சைலண்ட் கில்லரை சாய்த்த "சக்ஸஸ்" ஆபரேஷன்.. 2024ல் சர்க்கரை நோயாளிகளுக்கு நம்பிக்கையை தந்த மருத்துவம்
சென்னை: நாளுக்கு நாள் வளர்ச்சி பெற்று வரும் மருத்துவ துறையில் எண்ணற்ற சாதனைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. எனினும், உலகையே உலுக்கி எடுத்து வரும் பிரச்சனையாக நீரிழிவு நோய் உருவெடுத்து வருகிறது. இந்த வருடம் வெளியான பல்வேறு ஆய்வு முடிவுகள், நீரிழிவு நோயை பற்றினதாகவே வெளிவந்திருந்தன. அந்தவகையில், ஒருசிலவற்றை பார்ப்போம்.
சமீபகாலமாகவே, சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுபோன்ற தொற்றா நோய்களால் இந்தியாவில் ஒவ்வொரு நொடியிலும் 10 பேர் இறப்பதாகவும், பல்வேறு நோய்களால் உயிரிழக்கும் ஒரு கோடி பேரில் 52 லட்சம் பேர் தொற்றா நோய்களால் இறப்பதாகவும் புள்ளிவிவரங்கள் நமக்கு தெரிவிக்கின்றன.

அந்தவகையில் "டிஸ்லிபிடெமியா (Dyslipidemia)" என்ற பாதிப்பானது, மிகவும் ஆபத்தானது என்கிறார்கள் டாக்டர்கள்.. அதாவது நம்முடைய உடலில் உள்ள கொழுப்பு, கொலஸ்டிரால், டிரைகிளிசரைடுகள், பாஸ்போலிப்பிட்ஸ் போன்றவற்றின் அளவு திடீரென அதிகரிப்பது அல்லது திடீரென குறைந்துவிடுவதற்கு, டிஸ்லிபிடெமியா என்பார்கள். இந்த கோளாறு, இதய பாதிப்புகளில் கொண்டுபோய் முடிந்துவிடும்.
சைலன்ட் கில்லர்: இந்த "டிஸ்லிபிடெமியா" ஒரு சைலன்ட் கில்லர்.. சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போல எந்தவிதமான அறிகுறியையும் இது வெளியே காட்டாது. மாறாக திடீரென உடல் உறுப்புகளில் பாதிப்பை தந்துவிடும். இதை முன்கூட்டியே கண்டுபிடிப்பதும் மிகவும் கடினம்.
இப்படிப்பட்ட சூழலில்தான் கடந்த மே மாதம், டிஸ்லிபிடெமியா பிரச்சினையை கண்டறிந்து, அதை சரி செய்வதற்கான புதிய வழிகாட்டியை, மருத்துவர்கள் வெளியிட்டிருந்தார்கள். இருதயவியல் கழகத்தின் தலைவரான டாக்டர் பிரதாப் சந்திரா ராத் செய்தியாளர்களிடம் இதன் அம்சங்கள் குறித்தும், வழிமுறைகள் குறித்தும் நீண்ட விளக்கத்தையும் தந்திருந்தார்.
அதில், "டிரைகிளிசரைட்ஸ் அதிகம் உள்ள நோயாளிகளுக்கு எச்டிஎல் அல்லாத கொலஸ்டிராஸ் அளவு? உணவுக்குப் பிந்தைய பரிசோதனை மூலம், டிஸ்லிபிடெமியா எவ்வளவு உள்ளது? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். 18 வயதானதும், லிபிட் புரபைல் டெஸ்ட் செய்து பார்க்க வேண்டும்..
டிஸ்லிபிடெமியா : ஒருவருக்கு டிஸ்லிபிடெமியா தாக்கத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறாரா என்பதை ரத்தத்திலுள்ள Low Density Lipo Protein - Cholestrol LDLC எனப்படும் குறைஅடர் கொழுப்பு புரதத்தின் அளவை வைத்து கண்டறியலாம். அதேபோல, High Density Lipo Protein - Cholestrol HDLC எனப்படும் உயர்அடர் கொழுப்பு புரதத்தின் அளவை வைத்தும் கண்டுபிடிக்கலாம். அதேபோல, triglycerides (>150 mg/dL) போன்றவற்றின் அளவை வைத்தும் கண்டுபிடிக்கலாம்.
எனவே, ஒருவருக்கு ரத்தத்தில் குறைஅடர் கொழுப்பின் அளவு 100 mg/DL என்ற அளவிலும், உயர்அடர் கொழுப்பு புரதத்தின் அளவு 130 mg/DL குறைவாகவும் இருக்க வேண்டும். ஆனால், ரத்தத்தில் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ LDLC, HDLC இரண்டுமே படிந்துவிடக்கூடாது. இந்த அளவு மாறுபாடும்போது, டிஸ்லிபிடெமியா பாதிப்பு ஏற்படலாம்" என்றெல்லாம் தெளிவுபடுத்தியிருந்தார். டிஸ்லிபிடெமியா குறித்த இந்த ஆய்வு முடிவானது, பொதுமக்களுக்கு மிகுந்த நன்மையை தருமென்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ஆய்வு முடிவுகள்: எனினும், நீரிழிவு நோய் கட்டுக்கடங்காமல் உள்ளது, மக்களை கவலைக்கும், அதிர்ச்சிக்கும் ஆளாக்கி வருகிறது. வரும் 2030 ஆண்டுக்குள் 643 மில்லியனாக நீரிழிவு நோய் உலகளவில் அதிகரிக்கும் என்று சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு International Diabetes Federation (IDF) தெரிவிக்கிறது. இந்தியாவில் சுமார் 10 கோடி பேருக்கு நீரிழிவு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த எண்ணிக்கை அடுத்த 20 வருடங்களில் இரு மடங்காகுமாம்.
அதுமட்டுமல்ல, உலக அளவில் உறுதி செய்யப்படும் 7 சர்க்கரை வியாதிகளில் ஒருவர் இந்தியராக இருக்கிறார்களாம்.. அதிலும், 19 வயதுக்குட்பட்டவர்களில் 5 பேரில் ஒருவருக்கு டைப்-1 வகை சர்க்கரை வியாதி இருப்பதாகவும், டைப்-1ஐ பொறுத்தவரை உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அமைப்புகள், கணையத்தில் உள்ள இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களை சேதப்படுத்துவதால், இவர்களுக்கு தினமும் இன்சுலின் ஊசி போட வேண்டிய சூழல் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
சர்க்கரை நோய்: நீரிழிவு நோயின் பரவல் எல்லா நாடுகளிலும் அதிகரித்துள்ள நிலையில், இந்தியா உலகளவில் இப்போது முதலிடத்தை பிடித்துள்ளதாக ஆய்வு முடிவுகள் கூறியிருப்பது, அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கிறது.
இப்படிப்பட்ட சூழலில், ஆபரேஷன் மூலம் சர்க்கரை நோயை குணப்படுத்தி சீனாவில் அரிய சாதனை ஒன்று, கடந்த அக்டோபர் மாதம் நடத்தப்பட்டது.. 25 வயது பெண் நோயாளி ஒருவருக்கு ஆபரேஷன் செய்ததன் மூலம், அவருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து நீரிழிவுக்கான ஊசியே தேவைப்படாத நிலை ஏற்பட்டுள்ளது.
கணையம்: அதாவது, நோயாளியின் உடலில் கணையப்பகுதியிலுள்ள திசுக்களில் சிறிதளவை வெளியே எடுத்து, அதனுடன் ரசாயன மூலக்கூறை சேர்த்து சில திருத்தங்கள் செய்து, பிறகு மறுபடியும் உடலில் வைப்பது மூலம் இந்த அதிசயத்தை சீன மருத்துவ விஞ்ஞானிகள் சாதித்து காட்டியிருக்கிறார்கள்.
அரை மணி நேர சிகிச்சை மூலம் நீரிழிவு நோயை முற்றிலும் குணப்படுத்தியுள்ளது இதுவே முதன்முறை என ஷாங்காயை சேர்ந்த சவுத் சைனா மார்னிங் போஸ்ட் பத்திரிகையும் பெருமைபட கூறியிருக்கிறது. இந்த ஆபரேஷன் டைப் 1 என்ற நீரிழிவு வகைக்கானதாகும்.. நிரந்தர தொல்லையாகவே கருதப்படும் நீரிழிவு நோயை, இப்படி ஆபரேஷன் மூலம் குணப்படுத்த முடியும் என்று சீனா நிரூபித்து காட்டியிருப்பது உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான நீரிழிவு நோயாளிகளுக்கு நம்பிக்கையை தந்து கொண்டிருக்கிறது.
சாதனை: மருத்துவ துறையில் இப்படி புது புது ஆய்வுகளும், மருந்துகளும், சிகிச்சை முறைகளும் வெளிவந்து கொண்டிருப்பது, மக்களுக்கு ஆறுதலை தந்தாலும், வருமுன் காப்போம் என்பதே அனைத்து நோய்களுக்கான "முதன்மை தீர்வாக" உள்ளது..!!












Click it and Unblock the Notifications