அக்கு அக்கா வருதா உங்கள் தலைமுடி.. அடர்த்தியான தலைமுடிக்கு இதை மட்டும் செய்யுங்க.. சூப்பர் டிப்ஸ்கள்
சென்னை: இன்றைய சூழலில், தலைமுடி கொட்டுவது என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.. இதற்கென்று எளிய தீர்வுகள் நம்மிடமே உள்ளன. இதனால், ஓரளவு தலைமுடி கொட்டுவதை சரி செய்ய முடியும்.
முதலில், முடி கொட்டுவதற்கு என்ன காரணம் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.. முடி கொட்ட பல காரணங்கள் இருக்கலாம். ஹார்மோன் குறைபாடுகள் முக்கிய காரணமாக திகழ வாய்ப்புள்ளது..

அடர்த்தியான முடி: ஹார்மோன்கள் சரியாக இருந்தால், முடிகள் அடர்த்தியாகவும், ஆரோக்கியமாகவும் வளரும். இரும்புச்சத்து, கால்சியம் போன்ற சத்துக்கள் இருந்தாலும் முடி கொட்டலாம். அதனால், ஹீமோகுளோபின் அளவை சரியாக வைத்து கொள்ள வேண்டும்.
அதேபோல, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடுகள் காரணமாகவும், முடி கொட்டலாம்.. இதற்கும், சத்தான உணவு சாப்பிடுவது அவசியம்.. அதேபோல, மன அழுத்தம் காரணமாகவும் முடி கொட்டலாம்.. அதேபோல, இளம்பெண்களுக்கு பிசிஓடி எனப்படும், நீர்க்கட்டிகள் பிரச்சனைகள் இருந்தாலும், முடி கொட்டலாம். இதனால், தலைமுடியின் வேர்க்கால்களும் பலவீனமாகிவிடும். அளவுக்கு அதிகமாக உடலில் உஷ்ணம் ஏற்பட்டுவிட்டாலும், முடி கொட்டலாம்.
உண்ணும் உணவு: ஆக, நம்முடைய தலைமுடிக்கும், உண்ணும் உணவிற்கும் நேரடி தொடர்பு உள்ளது.. நம்முடைய தலைமுடிக்கும், மனதுக்கும் நேரடி தொடர்பு உள்ளது. எனவே, ஆரோக்கியமான உணவு + மகிழ்வான மனநிலை + போதுமான உறக்கம் போன்றவையே தலைமுடி வளர்ச்சியை தீர்மானிக்கின்றன. முடி வளர்ச்சிக்கு இரும்பு, ஜின்க், கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் தேவைப்படுகின்றன..
முடி கொட்டாமல் இருக்கவும், முடி அடர்த்தியாக வளரும் என்னென்ன சாப்பிட வேண்டும்? இதில், கீரைகள் முதலிடத்தை பிடிக்கின்றன.. அதிலும் முருங்கைக்கீரையை சூப் வைத்து அல்லது ரசம் வைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. இதனால், ஆரோக்கியமான முடிகள் கிடைப்பதுடன், நீளமாகவும், அடர்த்தியாகவும் வளரும்.
முருங்கைக்கீரை: முருங்கைக் கீரை ஒரு கைப்பிடி எடுத்து, ஒரு கப் தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ள வேண்டும்.. அதை வடிகட்டி, எலுமிச்சை பழச்சாறு, தேன் சேர்த்து கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். அல்லது இரவு உணவு சாப்பிட்ட அரை மணிநேரம் கழித்துக் குடிக்கலாம்.. அதேபோல, முருங்கையின் ஈர்க்குச்சியில் சூப் செய்து குடிக்கலாம்..
அடுத்ததாக கறிவேப்பிலை... இந்த கறிவேப்பிலையை எந்த ரூபத்திலும் எடுத்துக் கொள்ளலாம்.. எப்படி சாப்பிட்டாலும் நல்லதுதான். தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலைக்கு தடவி வரலாம்.

செம்பருத்தி: செம்பருத்தி, தேங்காய் எண்ணெய் கலந்து வீட்டிலேயே ஆயில் தயார் செய்து வைத்துக் கொண்டால் இன்னும் சிறப்பு.. செம்பருத்தி பூக்களையும், செம்பருத்தி இலைகளையும் கழுவி அதை ஈரமில்லாமல் அரைக்க வேண்டும்.. ஒரு பாத்திரத்தில், தேங்காய் எண்ணெய் ஊற்றி லேசாக சூடானதும், அதில், இந்த செம்பருத்தி விழுதை கெர்ட வேண்டும்.. அதில், சிறிது வெந்தயத்தை பொடி செய்து போட்டு, கருகாமல் கொதிக்கவிட வேண்டும். இந்த எண்ணெய்யை வடிகட்டி வைத்து கொள்ளலாம்.
வெண்டைக்காய் தலைமுடிக்கு மிகச்சிறந்த "இயற்கை கண்டிஷனராக" செயல்படுகிறது.. வெண்டைக்காயை கொதிக்க வைத்த தண்ணீரில் சேர்த்து, சிறிது எலுமிச்சம் சாறு பிழிந்து, அந்த தண்ணீரில் தலைமுடியை அலசினால், தலைமுடி பளபளப்பு கிடைக்கும்.. முடிகள் உறுதியாகும்.
மோர் பெஸ்ட்: தலைமுடியை சாதம் வடித்த தண்ணீரில் அலசி வரலாம்.. அல்லது மோரில் அலசி வரலாம்.. நீர் மோரில் லாக்டிக் அமிலம், கார்போஹைட்ரேட், புரதம், வைட்டமின் D, A, B12, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, பொட்டாசியம், சோடியம், மக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.. உச்சந்தலையில் இந்த மோரை தேய்த்து, மசாச் செய்து 20 நிமிடம் ஊறவைத்து குளித்தால் போதும்.. இறந்த செல்களை நீக்கி, தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
அதேபோல, ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், லாவெண்டர் எண்ணெய் இப்படி ஏதாவது பயன்படுத்தலாம். வைட்டமின் A அதிகமுள்ள உணவான, கீரை, கேரட், தக்காளி, உருளைக்கிழங்கு, பால், முட்டை, மாம்பழம், பப்பாளி, தர்பூசணி இப்படியான உணவுகளை தினமும் சாப்பிட வேண்டும். எலுமிச்சை ஜூஸ், நெல்லிக்காய் ஜூஸ் ஏதாவது ஒன்றை சாப்பிட்டு வரவேண்டும்.
தண்ணீர் முக்கியம்: தலைக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து முடி கொட்டுதலை தவிர்க்க வேண்டுமானால், வஜ்ராசனம், உஸ்ட்ராசனம், சர்வாங்காசனம், சிரசாசனம், விபரீதகரணி போன்றவைகளை செய்ய வேண்டும். செயற்கை ஜெல்களை தூக்கி தூரப்போட்டுவிட்டு, இயற்கையாய் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்துவதுடன், முக்கியமாக, தண்ணீரை நிறைய குடித்தாலே போதும்.. தலைமுடி பாதுகாக்கப்படும்!!
(இது பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. உங்கள் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகுவதே சிறந்தது. இந்த தகவலுக்கு "One India Tamil News" பொறுப்பேற்காது)












Click it and Unblock the Notifications