.. ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவையும் குறைக்கிறது.. எனவே உடல் எடை குறைப்போருக்கு பெஸ்ட் சாய்ஸாக இந்த அவல் திகழ்கிறது..
வயிற்றுப்புண்கள்: அனிமியா பிரச்சனை உள்ளவர்கள், இந்த சிவப்பு அவலை அடிக்கடி சாப்பிடலாம்.. இதனால், வயிற்றுப்புண், வாய்ப்புண் இரண்டுமே நீங்குகிறது.. அதைவிட முக்கியமாக நீரிழிவு நோயாளிகளுக்கும் இந்த அவல் நல்லது.. இதனால் திடீர் சர்க்கரை அதிகரிப்பு நிலை உருவாகாமல் தடுக்கப்படுகிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கு அடிக்கடி பசிக்கும் என்பதால், இந்த அவலை அப்படியே வாயில் போட்டு மென்று சாப்பிடலாம். இதிலுள்ள நார்ச்சத்து ரத்தத்தில் உடனடியாக குளுக்கோஸ் கலக்காமல் இருக்க உதவி புரிகிறது. பட்டை தீட்டப்படாத அரிசியிலிருந்து தயாரிக்கப்படுவதால், இதை அளவுடன் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம்.
சிகப்பு அவல்: சிவப்பு அவல் புற்றுநோய் உண்டாக்கும் அமிலங்களை குடலுக்குள் செல்லவிடாமல் தடுத்து நிறுத்துகிறது.. கர்ப்பிணிகள் பெரும்பாலும் ரத்தசோகையால் பாதிக்கப்படுவார்கள்.. இதுபோன்றவர்கள் சிவப்பு அவலை தவறாமல் சாப்பிட வேண்டும்..
இப்போதெல்லாம் பாரம்பரிய அரிசிகள் வந்துவிட்டதால், இவைகளிலிருந்தே அவல் தயாரிக்கிறார்கள்.. மாப்பிள்ளை சம்பா, குதிரைவாலி, தினை, சாமை, வரகு, கம்பு, என சிறுதானியங்களிலும் அவல் பெறப்படுகிறது.. மிஷின்களிலேயே இவை தயாராகி, சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு வந்துவிடுகின்றன.

எப்படியெல்லாம் சாப்பிடலாம்: வழக்கமாக, பாலில் அவல் மற்றும் வெல்லம் சர்க்கரை கலந்து குழந்தைகளுக்கு சாப்பிட தருவார்கள்.. ஆனால், இதில் உப்புமா போல செய்யலாம்.. வேக வைத்து தாளித்தும் சாப்பிடலாம்.. வெல்லம் சேர்த்து அவல் உருண்டை செய்து சாப்பிடலாம்.. அவல் லட்டு செய்யலாம்.. அவல் கேசரி, அவல் பாயசம் செய்து சாப்பிடலாம்.. அல்லது சாலட் போலவும் செய்து சாப்பிடலாம்..
சிவப்பு அவலை வறுத்த வேர்க்கடலையுடன் சேர்த்து சாப்பிட்டு, இறுதியில் ஜீரணத்துக்காக, ஒரு துண்டு வெல்லம் சாப்பிட்டுவிடுவார்கள். சிவப்பு அவலை பாலில் லேசாக ஊறவைத்து, தேங்காய்த்துருவல், ஏலத்தூள், நாட்டுச்சர்க்கரை குழந்தைகளுக்கு சத்தான காலை உணவாக தரலாம். அல்லது அவலை சிறிது ஊறவைத்து, நாட்டுச் சர்க்கரை அல்லது கருப்பட்டி சேர்த்து உருண்டை போல செய்து, மாலை நேரங்களில் ஸ்நேக்ஸ் போல குழந்தைகளுக்குத் தரலாம்.
(இது பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. உங்கள் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகுவதே சிறந்தது. இந்த தகவலுக்கு "One India Tamil News" பொறுப்பேற்காது)












Click it and Unblock the Notifications