"10 ஆண்டு முதுமை! வெறும் சில வாரங்களில்.." மூளையில் ஏற்படும் அந்த மாற்றம்! விடாமல் துரத்தும் கொரோனா
லண்டன்: கொரோனா பாதிப்பு முடிந்துவிட்டது என்று மக்கள் நிம்மதியடைந்த நிலையில், நீண்ட கால நோக்கில் பார்க்கும் போது இது மூளையை நேரடியாக தாக்குவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2019 இறுதியில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் நமது வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கிப் போட்டுவிட்டது. இரண்டு ஆண்டுகள் நாம் முழுமையாக வீடுகளிலேயே முடங்க வேண்டியதாகிவிட்டது.
இப்போது தான் நாம் கொரோனா பாதிப்பில் இருந்து மெல்ல மீண்டு வருகிறோம். இதற்கிடையே கொரோனாவால் ஏற்படும் மற்றொரு மோசமான பாதிப்பு குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.

என்ன பாதிப்பு: இதை brain fog symptom அதாவது மூளை மூடுபனி என்று குறிப்பிடுகிறார்கள்.. பொதுவாக கொரோனா பாதிப்பு என்பது 10 முதல் 15 நாட்கள் வரை தான் இருக்கும் அதன், பிறகு அது தானாகச் சரியாகத் தொடங்கும். ஆனால், சிலருக்கு லாங் கோவிட் எனப்படும் நீண்ட கால கொரோனா பாதிப்பும் ஏற்படும். இவர்களுக்குப் பல வாரங்கள், பால மாதங்கள் வரை கூட கொரோனா வைரஸ் உடலில் இருக்கும். இதுபோல லாங் கோவிட் இருப்போருக்குத் தான் இந்த மூளை மூடுபனி பாதிப்பு ஏற்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
குழப்பம், மறதி மற்றும் கவனச்சிதறல், தெளிவின்மை ஆகியவை தான் இந்த மூளை மூடுபனி பாதிப்பின் அறிகுறிகளாகும். அதாவது இந்த பாதிப்பு நமது மூளையை 10 ஆண்டுகள் வரை வயதாக்கி விடுகிறது, அதாவது 10 ஆண்டுகள் முதுமைக்கு இணையான பாதிப்பை இது ஏற்படுத்துவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நினைவாற்றல் பாதிப்பு, நரம்பியல் மற்றும் மனநலப் பிரச்சனைகளையும் இது ஏற்படுத்துவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ரொம்ப மோசம்: லண்டனில் உள்ள கிங் காலேஜ் ஆய்வாளர்கள் மொத்தம் 3,000க்கும் மேற்பட்டோரிடம் இந்த விரிவான ஆய்வை நடத்தியுள்ளனர். அதில் 12 வாரங்களுக்கு மேலாக கொரோனா அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளுக்குத் தான் நினைவாற்றல் இழப்பு, கவன சிதறல் எனப் பாதிப்புகள் மோசமாக இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாகப் பேராசிரியர் கிளாரி ஸ்டீவ்ஸ் மேலும் கூறுகையில், "பாதிப்பு ஏற்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இன்னுமே கூட பலர் கொரோனாவில் இருந்து முழுமையாகக் குணமடையவில்லை. கொரோனா வைரசால் ஏற்படும் பாதிப்புகள் அந்த 15 நாட்களுக்கு முடிந்துவிடுவதில்லை. பலருக்கும் நீண்டகால பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதே உண்மை.. எதனால் இப்படி ஏற்படுகிறது என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.

லாங் கோவிட்: பிரிட்ட் நாட்டில் மட்டும் சுமார் 20 லட்சம் பேருக்கு லாங் கோவிட் பாதிப்பு இருக்கிறதாம். கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அதன் பிறகும் 4 வாரங்களுக்கு மேலாக அதன் அறிகுறிகள் தொடர்ந்தால் அது லாக் கோவிட் என்று அழைக்கப்படும். இந்த லாங் கோவிட் பாதிப்பு இருக்கும் பலருக்கும் தீவிரமான மூளை சார்ந்த பாதிப்புகளை ஏற்படுத்துவதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளது.
கொரோனா பாதிப்பு ஒருவழியாக முடிந்துவிட்டது. இனி நாம் நிம்மதியாக இருக்கலாம் என்று நினைத்த மக்களுக்கு இது மிகப் பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது. லாங் கோவிட் பாதிப்பை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் முன்கூட்டியே சொன்னாலும் கூட அதன் பாதிப்புகளை இப்போது தான் ஒவ்வொன்றாக ஆய்வாளர்கள் கண்டறிந்து வருகின்றனர். இது நேரடியாக நமது மூளை மற்றும் நரம்புகளைப் பாதிப்பதால் மருத்துவர்கள் இதைக் கவனமாக ஆய்வு செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications