சென்னையில் பரவும் சுவாசப்பாதை தொற்று! மக்களே கவனமாக இருங்க.. இதோ வழிமுறைகள்!
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே சளி, இருமலுடன் கூடிய சுவாச பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துவதால் மக்கள் அசால்டாக இருக்க வேண்டாம் என மருத்துவர்கள் அட்வைஸ் செய்கிறார்கள். இதுபற்றிய விவரங்களை பார்க்கலாம்.
சென்னையில் கடந்த சில வாரங்களாகவே தட்ப வெப்ப நிலை அடிக்கடி மாறிக்கொண்டே இருகிறது. கடுமையான வெப்பம் நிலவி வந்த நிலையில், திடீரென மழை பெய்து குளிரவைத்தது. இப்படி அடிக்கடி மாறும் சீதோஷ்ண நிலையால் மக்கள் சளி, இருமல் பாதிப்புக்கு உள்ளாவதை காண முடிகிறது. சாதாரண சளிதானே, ஓரிரு நாளில் சரியாகிவிடும் என நினைத்தால், சிலருக்கு வாரக்கணக்கில் பாடாய் படுத்தி வருகிறது.

இருமல், சளி, தொண்டை வலி, சில நேரங்களில் அதிகமான காய்ச்சலும் ஏற்படுகிறது. இன்புளுயன்சா வைரஸ் தொற்றுக்களால் குழந்தைகள், முதியவர்கள் இணை நோய் உள்ளவர்கள் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால், மருத்துவமனைக்கு காய்ச்சல், சளி பாதிப்புடன் அதிகம் பேர் சிகிச்சைக்காக செல்வதை காண முடிகிறது.
இது தொடர்பாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுவதாவது:- இன்புளுயன்சா வைரஸ்கள் வழக்கமாக குளிர் காலத்தில் அதிகம் பரவும் தன்மை கொண்டது. ஆனால், தற்போது கடுமையான வெப்பம் நிலவும் செப்டம்பரிலும் இந்த பாதிப்பு அதிகரிப்பதை காணமுடிகிறது. தொடர் இருமல், தொண்டை வலியுடன் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு பரிசோதனை செய்து பார்க்கும் போது பலருக்கும் சுவாசப்பாதை தொற்று இருக்கிறது.
சிலருக்கு ஒருவாரத்தில் குணமாகிவிடும். ஒரு சிலருக்கு மட்டும் இரண்டு வாரம் முதல் ஆறு வாரம் வரை கடுமையான இருமல் பிரச்சினை உள்ளது. குழந்தைகள் என்றால் 103 டிகிரிக்கு மேல் காய்ச்சல் உள்ளது. நுரையீரல் சார்ந்த தொற்றுக்களை அலட்சியப்படுத்தக்கூடாது. சளி, இருமல் மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால் சுயமாக மெடிக்கல்களில் மருந்துகளை வாங்கி சாப்பிடக் கூடாது.
உடனடியாக அருகில் உள்ள மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று அவர் பரிந்துரைக்கும் மருந்து மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். இந்த தொற்றுக்கள் பரவக் கூடியது என்பதால் முகக் கவசம் அணிய வேண்டும். நன்கு காய்ச்சிய குடிநீரை பருக வேண்டும். கொரானா பெருந்தொற்று காலத்தில் பின்பற்றிய நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்" என்றனர்.
கடந்த சில நாட்களாகவே இத்தகைய சுவாச தொற்று பாதிப்புடன் மருத்துவனைக்கு செல்லும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மக்கள் பீதி அடைய வேண்டாம் எனவும் முறையாக சிகிச்சை பெற்றால் எளிதில் சரியாகிவிடும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். சென்னை மட்டுமல்ல, பெங்களூர் உட்பட பல நகரங்களிலும் இதுபோன்ற புதுவகை சளி, இருமல், தொண்டை வலி, காய்ச்சல் பிரச்சினை பரவி வருகிறதாம். எனவே உங்களுக்கு தெரிந்த நபர்களுக்கு இத்தகைய பாதிப்பு இருந்தால் உடனடியாக தேவையான சிகிச்சைகளை பெற அறிவுறுத்துங்களேன்..












Click it and Unblock the Notifications