வெயில் காலத்தில் கர்ப்பிணிகள் எந்த ஜூஸை குடிக்க வேண்டும்? எது உடலுக்கு நல்லது! மருத்துவர் விளக்கம்
சென்னை: கர்ப்பமாக இருக்கும் பெண்கள் வெயில் காலத்தில் எந்த மாதிரியான ஜூஸ்களை குடிக்கலாம். அவை உடலுக்கு அதிக நன்மை கொடுக்கும் என்பதை மருத்துவர் ஒருவர் விளக்கியுள்ளார்.
இப்போது கோடை வெயில் நம்மைப் பாடாய் படுத்தி வருகிறது. ஏப்ரல் மாதமே பல பகுதிகளில் வெயில் உச்சம் தொட்டுவிட்டது. அடுத்த மாதம் அக்னி நட்சத்திரத்தின் போது வெப்பம் மேலும் அதிகரிக்கும் என்றே அஞ்சப்படுகிறது.

ஓவர் வெப்பம்: வெப்பம் அதிகமாக இருப்பதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.. மதிய நேரங்களில் வெளியே கூட செல்ல வேண்டாம் என்று வல்லுநர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்கள். தமிழக அரசு சார்பில் கூட சமீபத்தில் இது தொடர்பான எச்சரிக்கை வெளியாகி இருந்தது. இந்த கோடைக் காலத்தில் கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் என வல்லுநர்கள் தொடர்ந்து எச்சரிக்கிறார்கள்.
இதற்கிடையே கர்ப்ப காலத்தில் பெண்கள் எந்த மாதிரியான ஜூஸ் குடிக்கலாம், எவை உடலுக்கு நல்லது என்பது குறித்து மகப்பேறு மருத்துவர் அபிநயா பிரபல டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் விளக்கியுள்ளார்.
கர்ப்பிணிப் பெண்கள்: அதில் அவர், "கூல் டிரிங்குகள் உடலுக்கு நல்லது இல்லை. அதில் கெமிக்கல் அதிகம் இருக்கும்.. கேஸ் கூட அதிகமாக இருக்கும். எனவே அவற்றை தவிர்ப்பது தான் உடலுக்கு நல்லது. நம்ம ஊரில் கிடைக்கும் எலுமிச்சை பழத்தை எடுத்து லேசாகச் சர்க்கரை அல்லது உப்பு போட்டுக் குடியுங்கள். அது தரும் பலன் வேறு எந்தவொரு கூல் டிரிங்கிலும் இருக்காது.
பிரிட்ஜில் வைத்துக் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஆனால் அடிக்கும் வெயிலுக்குக் கொஞ்சம் ஜில் என்று குடித்தால் நன்றாக இருக்கும் என நீங்கள் கருதினால் பானையில் வைத்துக் குடிக்கலாம். பனையில் வைத்துக் குடிப்பதால் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது. அது இயற்கையானதுதான். இப்போது அழகழகாகவே பனைகள் வருகிறது" என்றார்.

ஜூஸ்கள்: இது தவிர வேறு எவை எல்லாம் நமது உடலுக்கு நன்மை தரும் என்பது குறித்துப் பார்க்கலாம். கெமிக்கல்கள் இல்லாமல் வீடுகளிலேயே செய்யப்படும் ஜூஸ்களில் வைட்டமின்கள், தாதுகள் மற்றும் இயற்கை சர்க்கரைகள் அதிகம் இருக்கிறது. இதனால் இந்த ஜூஸ்களை தாராளமாகக் குடிக்கலாம். குறிப்பாக ஆரஞ்சு, மாதுளை அல்லது தர்பூசணி போன்ற ஜூஸ்களை அதிகம் குடியுங்கள். அவை நமது உடலுக்கு எனர்ஜி மட்டுமின்றி அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் வழங்குகின்றன. அதேநேரம் ஜூஸ்களில் சர்க்கரை அளவு அதிகம் இருப்பதால் அளவாகக் குடிப்பது உடலுக்கு நல்லது.
அதேபோல இளநீரையும் குடிக்கலாம். இளநீர் என்பது ஒரு இயற்கையான எலக்ட்ரோலைட் நிறைந்த பானமாகும்.. இது உடலின் ஆரோக்கியமான திரவ சமநிலையைப் பராமரிக்க உதவுகிறது. இதில் கலோரிகள் குறைவாகவும் பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளது.. இது கர்ப்ப காலத்தில் ஏற்படும் தசைப்பிடிப்பைத் தடுக்க உதவும்.
வானிலை: இன்று முதல் ஏப்ரல் 30 வரை மூன்று தினங்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று வானிலை மையமும் எச்சரித்துள்ளது. அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் , ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என்று வானிலை மையமும் எச்சரித்துள்ளதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
இது சாதாரண செய்தி மட்டுமே.. இதை மருத்துவ ஆலோசனையாகக் கருதக்கூடாது.. உடல்நல பாதிப்பு எதாவது ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.












Click it and Unblock the Notifications