Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நேரத்தையும், உழைப்பையும் சுரண்டும் "கிச்சன்" என்னும் வீட்டுச் சிறை! பெண்களை மீட்பது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: "உன்னோட கைப்பக்குவம் மாதிரி யாருக்கும் வராது.." இந்த ஒற்றை வார்த்தையை நம்பி இந்திய பெண்களில் பெரும்பான்மை விழுக்காடு சமையல்கட்டில் முடங்கிப் போய்விட்டது.

ஆண்களுக்கு அது ஒரு பெரிய விஷயமாக தெரிவதே கிடையாது.. ஆனால் உன்னிப்பாக பார்த்தால் மிகப்பெரிய மனித உழைப்பை நாம் சுரண்டி கொண்டிருக்கிறோம்.. மிகப்பெரிய மனித உரிமை மீறலை, நமது இல்லங்களில் நாம் சத்தமேயில்லாமல், நடத்திக் கொண்டிருக்கிறோம்.

How Indian Women Can Comes Out From Kitchen And Preparing Food AS It Consumes More Time

ஒரு நேர சமையல்.. இருநாட்கள் சாப்பாடு என்பதெல்லாம் நம்ம ஊரில் கிடையாது. காலையில் டிபன், மதியம் சாப்பாடு, இரவு டிபன் என எந்த நேரமும் சமையலறையில் சிறை வைத்து பழக்கிவிட்டோம் பெண்களை.

கொஞ்சம் வானம் இருட்டி விட்டால்.. சூடாக பஜ்ஜியை கொடு, வடையை போடு என்ற "செல்ல சுரண்டல்கள்" தனிக்கதை.

சமையல் செய்வதோடு முடியப்போவது கிடையாது பணி. சாப்பிட்ட பாத்திரங்களை கழுவி வைப்பதில் ஆரம்பித்து, சிந்தியிருக்கும் பருக்கைகளை எடுத்து, சாப்பிட்ட இடத்தை துடைத்து வைப்பது என்று.. அது சார்ந்த விஷயங்கள் நீண்டுகொண்டே செல்லும்.

சற்று உன்னிப்பாக கவனித்து பாருங்கள்.. ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறையை, மகிழ்ச்சியாக, அனுபவிக்க படைக்கப்பட்டவை.. பண்டிகை தினங்கள், ஒரே மாதிரியான வாழ்க்கையிலிருந்து விடுபட்டு உற்சாகமடைய உருவாக்கப்பட்டவை. ஆனால் இது ஆண்களுக்கு மட்டுமே..

நாம் குறிப்பிடும் இந்த தினங்களில்தான் பெண்களுக்கு வழக்கத்தை விடவும் அதிக நேரம் கிச்சனில், முடங்கிக்கிடக்க வழி ஏற்படுத்தி கொடுக்கிறோம். மற்ற நாட்களில் தோசைக்கு சட்னி மட்டுமே என்றால், விடுமுறை தினங்களில் அத்தோடு சேர்த்து, வடை, சாம்பார் என்று பல சுவை கேட்கிறது நமது நாவு.

தீபாவளியில் ஆண்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக இருப்பார்கள், பெண்கள் பலகாரம் சுட்டு அடுப்படியில் இருப்பார்கள். பொங்கல் 3 நாள் விழா என்றால் அவர்களுக்கு 3 நாளும் கூடுதல் வேலை என்று அர்த்தம். இப்படி எந்த ஒரு பண்டிகை அல்லது உற்சாக நாள் என்றாலும் அதை சமையலோடும்.. சமையலை பெண்களோடும் பழக்கப்படுத்தி வைத்திருக்கிறது நமது சமூகம்.

"ரசித்துதானே இதைச் செய்கிறார்கள் பெண்கள்.." என்று நீங்கள் கேட்கலாம்.. பல தலைமுறைகளாக பழக்கப்படுத்தி வைத்ததால் வேறு வழியில்லாமல் போலியாக ரசிக்க கற்றுக் கொண்டு விட்டனர் என்பது தான் எதார்த்தம். "உன்னோட கைப்பக்குவம் மாதிரி யாருக்கும் வராது.." என்பது போன்ற வார்த்தைகள் பெண்களை அடுப்பங்கறையில் கட்டி வைக்க ஆண்கள் பயன்படுத்தும் மாயக்கயிறுதானே!

"சமையலறை பெண்களுக்கு மட்டுமே" என்ற கற்பிதத்தை உடைப்பதுதான் இந்த கட்டுடைப்பை சாத்தியப்படுத்தும் என்கிறார்கள் சமூகவியல் நிபுணர்கள். ஆண்களும் சமையலறையில் பாதி வேலையை பகிர்ந்து கொள்ளும்போது அது பெண்களின் பழுவை குறைக்கும், ஆண்களும் அந்த வேலையின் கஷ்டம் புரிந்து மாற்று வழியை யோசிக்க தொடங்குவார்கள். சொல்லப்போனால் காலப்போக்கில் வீட்டில் சமையலறை என்ற ஒன்று இல்லாமல் போகவும் வழியேற்படக்கூடும்.

இந்த "கட்டுடைப்பு" போன தலைமுறை வரை யோசித்துப் பார்க்க முடியாதது. ஆனால் இந்த தலைமுறை அப்படியில்லை. பெண்களும் வேலைக்குச் செல்ல ஆரம்பித்ததிலிருந்து இந்த மாற்றம் உருவாகி விட்டது. இப்போது 40 வயதுக்கு மேலே உள்ள எந்த ஆண்களாவது வீட்டு வேலையை மனைவியோடு சேர்ந்து செய்து பார்த்திருக்கிறீர்களா? ஆனால் இப்போது வளரும் இளம் தலைமுறையினர் தனது சகோதரியுடன் வீட்டு வேலையைப் பகிர்ந்து கொள்ள பழக்கப்படுத்தப்படுகிறார்கள். இந்த தலைமுறையினருக்கு திருமணம் ஆகும்போது தங்களது வாழ்க்கைத் துணையிடம், "இது பெண்களுக்கான வேலை" என்று சொல்வதற்கு நாக்கு எழாது.

நகர்ப்புற பகுதிகளில் இந்த மாற்றம் வேகமாக நடந்து வருகிறது. கிராமங்களில் கோவில் திருவிழாவிற்கு செல்லும் போது அங்கும் வீடுகளில், பெண்கள் சமையல் செய்து கொண்டிருந்த காலம் மாறிவிட்டது. மூன்று நாட்கள் திருவிழா என்றால் மொத்தமாக சமையல் செய்து, தினமும் 3 வேளைகளிலும் கோவில் அருகே பந்தி பரிமாறப்படுவதை பார்க்க முடிகிறது. திருவிழா நடைபெறும் 3 நாட்களில் பெண்கள் முழு விடுதலையடைவதை அவர்கள் முகத்தை பார்த்தே புரிந்து கொள்ள முடியும்.

இந்த மறுமலர்ச்சியை வாழ்க்கை முழுக்க பார்க்க வேண்டும் என்று ஆண்கள் நினைக்க வேண்டாமா? நமது சக பாலினத்தை சேர்ந்த ஒரு ஜீவன் சமையலறைக்குள் முடக்கப்பட்டு அதுவே அவர்களது வாழ்க்கை என்று முடிவு கட்டிவிட்டது நவீன தீண்டாமை என்று உணர வேண்டாமா?

இப்போதுள்ள தலைமுறையின் மனதில் இந்த கேள்விகள் எழ ஆரம்பித்துள்ளன. எனவேதான், சமயலறையிலிருந்து பெண்களை விடுதலை செய்யவேண்டும் என்ற வாதங்களும் அதிகரித்துவிட்டன. சமையலறையிலிருந்து பெண்களை விடுவிக்க இப்போது உள்ள ஒரே ஆப்ஷன், ரெஸ்டாரண்ட் செல்வதோ, அல்லது ஸ்விகி போன்ற ஆன்லைன் தளங்கள் மூலமாக உணவை வீட்டுக்கே வர வைத்து சாப்பிடுவதோதான். ஆனால் தினமும் இதைச் செய்ய முடியுமா? உணவக விலையை ஒப்பிட்டால் வீட்டில் குறைவான செலவில் அதிக உணவு சாப்பிட முடியும் என்ற இந்திய மனநிலையும், யதார்த்தமும் வந்து எட்டிப் பார்க்குமே..? இங்குதான் வருகிறது கம்யூனிட்டி கிச்சன்.

குறைந்தபட்சம் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து இதை ஆரம்பிக்கலாம். அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் ஒரே இடத்தில் சமையல்காரர்கள் வைத்து சமைக்கலாம். ஒரு நாளைக்கு 500 ரூபாய் செலவில் நான்கு பேர் கொண்ட குடும்பம் 3 நேரம் சாப்பிட முடியும் என்ற நிலை உருவானால், வீடுகளில் கிச்சன் இருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விடுமே என்கிறார்கள் உணவுத் துறை சார்ந்த நிபுணர்கள்.

இதே நடைமுறையை, பிறகு ஒரு ஏரியா முழுக்க விரிவாக்கம் செய்யலாம். பிறகு அதை ஊர் முழுக்க விரிவாக்கம் செய்ய முடியும். இப்படித்தான் பெண்களுக்கு சுதந்திரக் காற்றை சுவாசிக்க வழி ஏற்படுத்திக் கொடுக்க முடியும். தினந்தோறும் ஒவ்வொரு வீட்டிலும் மனித உழைப்பு பல மணி நேரம் வீணாவதை தவிர்க்க முடியும்.

சேலத்தில் உள்ள குகை என்ற பகுதியில் கிட்டத்தட்ட இந்த ஐடியா செயல்படுகிறது. கொலுசு உள்ளிட்ட வெள்ளி ஆபரணங்கள் செய்யும் தொழில்கள் அந்த பகுதியில் பிரபலம். எனவே அங்கே பணியாற்றும் தொழிலாளர்கள் சமையல் செய்து அதை கொண்டு வருவதற்கான நேரம் கிடைப்பதில்லை. சோறு பொங்கி எடுத்து வந்து விட்டால் போதும், வகைவகையான குழம்புகளை விற்பனை செய்வதற்கு சுமார் 400க்கும் மேற்பட்ட கடைகள் அங்கே இருக்கின்றன. குழம்பை வாங்கி சாப்பாட்டுடன் கலந்து சாப்பிட்டுக் கொள்ளலாம். இதனால் ஏகப்பட்ட நேரம் மிச்சம் ஆகிறது என்கிறார்கள் அந்த பகுதி மக்களும், தொழிலாளர்களும்.

பெண்கள்தான் குழம்பு வைக்க வேண்டும் என்ற வாதம் அங்கே அடிபட்டு போவதற்கு காரணம், அதற்கான தேவை எழுந்துள்ளது என்பது தான். தேவை ஏற்படும் போது பெண்களுக்கு விடுதலை தரும் ஆண்கள், அவர்களின் மனது மற்றும் உடல் ஆரோக்கியத்தையும் மனதில் வைத்து கம்யூனிட்டி கிச்சன் கலாச்சாரத்துக்கு மாற வேண்டியது காலத்தின் கட்டாயம்.

ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் பெண்கள் மூன்று வேளைகளிலும் வீட்டில் சமையல் செய்து கொண்டு இருப்பது கிடையாது தெற்காசிய நாடுகள் பலவற்றிலும் இந்த கலாசாரம் வந்துவிட்டது ஆனால் நமது நாட்டில் தான் உணவு தயாரிப்பதை பெண்களோடு தொடர்புபடுத்தி மனரீதியாக அடிமைப்பட்டு கிடக்கிறோம்.

நூடுல்ஸ் போன்ற உணவு வகைகளின் சமையல் நேரத்தை கணிசமாக குறைக்கின்றன. ஆனால் அது ஆரோக்கியமற்றது என்று நமக்கு நாமே குற்றம் சொல்லிக் கொண்டு பழையபடி அரிசி சோறு தான் வேண்டும் என்று அடம் பிடிக்கிறோம். கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள அரசி சோறு, நமது முன்னோர்களுக்கு அவசியம். அதற்கான உடல் உழைப்பு அவர்களிடமிருந்தது. வயலில் வேலை செய்வோருக்கு சக்தி இழப்பை ஈடு செய்ய அவை பயன்பட்டன. கம்ப்யூட்டரில் வேலை பார்க்கும் நாம் நமது உணவு கலாச்சாரத்தை மாற்றிக் கொள்ள வேண்டாமா? பெண் விடுதலை என்பதற்காக மட்டுமல்ல, நமது ஆரோக்கியத்திற்கும் அதுதான் நல்லது.

வெளிநாடுகளில் மிகப்பெரிய விருந்து நிகழ்ச்சிகளில் கூட பர்கர், ரொட்டி, அதனுடன் இறைச்சி துண்டுகள், கூல்டிரிங்ஸ் என விருந்து நிறைவு பெறுகிறது. ஆனால் நமது நாட்டில் ஒரு திருமண வீட்டில் கூட 30 வகை பதார்த்தங்கள் வைக்கப்பட்டது என்பது பந்தாவாக பேசப்படுகிறது. உணவுக்கும் கவுரவத்திற்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்தி, அந்த கயிற்றை பெண்களின் கால்களிலும் நைசாக கட்டி வைத்துள்ளோமே. குறைந்தபட்சம் வட இந்தியர்கள் போல ரொட்டி துண்டுகளை மட்டும் சுவைக்கவாவது நாம் கற்றுக்கொள்ள வேண்டும். இட்லிக்கு நாலு வகை சட்னி, சோற்றில் 7 வகை என கார்போஹைட்ரேட் பின்னால் ஓடி வாழ்க்கையை வீணாக்குவதை நிறுத்த வேண்டும்.

உதாரணத்திற்கு, ஒரு பிளேட் சோற்றை விட, அல்லது 4 சப்பாத்தியை விட, ஒரு பிளேட் மேகி நூடுல்ஸ் பாதி அளவு கார்போஹைட்ரேட்தான் கொண்டுள்ளது. ஆனால் நாம் சோறுதான் ஆரோக்கியம் எனச் சொல்வோம். சப்பாத்திக்கு வாரம் ஒரு வகை, கிரேவி கேட்டு சமைக்கச் சொல்லி சாப்பிடுவோம்.

கம்யூனிட்டி கிச்சன்கள், குழம்பு கடைகள் போன்றவை, சமையலறையிலிருந்து முழுமையாக பெண்களை மீட்டெடுக்குமா என்றால், அங்கும் சில சவால்களை நாம் எதிர்கொள்ள தேவையுள்ளது. ஹோட்டல்களில் தினமும் நமது மக்கள் சாப்பிடாமல், மனைவி கையால் சமைத்து சாப்பிட காரணம், அவற்றின் தரம் குறித்த சந்தேகம் தான். இதை முதலில் உடைத்தெறிய வேண்டும். பொது இடங்களில் சமையல் என்று ஒரு காலகட்டம் வரும் போது அங்கு முழுக்க முழுக்க தரம் பராமரிக்கப்படுகிறதா என்பதை அரசு மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்கள் கண்டிப்பாக உறுதி செய்ய வேண்டும்.

வளர்ந்த நாடுகளில் ரெஸ்டாரண்டில் அடிக்கடி சாப்பிடுவது வாடிக்கையாக இருக்கிறது. அவர்களுக்கு வயிற்று வலி வருவதில்லை. ஆரோக்கியமாக இருக்கிறார்கள். ஆனால் நம்ம ஊரில் ஒரு வருடம் சேர்ந்தாற்போல ஹோட்டல்களில் சாப்பிட்டால் அத்தனை உடல்நல பிரச்சனைகளும் ஏற்படுகிறது. இங்கு தான் தரம் முக்கிய பங்காற்றுகிறது.

சமையலறை பெண்களுக்கு மட்டுமே ஆனது என்ற ஒரு பொது புத்தியை உடைத்து எறிய வேண்டிய தேவை அடுத்த சவாலாக இருக்கிறது. "இந்த சவாலில் கிட்டத்தட்ட பாதி கிணறை நாம் தாண்டி விட்டோம் என்பதால் பெரிதாக அலட்டிக்கொள்ள தேவை கிடையாது" என்கிறார்கள் நாம், தொடர்பு கொண்டு பேசிய, பெண்கள் அமைப்பைச் சேர்ந்த சிலர்.

"தி கிரேட் இந்தியன் கிச்சன்" போன்ற திரைப்படங்கள், அப்படியே, ஆண்கள் முகத்தில் அறைந்து உண்மைகளை பேச ஆரம்பித்துள்ளன. பொது வெளியில், இப்போதுதான் நாம் இதைப் பற்றி பேசவே ஆரம்பித்துள்ளோம். கட்டுடைப்புக்கான, மனத் தடையை நொறுக்குவதற்கான நல்ல அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளன.

இதுவரை இல்லாத வகையில், குடும்ப உறவுகளில் இந்த இந்திய தலைமுறை பல்வேறு மாற்றங்களை பார்த்து வருகிறது. தனிக்குடித்தனம் சாதாரணமாகிவிட்டது, பெண்களும் வேலைக்கு போவது அடிப்படை தேவையாகிவிட்டது, பெண் பிள்ளைகளுக்கு என்று தனி வேலை கொடுக்காமல் ஆண் குழந்தைகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. எனவே, அடுத்த தலைமுறை, சமூக கிச்சன் நோக்கி செல்லும் சமுதாயமாக உருவாவதற்கான வாய்ப்புகள் மறுப்பதற்கு இல்லை என்று உறுதியாகச் சொல்கிறார்கள் அவர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+