இந்துப்பு! இமய மலை உப்பை முற்றும் முழுவதுமாக உணவில் தினமும் பயன்படுத்தலாமா?
சென்னை: இமயமலை உப்பை தினமும் உணவில் பயன்படுத்தலாமா கூடாதா என்பது குறித்து சிவசங்கை அரசு மருத்துவர் பரூக் அப்துல்லா விவரித்துள்ளார். இந்துப்பை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஹிமாலய ராக் சால்ட் , பிங்க் சால்ட் , இந்துப்பு என்றும் அழைக்கப்படும் இமய மலை உப்பை முற்றும் முழுவதுமாக உணவில் தினமும் பயன்படுத்தலாமா? கூடாது. ஏன்?

உயரமான மலைப் பகுதிகளில் மண்ணில் அயோடின் மிகக் குறைவாகவே இருக்கும். இதன் காரணமாகவே இமய மலையின் அடிவாரப் பகுதிகளை "இந்தியாவின் முன் கழுத்துக் கழலைக் கச்சை" (GOITRE BELT OF INDIA) என்று அழைக்கப்படுகிறது.
அங்கிருந்து எடுக்கப்படும் உப்பில் அயோடின் மிக மிகக் குறைவு. அயோடின் சத்து அனுதினமும் நமது உடலுக்குக் கிடைத்துக் கொண்டிருக்க வேண்டிய முக்கிய சத்தாகும் தினசரி 150 மைக்ரோ கிராம் அளவு அயோடின் நமக்குக் கட்டாயத் தேவை. கர்ப்பிணிகளுக்கும் தாய்பாலூட்டும் அன்னைகளுக்கும் இந்தத் தேவை இன்னும் அதிகம்.
இந்தியாவில் அயோடின் குறைபாட்டைச் சரிசெய்யும் பொருட்டு தினந்தோறும் ஏழை பணக்கார பேதமின்றி , பூகோள மொழி வாரி பேதமின்றி அனைவரும் உட்கொள்ளும் பொருளாக இருப்பது "உப்பு". எனவே சமையல் உப்பில் அயோடின் கலந்து விற்கப்படுகிறது.
15 பிபிஎம் என்ற அளவில் அயோடின் உப்பில் கலக்கப்பட்டால் ஒரு கிலோ உப்புக்கு 150 மில்லிகிராம் அயோடின் இருக்கும்.
பத்து கிராம் உப்பை ஒருவர் தினமும் உட்கொள்வாரானால் 150 மைக்ரோ கிராம் அயோடின் அவருக்குக் கிடைக்கும் என்ற நோக்கில் இந்தத் திட்டம் செயல்பட்டு வருகிறது. அயோடின் என்பது நமது தைராய்டு சுரப்பி - சரியான அளவில் தைராய்டு ஹார்மோனை சுரப்பதற்கு இன்றியமையாத தேவையாக இருக்கிறது.
உணவு மூலம் உட்கொள்ளப்பட்டு ரத்தத்தில் இருக்கும் அயோடினை தைராய்டு சுரப்பி தன்னகத்தே இழுத்துக் கொண்டு அயோடினை வைத்துத் தான் தைராக்சினை உருவாக்குகிறது. தொடர்ந்து ஒருவருக்கு அயோடின் உட்கொள்ளல் குறையும் போது அவருக்கு தைராய்டு சுரப்பி மூலம் தைராக்சின் சுரப்பு போதுமான அளவு இல்லாமல் நாளடைவில் தைராய்டு சுரப்பி வீக்கம் கண்டு முன் கழுத்துப் கழலை நோய் ஏற்படும்.
கர்ப்ப காலத்திலும் கர்ப்பமடைவதற்கு முன்னும் அயோடின் சத்து சரியாக கிடைக்காமல் போனால் கருப்பையில் வளரும் குழந்தைக்கு மூளை வளர்ச்சிக் குறைபாடு பிறக்கும் குழந்தைக்கு பேச்சு வராமை, காது கேளாமை மாறு கண் பிரச்சனை என்று பல சிக்கல்களுடன் பிறக்கும்.
இதை நரம்புமண்டலத்தைத் தாக்கும் க்ரிடெனிசம் என்று அழைக்கிறோம். தாய்க்கு கர்ப்ப காலத்தில் தைராய்டு சுரப்பு குறைவாக இருந்தால் பிறக்கும் குழந்தைக்கும் ஹைப்போ தைராய்டிசம் தோன்றும். இதனால் குழந்தை, வளர்ச்சிக் குறைபாடுடனும் மனநலம் குன்றியும் வளரும் வாய்ப்பு உள்ளது.
நாடெங்கிலும் 2019 இல் முக்கிய நகரங்களில் செய்யப்பட்ட ஆய்வில் சென்னையிலும் கோவையிலும் பிறக்கும் போது குழந்தைகளுக்கு ஏற்படும் தைராய்டு குறைபாடு நாட்டிலேயே அதிகமாக இருப்பது தெரிய வருகிறது. அதே சமயம் அதே ஆண்டில் நாடெங்கும்
அயோடின் கலந்த உப்பு உட்கொள்ளலில் கடைசி இடத்தில் தமிழ்நாடு இருந்தது தெரியவருகிறது.
இந்திய சராசரி 76.3% வீடுகளில் அயோடின் உப்பு உட்கொள்ளும் நடைமுறை இருக்கும் சூழ்நிலையில் தமிழ்நாட்டில் இந்த சதவிகிதம் 61.9% என்ற அளவில் இருக்கிறது. ஜம்மு காஷ்மீர், நாகலாந்து, மணிப்பூர், மின்சாரம், மேகாலயா ஆகிய மாநிலங்கள் அயோடின் உப்பு உட்கொள்ளலில் முதல் ஐந்து இடங்களில் வருகின்றன.
அயோடின் சத்து
- கடல் சார் உணவுகள்
- கடல் பாசி
- அயோடின் கலந்த உப்பு
- பால்
- கிரேக்க யோக்ஹர்ட்
- சிப்பி
- முட்டைகள்
போன்றவற்றில் நிரம்பியுள்ளன. அயோடின் சத்து மிகவும் குறைவாக உட்கொள்வது தைராய்டு குறைபாட்டை உருவாக்கி
- புத்திக் கூர்மை இழப்பு
- படிப்பில் கவனமின்மை
- படிப்பில் அக்கறையின்மை
- நினைவுத்திறன் குன்றிய நிலை
- உடல் பருமன்
- முன்கழுத்துக் கழலை
போன்றவை ஏற்படும்.
கர்ப்பிணிகளுக்கு திடீரென கர்ப்ப இழப்பு, கரு வளர்ச்சிக் குறைபாடு போன்றவை ஏற்படக்கூடும். அயோடின் குறைபாட்டால் ஏற்படும். உடல் மற்றும் மன வளர்ச்சிக் குறைபாடு என்பது வெளியே தெரியாமல் அமைதியாக இருக்கிறது. எனவே நமது இல்லங்களில் அயோடின் கலந்து உப்பு மற்றும் மேற்சொன்ன அயோடின் நிரம்பிய உணவுகளைத் தொடர்ந்து சேர்த்து வர வேண்டும்.
ஹிமாலயன் ராக் சால்ட்டில் பொட்டாசியம்,கால்சியம், மெக்னீசியம் நிரம்பியுள்ளது. எனினும் அயோடின் அதில் பெரிதாக இல்லை. எனவே
அயோடின் உப்பை உணவு செய்வதற்கு பயன்படுத்த வேண்டும். இந்துப்பை எலுமிச்சைச் சாறு / நெல்லிச் சாறு போன்றவற்றில் கலந்து தினமும் ஒரு முறை பருகி வரலாம். அயோடின் கலந்த உப்புக்கு பதிலாக முற்றிலுமாக அயோடின் இல்லாத கல் உப்பையோ அல்லது இந்துப்பையோ பயன்படுத்துவது சரியான நடைமுறையன்று. இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications