ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழக அரசியலில் அதிகம் பேசப்பட்ட விஷயங்களில் ஒன்றாக திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்க முயற்சி நடைபெற்றதாக கூறப்படும் தகவல் மாறியுள்ளது. தேர்தலில் மக்கள் இரு பெரிய திராவிட கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி, விஜய் தலைமையிலான தவெகவை தனிப்பெரும் கட்சியாக தேர்வு செய்த நிலையில், ஆட்சி அமைக்கும் கணக்கில் நடந்ததாக கூறப்படும் அரசியல் நகர்வுகள் தற்போது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன.

தேர்தல் முடிவுகள் வெளியானபோது தவெக அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், தனிப்பெரும்பான்மை எண்ணிக்கையை எட்டாத சூழல் நிலவியது. இதனால் அடுத்த ஆட்சியை யார் அமைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் நிலவியது.

DMK AIADMK

அந்த நேரத்தில்தான் திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்க முயற்சி நடந்ததாக பல்வேறு தரப்பினரும் பின்னர் கருத்து தெரிவிக்கத் தொடங்கினர். இந்த விவகாரத்தை முதன்முதலில் வெளிப்படையாக பேச ஆரம்பித்தவர்களில் ஒருவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி.

திமுக அதிமுக கூட்டணி

ஒரு தொலைக்காட்சி பேட்டியில் பேசிய அவர், அதிமுக தலைமையிலான ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிக்கும் யோசனை திமுக தரப்பில் முன்வைக்கப்பட்டதாக கூறினார். ஆனால் அந்த யோசனையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கவில்லை என்றும், மக்கள் தேர்தலில் நிராகரித்த அணிகளை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவது சரியான அரசியல் அணுகுமுறை அல்ல என்றும் அவர் தெரிவித்தார். தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெகவை ஆட்சி அமைக்க அனுமதிக்க வேண்டும் என்பதே தங்களது நிலைப்பாடு என்றும் கூறினார்.

திமுக

இதையே தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகமும் சில முக்கிய தகவல்களை பகிர்ந்தார். மக்கள் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு அணிகளையும் நிராகரித்துவிட்டனர். அந்த நிலையில் இரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைப்பது மக்கள் தீர்ப்புக்கு எதிரானதாக இருக்கும் என்பதால் அதனை ஏற்கவில்லை என்று அவர் தெரிவித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியனும் இதேபோன்ற கருத்தை முன்வைத்தார். அரசியல் சூழ்நிலையை பயன்படுத்தி மாற்று ஆட்சி அமைக்கும் முயற்சிகள் நடந்தபோது, அதனை தவறான அரசியல் அணுகுமுறை என்று தாங்கள் நேரடியாக தெரிவித்ததாக கூறினார்.

காதர் மொகிதீன்

இந்த விவகாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன். அதிமுகவும் திமுகவும் இணைந்து ஆட்சி அமைப்பது குறித்து தன்னிடம் பேசப்பட்டதாக அவர் தெரிவித்தார். ஆனால் அதற்கு மேல் விவரங்களை அவர் வெளியிடவில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். முதலில் திமுக எதிர்க்கட்சியாக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டதாகவும், பின்னர் வேறு அரசியல் கணக்குகள் முன்வைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சி.வி. சண்முகம்

ஆனால் அந்த யோசனை நடைமுறையில் சாத்தியமில்லை என்று கூறி தாங்கள் ஏற்கவில்லை என்றும் தெரிவித்தார். இதற்கிடையே அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் மூத்த தலைவர் சி.வி. சண்முகம் இந்த விவகாரத்தை இன்னும் விரிவாக பேசியிருந்தார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசனைகள் நடந்ததாகவும், அதுகுறித்து எடப்பாடி பழனிசாமி நேரடியாக பேசியதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

திருமாவளவன்

அதுமட்டுமல்லாமல், திருமாவளவனை முதலமைச்சராக்கும் யோசனையும் ஒரு கட்டத்தில் முன்வைக்கப்பட்டதாக அவர் கூறியது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுத்துள்ளார். அதிமுக உருவானதே திமுக எதிர்ப்பின் அடிப்படையில் தான் என்றும், திமுகவுடன் எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆர்.எஸ். பாரதி

அதேபோல் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியும் இந்த தகவல்களை மறுத்துள்ளார். தேர்தல் முடிவுகள் வந்த உடனேயே திமுக ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படும் என்று தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துவிட்டார் என்றும், தற்போது பரவி வரும் தகவல்களுக்கு எந்த அடிப்படையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்த விவகாரத்தில் பல கேள்விகள் இன்னும் பதிலின்றி உள்ளன. திமுக கூட்டணியில் இருந்த கட்சித் தலைவர்கள் பலரும் ஒரே மாதிரியான தகவல்களை கூறுகின்றனர்.

ஈபிஎஸ்

மறுபுறம் திமுக மற்றும் அதிமுக தலைமை அதை முழுமையாக மறுக்கின்றன. இதனால் உண்மையில் என்ன நடந்தது என்ற கேள்வி அரசியல் களத்தில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. தமிழக அரசியலில் கூட்டணிகள் மாறுவது புதிதல்ல. கடந்த காலங்களில் கடுமையாக எதிர்த்த கட்சிகள் பின்னர் கூட்டணி அமைத்த நிகழ்வுகள் இந்திய அரசியலில் பலமுறை நடந்துள்ளன. எனினும், திமுகவும் அதிமுகவும் இணையும் சாத்தியம் குறித்து வெளியாகிய தகவல்கள் சாதாரண அரசியல் செய்தியை தாண்டி மக்களிடையே ஆச்சரியத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

ஸ்டாலின்

இதனால், தேர்தலுக்குப் பிந்தைய அந்த சில நாட்களில் உண்மையில் என்ன நடந்தது? யார் யாருடன் பேசினர்? எந்த யோசனைகள் பரிசீலிக்கப்பட்டன? என்பதற்கான தெளிவான பதிலை ஸ்டாலின் உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்களே வழங்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. அதுவரை, திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் முயற்சி நடந்ததா என்ற கேள்வி தமிழக அரசியலின் மிகப்பெரிய மர்மங்களில் ஒன்றாகவே நீடிக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+