For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்னும் 4 மாதங்கள்தான்.. தமிழகத்திற்கே "வழி பிறக்கப் போகிறது." சமத்துவ பொங்கல் விழாவில் ஸ்டாலின் உரை

Google Oneindia Tamil News

சென்னை: "தை பிறந்தால் வழி பிறக்கும்; இன்னும் நான்கு மாதங்களில் வழி பிறக்கப் போகிறது" என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று (09-01-2021) மாலை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற 'சமத்துவப் பொங்கல் விழா' நிகழ்ச்சிகளில் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினார்.

ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சிகளின் விவரம் வருமாறு:

அகரம் - ஜெயின் பள்ளியில் கொளத்தூர் கிழக்குப் பகுதி கழக நிர்வாகிகள், செயல் வீரர்கள் மற்றும் கழக தோழர்கள் என 750 பேருக்குப் பொங்கல் பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

In just four months the way is going to be born for us, says DMK President MK Stalin

ஜி.கே.எம். காலனி 27-வது தெருவில் சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மாநகராட்சி மூலதன நிதி ரூ. 1 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் பழைய கட்டடம் இடித்து புதிய கட்டடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டி 11 ஆசிரியர்களுக்குச் சிறப்புச் செய்தார்.

ஜம்புலிங்கம் மெயின் ரோட்டில், கொளத்தூர் மேற்கு பகுதி கழக நிர்வாகிகள், செயல் வீரர்கள் மற்றும் கழக தோழர்கள் என 750 பேருக்குப் பொங்கல் பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

கொளத்தூர் தொகுதியில் மொத்தம் 1600 பேருக்கு தலா வேட்டி - 1, சட்டை - 1, புடவை - 1, அரிசி - 1 கிலோ, வெல்லம் - 1 கிலோ, நெய் - 50 கிராம், சிறு பருப்பு - 250 கிராம், முந்திரி - 50 கிராம், திராட்சை - 20 கிராம், ஏலக்காய் - 10 கிராம், கரும்பு - 1 அடங்கிய பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.

ஸ்டாலின் ஆற்றிய உரைத் தொகுப்பு:

வரும் தமிழர் திருநாளையொட்டி, நடைபெறும் இந்தச் சிறப்பான விழாவில் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துச் சொல்லக் கூடிய வாய்ப்பைப் பெற்றமைக்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். வரும் 14ஆம் தேதி தமிழர் திருநாள், பொங்கல் திருநாள். ஆனால் தமிழ்நாட்டிற்கு நான் பொங்கல் திருநாள் வாழ்த்துச் சொல்வதற்கு முன்பாகவே, கொளத்தூர் தொகுதியில் இருக்கும் உங்களுக்கு வாழ்த்துச் சொல்ல வந்திருக்கிறேன்.

இந்தத் தொகுதியைச் சேர்ந்த நீங்கள், தொடர்ந்து 2-ஆவது முறையாகச் சட்டமன்ற உறுப்பினராக என்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்று, அந்தப் பொறுப்புக்களையும் நிறைவேற்றி, இந்தத் தொகுதி மக்கள் பிரச்சினைகளையும் என்னுடைய கவனத்தில் கொண்டு தொண்டாற்றுவதில், பணியாற்றுவதில், உங்களுக்குத் துணை நிற்பதில் நான் அளவு கடந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் இடிக்கப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது... திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் இடிக்கப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது... திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்

தைத்திருநாள், அதுதான் தமிழர்களுடைய திருநாள். தமிழ்ப் புத்தாண்டாகப் பிறக்கின்ற நாள். எனவே, தலைவர் கலைஞர் அவர்கள், தை முதல்நாளைத் தமிழர் திருநாளாக, தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடிட வேண்டும் என்று நமக்கு ஆணையிட்டு, அந்த ஆணையை அரசு ஆணையாக வெளியிட்டு, அதை நாம் எழுச்சியோடு, ஏற்றத்தோடு கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

"தை பிறந்தால் வழி பிறக்கும்", தை பிறக்கப்போகிறது, விரைவில் வழியும் பிறக்கப்போகிறது. தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே இருக்கின்றன. இந்த நான்கு மாதங்களில் நமக்கு வழி பிறக்கப்போகிறது என்பதற்கு எத்தனையோ உதாரணங்களை, எத்தனையோ சான்றுகளை நம்மால் எடுத்துச் சொல்ல முடியும்.

இந்தப் பொங்கல் விழாவைச் சமத்துவப் பொங்கல் விழாவாக நாம் கொண்டாடுகிறோம். மதங்களைக் கடந்து, சாதிகளைக் கடந்து, இனங்களைக் கடந்து, சாதி சமய வேறுபாடுகள் அற்ற நிலையில், அனைத்து மதத்தினரும் ஒருங்கிணைந்து கொண்டாடும் விழாவாக இது அமைய வேண்டும் என்பதற்காகத்தான், இதைச் சமத்துவப் பொங்கல் விழாவாகக் கொண்டாட வேண்டும் என்று தலைவர் கலைஞர் அவர்கள் நமக்கு ஏற்கனவே ஆணையிட்டு அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

அதனால்தான், எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும் ஒருங்கிணைந்து வாழ வேண்டும் என்பதற்காக தந்தை பெரியார் அவர்கள் பெயரில், இந்திய அளவில் மட்டுமல்ல, உலகில் எங்குமே இல்லாத வகையில் தமிழ்நாட்டில் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் சமத்துவபுரங்களை உருவாக்கினார்.
அதற்குக் காரணம்; சமத்துவத்தோடு வாழ வேண்டும், சாதிகளைக் கடந்து வாழ வேண்டும், நீ இன்ன சாதி, நான் இன்ன சாதி என்ற வேறுபாடு இருக்கக் கூடாது என்பதற்காகத்தான்.

உங்களுக்குத் தெரியும், அத்தி மரத்திற்கு ஒரு சிறப்பு உண்டு. அது என்னவென்றால், அத்தி மரத்தின் எல்லாப் பகுதிகளிலும் காய்கள் காய்க்கும். வேரிலே, கிளைகளிலே, இலைகளிலே கூட அத்திக்காய் காய்க்கும். கிளையிலே காய்ப்பதால் அதை கத்தரிக்காய் என்று கூறிவிட முடியாது. எந்த இடத்தில் காய் காய்த்தாலும் அது அத்திக்காய்தான். அதைக் கத்தரிக்காய், முருங்கைக்காய் என்று வேறுபடுத்திப் பேச மாட்டோம்.

அது போலத்தான் நாம் அனைவரும் மனிதர்கள். எந்த சாதியில், எந்த இடத்தில் பிறந்திருந்தாலும், நாம் மனிதர்கள், நாம் தமிழர்கள்.
இன்னும் கூட ஒரு உதாரணம் சொல்லவேண்டும் என்று சொன்னால், சதிக்குக் கால் முளைத்து சாதியாக மாறியது. 'சதி'க்கு இடையில் கால் போட்டால் சாதி. அந்த சாதியில் 'தி'க்கு கொம்பு போட்டால் அது தீயாகப் பரவியது.

அந்த உதாரணத்தைத் தலைவர் கலைஞர் அவர்கள் பலமுறை குறிப்பிட்டுக் காட்டி இருக்கிறார்கள். இதை உணர்ந்து, உள்ளத்தில் ஏந்தி, எந்த உணர்வோடு தமிழர் திருநாளாக இந்தச் சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறோமோ, அந்த உணர்வோடு நம்முடைய வாழ்க்கையை நடத்துவோம், இந்தச் சமுதாயத்திற்குப் பணியாற்றுவோம், இந்த நாட்டு மக்களுக்குத் தொண்டாற்றுவோம்.

தை பிறந்தால் வழி பிறக்கும், வழி பிறக்கப்போகிறது. முன்கூட்டியே உங்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து, என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன். நன்றி.வணக்கம்.

இன்னும் 4 மாதங்களில் வரப்போகும் தேர்தலால் ஏற்படப்போகும் ஆட்சி மாற்றத்தை, அரசியல் கட்சியில் இருக்கக்கூடிய நான் எதிர்பார்ப்பதை விட, இங்கு இருக்கும் நீங்கள் எதிர்பார்ப்பதை விட, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் ஆவலோடு எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள். அது நிச்சயமாக நடக்கப்போகிறது. அந்த வழி பிறப்பதற்கு நீங்கள் வழிவகை செய்திட வேண்டும். வழிவகை செய்திட வேண்டும் என்று சொன்னால், நம்முடைய கடமையை, நம்முடைய பணியை, நம்முடைய உழைப்பை, நம்முடைய ஆற்றலை, நாம் ஆற்ற வேண்டிய செயல்பாட்டை, கவனத்தோடு மிகச் சிறப்பான வகையில் ஆற்றிட வேண்டும்.

In just four months the way is going to be born for us, says DMK President MK Stalin

ஆற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிறைய இருக்கிறது. அந்தப் பணியை நீங்கள் நிறைவேற்றினால் தான் தமிழ்நாட்டிற்கு ஒரு விமோசனம் கிடைக்கும்.

இந்தப் பொங்கல் விழாவைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், இந்த கொளத்தூர் தொகுதியில் மட்டுமல்ல, தமிழகத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொரு தொகுதிகளிலும், நமது கழகத் தோழர்களுக்கு மட்டுமல்ல, பொதுமக்களுக்கும் பயன்படக்கூடிய வகையில் நலத்திட்ட உதவிகளை நாம் தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கிறோம்.

ஏதோ, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ் விழாக்கள் வரும் நேரத்தில் மட்டுமின்றி, மக்களுக்கு இன்னல்கள், இயற்கைப் பேரிடர்கள் ஏற்படுகிற போதும், மழை வரும் போதும், புயல் வரும் போதும் மக்களுக்குத் துணை நின்று நலத்திட்ட உதவிகளை நாம் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம்.
10 ஆண்டு காலமாக நாம் ஆட்சியில் இல்லை. ஆட்சியில் இல்லாத நேரத்திலும் நாம் செய்த உதவிகளை நாட்டில் எந்த கட்சியும் செய்யவில்லை.
கொரோனா காலத்தில், உலகத்தில் யாரும் செய்ய முடியாததை "ஒன்றிணைவோம் வா" என்ற திட்டத்தின் மூலமாக நாம் செய்து காட்டி இருக்கிறோம்.

கொரோனா காலம், மிகக் கொடுமையான காலம். மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக் கொண்டிருந்தார்கள். பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுவிட்டன. தொழிற்சாலைகள் இயங்கவில்லை. மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. எனவே, அரசாங்கம் உடனடியாக முன்வந்து, அவர்களுக்கு வேண்டிய வசதிகளை, நிவாரண உதவிகளைச் செய்திட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் எடுத்துச் சொல்லி வந்தேன்.
ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், உடனடியாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5000 ரூபாய் வழங்கிட வேண்டும் என்று நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால் அவர்கள் வழங்கவில்லை.

ஏதோ பெயருக்காக 1000 ரூபாய் கொடுத்தார்கள். இப்பொழுது 10 மாதம் கழித்து, தேர்தல் வருகிற காரணத்தினால், திடீரென்று 2500 ரூபாய் அறிவித்திருக்கிறார்கள், கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அது தவறு என்று நான் சொல்லவில்லை. அதை நாங்கள் கொடுக்கக் கூடாது என்று சொல்லவில்லை என்பதை நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால், நான் சொன்னது 5000 ரூபாய். கடந்த முறை கொடுத்த 1000 ரூபாயை விட்டுவிடுங்கள். அது கொடுத்து 10 மாதம் ஆகிவிட்டது.

இப்பொழுது 2500 ரூபாய் தருகிறார்கள். அதனுடன் இன்னும் 2500 கொடுத்து விடுங்கள் என்று தான் நான் சொல்கிறேன். அந்த 2500 ரூபாயை எப்படி வழங்க வேண்டும் என்றால், ரேஷன் கடைகளில் சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் ஊழியர்கள் மூலமாகத் தான் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெளிவாக உத்தரவு போட்டிருக்கிறது. ஆனால், அவர்கள் அதை அரசியல் லாபத்திற்காக, விரைவில் தேர்தல் வரும் காரணத்தினால், ஆங்காங்கே பேனர்கள் வைத்து, ஆளும் கட்சிக்காரர்கள் தங்களது சொந்தப் பணத்தைச் செலவு செய்வது போல நேரடியாகச் சென்று கொடுக்கிறார்கள்.

அதைக் கூட நாம் நீதிமன்றத்திற்குச் சென்று முறையிட்டோம். அதற்கு, பேனர்கள் வைக்கக்கூடாது, ஆளுங்கட்சியினர் இதில் தலையிடக் கூடாது, முறையாக ரேஷன் கடைகளில் வைத்து அதற்கென்று இருக்கும் ஊழியர்கள் மூலமாகத்தான் கொடுக்க வேண்டும் என்று தெளிவாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மக்களுக்குக் கொடுக்கும் அந்த நலத்திட்ட உதவிகளைக் கூட ஆளுங்கட்சியினர் அரசியலுக்குப் பயன்படுத்தக்கூடிய நிலையில் தான் இன்றைக்கு அவர்கள் இருக்கிறார்கள்.

இந்த உண்மைகளை எல்லாம் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஆனால், இது அரசியல் நோக்கத்தோடு நடத்துகிற விழா அல்ல; குடும்பப் பாச உணர்வோடு நாம் நடத்தும் விழா என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் அனைவருக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துகளை முன்கூட்டியே தெரிவித்து விடை பெறுகிறேன். மகிழ்ச்சி. இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.

English summary
There are only 4 months left until the election. In these four months the way is going to be born for us, says MK Stalin.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X