பார்ட்டிக்கு சென்ற இடத்தில் கிணற்றில் பிணமாகக் கிடந்த நடிகை ஜியா கானின் மாஜி ஸ்டைலிஸ்ட்

தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகை ஜியா கானின் முன்னாள் ஸ்டைலிஸ்ட் அனில் செரியன்(43). அவரது மனைவி ஷிவானி. அவர்கள் மும்பை ஜுஹு தாரா ரோட்டில் வசித்து வருகின்றனர். அனில் போல்ட் பாலிவுட் என்ற படத்தில் ஸ்டைலிஸ்டாக பணியாற்றி வந்தார்.
அனிலிடம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்த மினால் குப்தா(19) கோராய் கிராமத்தில் உள்ள ரிசார்ட்டில் நடந்த தனது உறவினர் ஐஸ்வர்யாவின் பிறந்தநாள் பார்ட்டிக்கு கடந்த சனிக்கிழமை சென்றார். அப்போது அவருக்கு போன் செய்த அனில் தானும் அந்த பார்ட்டியில் கலந்து கொள்ளலாமா என்று கேட்டார், மினால் ஓகே சொல்ல அவரும் ரிசார்ட்டுக்கு சென்றார்.
செல்லும் வழியில் தான் எங்கே போகிறேன் என்பதை தனது மனைவிக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவித்தார் அனில். ரிசார்ட்டில் அனில் மது அருந்தியுள்ளார். அதிகாலை 3.30 மணிக்கு அவர் செல்போனுடன் அறையில் இருந்து வெளியே சென்றுள்ளார். வெகுநேரமாகியும் அவர் திரும்பி வராததால் அவர் வீட்டுக்கு சென்றுவிட்டார் என்று மற்றவர்கள் நினைத்தனர்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு மினால், ஐஸ்வர்யா மற்றும் பார்ட்டியில் கலந்து கொண்ட 8 ஆண்கள் ரிசார்ட்டை விட்டு கிளம்பினர். இதையடுத்து அன்று மாலை 4 மணிக்கு ஷிவானி மினாலுக்கு போன் செய்து அனில் எங்கே என்று கேட்டுள்ளார். தனக்கு தெரியாது என்று மினால் கூறியவுடன் ஷிவானி கோராய் சென்று போலீசில் புகார் கொடுத்தார்.
இதற்கிடையே ரிசார்ட்டில் இருக்கும் கிணற்றில் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் கடந்த திங்கட்கிழமை தண்ணீர் எடுக்க சென்றபோது அங்கு அனில் பிணமாகக் கிடந்ததைப் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அனிலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் குடிபோதையில் அதிகாலையில் கிளம்பியபோது அவரை ஒருவர் கூட தடுக்கவில்லை. பார்ட்டி நடந்த இடத்தில் இருந்து 50 அடி தூரத்தில் உள்ள கிணற்றில் அவர் விழுந்த சத்தம் அங்கிருந்தவர்களுக்கு எப்படி கேட்கவில்லை என்று போலீசார் விசாரணை நடத்தினர்.
அனிலின் உடலில் வலது கையில் 3 அடி நீள கயிறு இருந்தது. கிணற்றில் ஏற்கனவே அந்த கயிறு கிடந்திருக்க வேண்டும் என்றும், அனில் தண்ணீரில் தத்தளித்தபோது அது அவரது கையில் சிக்கியிருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications