தினசரி உணவில் இந்த சின்ன விஷயத்தை மறக்காதீங்க.. கோடி நன்மை கொட்டி கிடக்கு!
சென்னை: நமது நாட்டில் பெரும்பாலானோரின் வீடுகளில் தயிர் என்பது தவிர்க்கவே முடியாத முக்கியமான உணவாக இருக்கும். தயிர் சாப்பிடும்போது உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும் உள்ளிட்ட பல நன்மைகள் இருப்பதாக மக்கள் கருதுகிறார்கள். உண்மையில் தயிர் சாப்பிடும்போது உடலில் என்ன நடக்கும்.. என்ன நன்மை கிடைக்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்தியாவைப் பொறுத்தவரை பல காலமாகவே நமது வீடுகளில் தயிர் உணவின் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. நாம் சாப்பிடும்போது இது நமக்கு குளிர்ச்சியைத் தருகிறது. புரோபயாடிக்குகள், கால்சியம் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இது செரிமானத்திற்கு உதவுவதாகவும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகவும் கூறப்படுகிறது..

தயிர்
இருப்பினும், ஒவ்வொரு நபரின் வளர்சிதை மாற்றம், குடல் ஆரோக்கியம் மற்றும் உணவு முறைகள் போன்றவற்றைப் பொறுத்து அதன் விளைவுகள் மாறுபடும். இதன் காரணமாகவே தயிரால் ஒரு சிலருக்கு நன்மைகள் ஏற்படும் அதேநேரம் மற்றொரு தரப்பினருக்கு மோசமான விளைவுகளும் ஏற்படும். சரி, உணவு சாப்பிடும்போது கடைசியில் தயிர் எடுத்துக் கொள்ளும்போது உடலில் என்ன மாற்றங்கள் நடக்கும்.
நல்லதுதான்
இது தொடர்பாக உணவு ஆலோசகர் கனிகா மல்ஹோத்ரா பிரபல ஆங்கில ஊடகத்திடம் கூறுகையில், "தயிரில் முதன்மையாக லாக்டோபாகிலஸ் மற்றும் பிஃபிடோபாக்டீரியம் ஆகிய புரோபயாடிக் தான் இருக்கும். அதில் உள்ள புரோபயாடிக் காரணமாக மதியம் நாம் தயிரைத் தொடர்ச்சியாகச் சாப்பிடும்போது வயிற்றில் இருக்கும் நுண்ணுயிரிகளின் கலவையை மாறும். இதனால் வயிற்றில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மறுபுறம் என்டோரோபாக்டீரியாசி மற்றும் ஸ்டேஃபிளோகோகஸ் போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் எண்ணிக்கை வயிற்றில் குறையும்.
தயிரில் உள்ள லாக்டிக் அமிலப் பாக்டீரியா குடல் செயல்பாட்டை வலுப்படுத்துகிறது. வயிறு வீங்கி இருப்பது போலத் தெரிவதைக் குறைக்கிறது. இது பெருங்குடலுக்கு ரொம்பவே நல்லது. இதனால் தயிரைத் தினசரி சாப்பிடும்போது புரோபயாடிக் அதிகரிக்கிறது. செரிமானம் சீரடைகிறது. மேலும் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது" என்றார். அதேநேரம் தயிரால் ஏற்படும் நன்மை என்பது ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.
குளிர்ச்சியை தருமா
தயிர் உடலைக் குளிர்ச்சியாக்கும் எனப் பலரும் நம்புகிறார்கள். இது தொடர்பாக மல்ஹோத்ரா கூறுகையில், "தயிரில் நீர் உள்ளடக்கம் அதிகம். மேலும், அதில் இருக்கும் புரோபயாடிக்குகள் புத்துணர்ச்சி உணர்வைத் தரும். உடலுக்கு நீரேற்றம் தரும். இதை நாம் குளிர்ச்சி என நினைக்கலாம். ஆனால், தயிர் எடுக்கும்போது நமது உடல் வெப்பம் நேரடியாகக் குறையும் என்பதற்கு எந்தவொரு அறிவியல்பூர்வ ஆதாரங்களும் இல்லை. குளிர்ச்சியைத் தரும் என்பதற்கு ஆதாரம் இல்லை என்றாலும் செரிமானத்தை மேம்படுத்துவது, ஊட்டச்சத்துகளை நமது உடல் எடுத்துக் கொள்ள உதவுவது ஆகிய நன்மைகள் தயிர் மூலம் கிடைக்கவே செய்கிறது.
ஒரு சிக்கல்
தயிரில் இந்தளவுக்கு நன்மைகள் இருந்தாலும் கூட அனைவருக்கும் இது செட் ஆகும் எனக் கூறிவிட முடியாது. லாக்டோஸை ஜீரணிக்க முடியாத பலர் இருக்கிறார்கள். அதுபோல இருப்போர் தினமும் தயிரைச் சாப்பிடும்போது வயிறு வீங்கி போகும். மேலும், வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை கூட ஏற்படலாம்" என்றார்.
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். தயிர் மட்டும் அதற்கு விதிவிலக்கு இல்லை. தயிரை அதிகமாக எடுத்துக் கொண்டால் ஜீரணிப்பதில் பிரச்சனை ஏற்படும். உடல் எடை அதிகரிக்கும். மேலும், இரும்பு மற்றும் ஜின்க் ஆகியவற்றை உடல் எடுத்துக் கொள்ளும் திறனும் குறையும். எனவே, தயிரை எடுத்துக் கொள்வது நல்லது என்றாலும் அதைப் பார்த்து அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
இது சாதாரணச் செய்தி மட்டுமே.. இதை நிச்சயம் மருத்துவ ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக்கூடாது. உங்களுக்கு உடல்நிலை பிரச்சனை ஏற்பட்டால்.. உடனடியாக அருகே உள்ள மருத்துவரை அணுகவும்.












Click it and Unblock the Notifications