தூங்கும் போது யாரோ காலை பிடிச்சு இழுக்கறாங்களா.. பயம் வேண்டாம்..வீட்டிலேயே சிகிச்சை இருக்கு!
உறங்கிக் கொண்டிருக்கும் போதோ..அமர்ந்து கொண்டிருக்கும் போதோ கால்களைப் பிடித்து யாரோ இழுப்பது போல இருக்கும். இந்த நரம்பு பிரச்சினை தீர சில எளிமையான வீட்டு வைத்தியம் உள்ளது.
சென்னை: சின்ன சின்ன உடல் நலக்கோளாறுகள் என்றாலே இன்றைக்கு மருத்துவமனைக்கு ஓடுகின்றனர்.வாதம், பித்தம், கபம் போன்ற பிரச்சினைகள் எது என்றாலும் நம் வீட்டில் உள்ள பாட்டிகள் கை வைத்தியம் பார்த்து குணப்படுத்தி விடுவார்கள். குதிகால் வலி, பாத வலி, நரம்புகள் சுண்டி இழுக்கும் சியாட்டிகா பிரச்சினை போன்றவை தீர சில கை வைத்தியங்களை முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். இது முதலுதவி சிகிச்சைதான். அதிக வலி..தாங்க முடியாத வலிகள் உள்ளவர்கள் மருத்துவமனைகளுக்கு சென்று சரியான சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.
இரவு நேரங்களில் சிலருக்கு யாரோ கால்களை பிடித்து இழுப்பது போல இருக்கும். சட்டென்று உறக்கம் கெடும். நரம்பு சுண்டி இழுத்துக்கொண்டு வலி உயிர் போகும். சில நிமிடங்களில் அந்த வலி சரியாகி விடும் ஆனாலும் கலைந்த உறக்கம் மீண்டும் வர ஒரு மணி நேரமாவது ஆகிவிடும்.
அதுபோல சாப்பிடும் போது சம்மணம் போட்டு அமர்ந்து இருக்கும் போது நரம்பு சுண்டி இழுத்து வலியை ஏற்படுத்தும். சிலருக்கு கால் வலி மட்டுமல்லாது இடுப்பு முதல் கணுக்கால் வரைக்குமே கடுமையான வலியை ஏற்படும். இது சியாட்டிகா நரம்பு பிரச்சினை. சிலருக்கு ஒரு காலில் மட்டுமே பிரச்சினை இருக்கும். சிலருக்கோ இரண்டு கால்களிலும் பிரச்சினை ஏற்படுத்தும். கால் மரத்து போனது போல சிலருக்கு இருக்கும்.

சியாட்டிகா நரம்பு வலி
சியாட்டிகா வலியால் சிரமப்படுபவர்கள் சுலபமான சிகிச்சைகள் மூலமும் மருந்துகள் மூலமும் உடற்பயிற்சிகள் மூலமும் சரி செய்து விடலாம். நம் வீட்டில் அமர்ந்து கொண்டே வேலை செய்பவர்கள் சுடுநீர் ஒத்தடம் தரலாம். வெதுவெதுப்பான சுடுநீர் வைத்து அதில் கல் உப்பு போட்டு கால்களை ஊறவைத்து கழுவினால் கால் வலி கட்டுப்படும்.

சூடான ஒத்தடம்
முதலில் ஐஸ் வாட்டர் ஒத்தடம் கொடுத்து விட்டு சில மணி நேரங்கள் கழித்து சூடான நீரில் டவல் எடுத்து நன்கு நனைத்து அதை பிழிந்து விட்டு துண்டில் உள்ள சூட்டுடன் ஒத்தடம் தர வலிகள் குறையும். இதன் மூலம் கால்களில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். கால் வழியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். ஹாட் பேக் வாங்கி வைத்துக்கொண்டு ஒத்தடம் கொடுக்கலாம். மிதமான சுடுநீரில் எப்சம் சால்ட் போட்டு அதை கால்களில் ஊற்றி கழுவலாம். தினசரியும் எப்சம் சால்ட் போட்டு கால்களை கழுவ சியாட்டிகா பிரச்சினை படிப்படியாக கட்டுப்படும்.

எண்ணெய் மசாஜ்
சியாட்டிகா நரம்பு பிரச்சினை உள்ளவர்களுக்கு இஞ்சி எண்ணெய் மசாஜ் செய்யலாம். இஞ்சி எண்ணெய் என்று நாட்டு மருத்துவ கடைகளில் கிடைக்கும். சில துளிகள் எடுத்து வலி உள்ள இடத்தில் விட்டு மசாஜ் செய்தால் வலி படிப்படியாக குறையும்.

பால், பூண்டு, மஞ்சள்
வெள்ளைப் பூண்டு தோலினை உரித்து அதை பாலில் போட்டு வேக வைத்து சாப்பிடலாம். பூண்டு கொழுப்பை குறைக்கும். ஆன்டி இன்ப்ளமேட்டரி. நரம்புகளில் இருக்கக் கூடிய ரத்தக்கட்டிகளை கரைக்கும் தன்மை பூண்டுக்கு உள்ளது. ரத்த ஓட்டம் சீராக இயங்க உதவியாக இருக்கும். ஒரு டம்ளர் பாலில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் வெள்ளைப்பூண்டு 5 பற்கள் உரித்துப்போட்டு நன்றாக கொதிக்க விட வேண்டும். வெது வெதுப்பாக ஆறிய பின்னர் பூண்டுடன் சேர்த்து பாலை சாப்பிடலாம். ஒரு வாரத்திற்கு இந்த பாலை சாப்பிட சியாட்டிகா பிரச்சினை படிப்பாக கட்டுப்படும். அதோடு நன்றாக காய்ச்சிய பாலில் லேசாக மஞ்சள் தூள் சேர்த்து பனங்கற்கண்டு அல்லது சர்க்கரை சேர்த்து குடிக்கலாம். பூண்டு பால் ஒருநாள், மஞ்சள் பால் ஒருநாள் என மாற்றி மாற்றி குடிக்கலாம். சியாட்டிகா பிரச்சினை குறையும்.

சூரிய ஒளி
வைட்டமின் பி 12, வைட்டமின் டி உடலுக்கு அவசியம். வைட்டமின் டி இயற்கையிலேயே உள்ளது. சூரிய ஒளி உடம்பில் பட வேண்டும். காலை நேரத்தில் சூரிய ஒளி படும் வகையில் நடைபயிற்சி செய்வதன் மூலம் சூரிய ஒளி நேரடியாக உடம்பில் படும். கால்களில், பாதங்களில் சூரிய ஒளி படும் வகையில் நிற்க வேண்டும்.

வைட்டமின் டி சத்துள்ள உணவுகள்
சத்தான உணவுகள் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். ஈரல், மீன், முட்டை போன்ற உணவுகளை சாப்பிடலாம். பால், தயிர், சீஸ், சோயாபால் போன்ற உணவுகளை சாப்பிடலாம். கீரை, பனீர், மீன் உணவுகள் அதிகம் எடுத்துக்கொள்வதன் மூலம் வைட்டமின் டி சத்து அதிகரிக்கும். சோயாபீன் போன்ற உணவுகளை குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். பெரியவர்களும் சாப்பிட நரம்பு பிரச்சினை நீங்கும்.












Click it and Unblock the Notifications